13ம் திருத்தச் சட்டத்தால் நாட்டிற்கு பேராபத்து; சம்பிக்க எச்சரிக்கை.

Home » homepage » 13ம் திருத்தச் சட்டத்தால் நாட்டிற்கு பேராபத்து; சம்பிக்க எச்சரிக்கை.

பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதால் நாட்டிற்கு பேராபத்து விளையும் அத்துடன் காவல்துறை மற்றும் காணி அதிகாரங்களை மாகாண சபைகளுக்கு வழங்குவதை ஜாதிக ஹெல உறுமய ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாதென அக் கட்சி தெரிவித்துள்ளது.

இந்தியாவும் அமெரிக்காவும் கூறுகின்றது என்பதற்காக 13வது திருத்தச் சட்டத்திற்கு அப்பால் சென்று அரசியல் தீர்வுத் திட்டத்தை முன்வைக்க இயலாது. இவ் விடயத்தில் அரசாங்கமோ கூட்டமைப்போ தன்னிச்சையாகச் செயற்பட முடியாது என ஹெல உறுமயவின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்திருக்கின்றார்.

மாகாண சபைகளுக்கு மேலதிகமான அதிகாரங்களை வழங்குவது என்பது மிகவும் ஆழமாக சிந்திக்கப்பட வேண்டிய ஒரு விடயமாகும். மாகாண சபைகளுக்கு எல்லை மீறிய அதிகாரங்கள் வழங்குவதை அனுமதிக்க முடியாது. எனக் குறிப்பிட்டுள்ள ரணவக்க,

காணி, காவல்துறை அதிகாரங்கள் வழங்கும் பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதால் நாடு பேராபத்தை சந்திக்கும் என எச்சரித்துள்ளார்.

அத்துடன் மாகாண சபைகளுக்கு மேலதிக அதிகாரங்களை வழங்கும் தீர்வுத் திட்டத்திற்கு ஜாதிக ஹெல உறுமய கொள்கை ரீதியாக எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது. இந்தியா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகள் கூறுகின்றன என்பதற்காக அவற்றை நிறைவேற்ற முடியாது.

உதாரணமாக சூழலுக்கான விசேட சட்ட மூலம் 1988ம் ஆண்டு கொண்டு வரப்பட்டாலும் அதனை 1991ம் ஆண்டே நடைமுறைப்படுத்த முடிந்தது. இந்தியாவில் சூழல் பாதிக்கப்பட்டால் அது இலங்கையையும் தாக்கும் என்பதே உண்மை. என சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசியல் தீர்வு விடயத்தில் ஏனைய நாடுகளின் விருப்பத்திற்கு ஏற்ப செயற்பட முடியாது. ஜே.ஆர். – ராஜீவ் ஒப்பந்தம், சந்திரிகா – பிரபாகரன் ஒப்பந்தம், பீரிஸ் – பாலசிங்கம் ஒப்பந்தம் போன்றவைகளால் நாட்டிற்கு தேவையற்ற பிரச்சினைகளே வந்தது. இந்நிலையை மீண்டும் ஏற்படுத்திக் கொள்ளக்கூடாது.

தேசிய பிரச்சினைக்கான தீர்வில் ஏனைய கட்சிகளினதும் அமைப்புக்களினதும் ஆதரவு பெற்றுக் கொள்ள வேண்டுமே தவிர அரசும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தன்னிச்சையாக செயற்பட முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார்.

Comments Closed

%d bloggers like this: