செய்திகள்

இயக்குநர்கள் சீமான்- அமீர் கைது

இந்தியாவுக்கு எதிராக பிரிவினையைத் தூண்டியதாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டைத் தொடர்ந்து இயக்குநர்கள் சீமான் மற்றும் அமீர் ஆகியோரை தமிழகக் காவல்துறை இன்று வெள்ளிக்கிழமை கைது செய்துள்ளது. அண்மையில் தமிழ்நாட்டின் இராமேஸ்வரத்தில் ஈழத்தில் தமிழர்கள் மீது சிங்களப் பேரினவாதம் நடத்தி வரும் இனப்படுகொலையைக் கண்டித்து தமிழ்த் திரையுலகம் பிரம்மாண்ட பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தை நடத்தினர். அக்கூட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளை சீமான் மற்றும் அமீர் புலிகளை ஆதரித்துப் பேசியதாகவும் பிரிவினையைத் தூண்டியதாகவும் ஜெயலலிதா உள்ளிட்ட சிலர் தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்திருந்தனர். இதனையடுத்து சீமான் மற்றும் அமீர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதுக்கு முன்னதாக தமிழக காட்சி ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்த இயக்குநர் சீமான்,

இராமேஸ்வரம் கூட்டத்தில் தமிழ் உறவுகளின் அவலங்களை விவரித்துப் பேசினேன். அது சட்டவிரோதமா இல்லையா என்பதை மக்கள்தான் தீர்மானிப்பார்கள். இதற்காக கைது செய்யப்பட்டால் மகிழ்ச்சியோடு சிறைக்குச் செல்லக் காத்திருக்கிறேன் என்று கூறியுள்ளார்.