நலன்புரி நிலையதிற்கு படைமுகாம் இடமாறவுள்ளதால் மீள்குடியமராத மக்கள் அவலம்.

Home » homepage » நலன்புரி நிலையதிற்கு படைமுகாம் இடமாறவுள்ளதால் மீள்குடியமராத மக்கள் அவலம்.

வரணிப் பகுதியில் உள்ள இராணுவ முகாமை கொடிகாமம், அல்லரை வடக்கு நலன்புரி நிலையம் இருக்கும் இடத்தில் அமைக்கப் போவதாக படையினர் கூறிய தகவலை அறிந்து அந்தப் பிரதேசத்தில் இதுவரை மீளக்குடியமர்வு செய்யப்படாத 45 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் நிர்க்கதியில் உள்ளனர்.

இராமாவில் நலன்புரி நிலையம் அமைக்கப்பட்டிருந்த பிரதேசத்தைச் சேர்ந்த 60 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் நிரந்தர காணி உறுதிகளையும் வைத்துக் கொண்டு மீளக்குடிய மர்வு செய்ய முடியாமல் ஏனைய பிரதேசங்களில் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக வாழ்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த வருட நடுப்பகுதியில் நலன்புரி நிலையம் மூடப்பட்டதை அடுத்து பிரதேசத்தைச் சேர்ந்த குடும்பங்கள் தம்மை மீளக்குடியமர்த்து மாறு பல்வேறு தரப்புகளிடம் கோரிக்கை விடுத்திருந்தன. இதனையடுத்து கடந்த வருடம் நவம்பர் மாதம் வீடுகள், காணிகள் மீளளிக்கப் போவதாக இராணுவத்தினரால் காணி உறுதிப்பதிவுகள் மேற் கொள்ளப்பட்டதுடன் காணிகளை அடையாளப்படுத்தும் நடவடிக்கையும் மேற் கொள்ளப்பட்டது.

எனினும் தற்போது இரண்டு மாதங்கள் கழிந்தும் மீண்டும் மீள்குடியமர்வு தொடர்பாக எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப் படவில்லை. இதேவேளை, கடந்த சில தினங்களுக்கு முன்பாக நலன்புரி முகாமுக்கு அருகில் வசிக்கும் குடும்பம் ஒன்றை இராணுவத்தினர் அங்கிருந்து வெளியேறுமாறு கூறியுள்ளனர்.

இது தொடர்பாக காரணம் கேட்ட போது வரணியில் இருக்கும் இராணுவ முகாமை இராமாவில் நலன்புரி நிலையம் இருக்கும் இடத்தில் அமைக்கப் போவதாகக் கூறியுள்ளனர். இதனால் 45 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் தமது சொந்தக் காணிகளில் மீள்குடியமர்வு செய்ய முடியாததையிட்டு விரக்தியடைந்துள்ளனர். இது தொடர்பான மகஜர் ஒன்று யாழ். அரச அதிபரிடம் கையளிக்கப் பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Comments Closed

%d bloggers like this: