18 முடியுமென்றால் 13+ ஏன் முடியாது?, அரசே தனித்து நின்று நிறைவேற்றட்டும் என்கிறது ஐ.தே.க.

Home » homepage » 18 முடியுமென்றால் 13+ ஏன் முடியாது?, அரசே தனித்து நின்று நிறைவேற்றட்டும் என்கிறது ஐ.தே.க.

இனப்பிரச்சினைக்கான தீர்வாக சிறிலங்கா அரசு தற்போது கூறிவரும் 13 + திருத்தத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற சிறிலங்கா அரசுக்கு ஒத்துழைக்கப் போவதில்லை என்று ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. “எதிர்க் கட்சிகளின் ஆலோசனையைக் கேட்காமலேயே அரசமைப்பின் 18ஆவது திருத்தத்தை ஜனாதிபதி மஹிந்த தனது சுயநலத்துக்காக, பெரும்பான்மை பலத்தை வைத்து நிறைவேற்றிக் கொண்டது போன்றே இந்த 13 பிளஸையும் அரசே தனித்து நிறைவேற்றிக் கொள்ளட்டும்” என்று கட்சியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

18 முடியுமென்றால் 13+ ஏன் முடியாது?

“நாடாளுமன்றத்தில் உள்ள மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பயன்படுத்தி 18ஆவது திருத்ததைத் தேர்தல் முடிந்த மூன்றே வாரங்களில் நடைமுறைப்படுத்த முடியும் என்றால் 13 பிளஸையும் நடைமுறைப்படுத்த ஏன் எதிர்க் கட்சிகளின் ஒத்துழைப்பை அரசு கேட்கிறது? அப்படிப்பட்ட அரசின் போலியான நடவடிக்கைகளுக்கு நாம் ஏன் ஒத்துழைக்க வேண்டும்?” என்றும் கிரியெல்ல கேள்வி எழுப்பினார்.

தனக்கு இக்கட்டான நிலை வரும்போதே அரசு எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பை எதிர்பார்க்கின்றது என்று குற்றஞ்சாட்டிய அவர், 18 ஆவது “திருத்தத்தைக் கொண்டுவந்த போது எதிர்க்கட்சிகள் அரசின் கண்களுக்குத் தென்படவில்லையா?” என்றும் சீறினார்.

அதிகாரப் பகிர்வு மற்றும் 13 பிளஸ் என்பன குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது:

இந்தியாவுக்கு பொய் வாக்குறுதி

இறுதிப் போரின்போது இந்தியாவின் தலையீட்டைத் தவிர்க்கும் நோக்கில் இலங்கை அரசு வைத்த தடைக்கல்தான் இந்த 13 பிளஸ். அரசின் போலியான உறுதிமொழியை நம்பி ஏமாந்துள்ள இந்திய அரசு இப்போது தமிழ்நாட்டைப் பகைத்துக்கொள்ளவேண்டிய பரிதாபகரமான நிலையிலுள்ளது.

13 பிளஸ் தொடர்பில் தமிழ்நாட்டு அரசியல் பிரமுகர்கள் தொடுக்கும் கேள்விக்கணைகளால் திக்குமுக்காடுகிறது மத்திய அரசு. அன்று (1987) வடமராட்சி இராணுவ நடவடிக்கையில் இந்தியா தலையிட்டது போன்று இறுதிப் போரிலும் தலையிடுமென அஞ்சிய அரசு அதனைத் தடுக்கும் நோக்கில் இந்தியாவுக்குக் கொடுத்த கயிறே இந்த 13 பிளஸ்.

இதனை நம்பி இந்தியாவும் தமிழ்நாட்டு மக்களுக்கு வாக்குறுதியை அள்ளி வீசிவிட்டது. ஆனால், தற்போது நடைபெறுவது என்ன? இலங்கைக்கு வந்த கிருஷ்ணா எதைச் சாதித்தார்?

மாகாணசபைகளுக்கு அதிகாரப் பகிரச் சொல்லிக் கேட்டால் சம்மந்தா சம்மந்தமுமில்லாமல் செனட் சபையை அமைக்க மஹிந்த முயல்வது கேலிக்கூத்தான விடயம்.

அன்று செனட்டை எதிர்த்த மஹிந்த இன்று ஏன் கொண்டு வருகிறார்?

செனட் சபைக்கு எதிராக அன்று போர்க்கொடி தூக்கிய மஹிந்த ராஜபக்ஷ, இன்று அதனை மீண்டும் அமைக்க முயல்வது ஏன்? நாட்டு மக்கள் செனட்சபை அமைக்குமாறு அவரிடம் போய்க் கேட்டார்களா?

செனட் சபை, ஏகாதிபத்தியவாதிகளின் சபையென 70களில் விமர்சித்து அதனை இல்லாதொழிப்பதற்கு பக்கபலமாக இருந்தவர் ஜனாதிபதி. மீண்டும் செனட்சபை என்ற யோசனையை அவர் முன்வைத்துள்ளமை புரியாத புதிராகவே உள்ளது.

அரசு அதிகாரப் பரவலாக்கத்துக்கு ஒருபோதும் இணங்காது. காலத்தைக் கடத்தவேண்டும்; அதுதான் அரசின் தேவை. அதற்காகத்தான் அரசு முழு மூச்சாய் காரியம் பார்க்கிறது. என்றார்.

Comments Closed

%d bloggers like this: