தமிழீழம்

டெங்கு ஒழிப்பில் ஈடுபட்ட மக்களை கண்மூடித்தனமாகத் தாக்கிய சிறிலங்கா கடற்படை.

டெங்குக் கட்டுப்பாட்டு வாரத்தை முன்னிட்டு, கீரிமலை, சேந்தாங்குளத்தில் சிறிலங்கா கடற்படையினரின் அனுமதி பெறப்பட்டு எரியூட்டப்பட்ட குப்பை மற்றும் பற்றைகளை அணைக்குமாறு கூறி பொது மக்கள் மீது கடற்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாகக் கேள்வியுற்று சம்பவ இடத்துக்கு நேரடியாகச் சென்ற வலி.வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் சோ.சுகிர்தனும் சிறிலங்கா கடற்படையினரின் தாக்குதலுக்கு இலக்காகி உள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:
தெல்லிப்பழை சுகாதார வைத்திய பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் டெங்குக் கட்டுப்பாட்டு வாரத்தை முன்னிட்டு சுத்திகரிப்பு மற்றும் சிரமதானப் பணிகள் இடம்பெற்று வருகின்றன. அதனடிப்படையில் கீரிமலை, சேந்தாங்குளம் பகுதியிலுள்ள பற்றைகள் மற்றும் குப்பைகளை எரியூட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது.
இவற்றை எரியூட்டுவதற்கான அனுமதியும் கீரிமலை சிறிலங்கா கடற்படை முகாம் பொறுப்பதிகாரியால் வழங்கப்பட்டிருந்தது. அதையடுத்து நேற்று மாலை 6 மணியளவில் குறித்த பற்றைகள் மற்றும் குப்பைகள் என்பன எரியூட்டப்பட்டன.
பற்றைகள் எரியத் தொடங்கியதும், அருகில் காவல் கடமைகளில் நின்ற சிறிலங்கா கடற்படையினர் அந்தப் பகுதிக்கு விரைந்து வந்துள்ளனர். வந்தவர்கள் எந்தக் கேள்வியுமின்றி பொதுமக்கள் மீது கண்மூடித்தனமாகத் தாக்கத் தொடங்கியுள்ளனர்.
தாக்கியது மட்டுமன்றி குறித்த பொது மக்களைக் கொண்டே தண்ணீர் அள்ளி ஊற்றிப் பற்றையை அணைத்துள்ளனர். சிறிலங்கா கடற்படையினரின் மூர்க்கத்தனமான தாக்குதலில் 5 பேர் வரையில் காயங்களுக்கு இலக்காகினர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வலி.வடக்கு பிரதேச சபைத்தலைவர் சோ. சுகிர்தன் மற்றும் உறுப்பினர் சி.ஹரிகரன் ஆகிய இருவரும் மோட்டார் சைக்கிளில் அங்கு சென்றுள்ளனர். அங்கு சிறிலங்கா கடற்படையினரின் தாக்குதலுக்கு உள்ளான பொதுமக்களுடன் பிரதேசசபைத் தலைவர் உரையாற்றிக் கொண்டிருந்த சமயம், “பஜிரோவில்’ அந்த இடத்துக்கு சிவில் உடையில் வந்த சிறிலங்கா கடற்படையினர் மீண்டும் பொதுமக்களைத் தாக்கத்தொடங்கினர்.
அத்துடன் அங்கு நின்ற பிரதேசசபைத் தலைவர் மீதும் “பைப்’பினால் தாக்கியுள்ளனர். பிரதேச சபைத் தலைவர் என்று கூறி, அடையாள அட்டையை எடுத்துக் காண்பித்த பின்னரும் கூட சிறிலங்கா  கடற்படையினர் அவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். அங்கு நின்றவர்களின் 4 மோட்டார் சைக்கிள்களையும் சிறிலங்கா கடற்படையினர் எடுத்துச் சென்றுள்ளனர். இதனால் அந்தப் பகுதியில் நேற்றிரவு பெரும் பதற்றம் நிலவியது.
இதேவேளை, தான் தாக்கப்பட்டது குறித்தும் சிறிலங்கா கடற்படையினரால் மோட்டார் சைக்கிள்கள் பறிக்கப்பட்டமை தொடர்பிலும் இளவாலை சிறிலங்கா பொலிஸ் நிலையத்தில் பிரதேச சபைத் தலைவர் நேற்றிரவு முறைப்பாடு ஒன்றைப் பதிவு செய்துள்ளார்.