செந்தில் தொண்டமான் வருகையை எதிர்த்து தமிழகத்தில் கறுப்புக்கொடி

Home » homepage » செந்தில் தொண்டமான் வருகையை எதிர்த்து தமிழகத்தில் கறுப்புக்கொடி

தமிழ்நாடு கும்பகோணத்திலுள்ள திருநள்ளாறு கோயிலுக்கு சென்ற இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் ஊவா மாகாண சிறிலங்கா அமைச்சர் செந்தில் தொண்டமானுக்கு, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கறுப்புக்கொடி காட்டி தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

தமிழகத்தில் புகழ்பெற்ற சனீஸ்வரபகவான் தலமான திருநள்ளாறு சிறிதர்ப்பாரண்யேசுவரர் கோயிலில் நேற்று பல லட்சம் பக்தர்கள் வந்து சனீஸ்வரபகவானை வணங்கிக்கொண்டிருந்தனர். இந் நிலையில் இரவு 9 மணியளவில் ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான் இறைவனை வணங்குவதற்காகச் சென்றுள்ளார். கோயிலுக்குள் சென்று வணங்கி முடித்துவிட்டு திரும்பும்போது, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சுமார் 20 பேர் செந்தில் தொண்டமானின் வருகையை கண்டித்து கறுப்புக் கொடி காட்டி போராட்டத்தை மேற்கொண்டனர்.

அதன்போது செந்தில் தொண்டமானுக்கும் சிறிலங்கா அதிபர் மகிந்தவுக்கும் எதிராக கோஷம் எழுப்பினர். காவல்துறையினர் பேபாராட்டக்காரர்களை தடுக்க முயற்சி மேற்கொண்ட போதிலும் போராட்டக்காரர்கள் மீண்டும் மீண்டும் ஆவேசமாகக் கோஷம் எழுப்பினர்.

தமிழர்களுக்கு எதிராக நடந்துகொள்ளும் போக்கை செந்தில் தொண்டமான் கைவிடும்படி போராட்டக்காரர்கள் ஆர்ப்பரித்தனர். ஒருவாறு போராட்டக்காரர்களைச் சமாளித்த காவல்துறையினர் செந்தில் தொண்டமானை பாதுகாப்புடன் வாகனத்தில் ஏற்றி அனுப்பிவைத்தனர்.

விடுதலைச் சிறுத்தைகளின் இந்தத் திடீர் போராட்டத்தை அடுத்து திருநள்ளாறு பகுதியில் நேற்றிரவு பெரும் பரபரப்பு நிலவியது.

Comments Closed

%d bloggers like this: