சவேந்திர சில்வாவின் நியமனத்தை நிராகரிக்குமாறு பான் கீ மூனிடம் அமெரிக்க மனிதஉரிமை அமைப்புகள் இணைந்து வேண்டுகோள்.

Home » homepage » சவேந்திர சில்வாவின் நியமனத்தை நிராகரிக்குமாறு பான் கீ மூனிடம் அமெரிக்க மனிதஉரிமை அமைப்புகள் இணைந்து வேண்டுகோள்.

ஐ.நா அமைதிகாக்கும் நடவடிக்கைளுக்கான சிறப்பு ஆலோசனைக்குழுவுக்கு மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளதற்கு கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ள நிலையில், அமெரிக்காவைத் தளமாக கொண்ட மனிதஉரிமை அமைப்புகள் பலவும் இதற்கு எதிர்ப்பை வெளியிட்டுள்ளதுடன் இந்த நியமனத்தை நிராகரிக்குமாறும் ஐ.நா பொதுச்செயலரிடம் கோரியுள்ளன.

SPEAK Human Rights,
Environmental Initiative,
UNROW Human Rights Impact Litigation Clinic at American University Washington College of Law,
the Centre for Justice and Accountability and the Centre for Constitutional Rights ஆகிய அமைப்புகள் இணைந்து இது தொடர்பாக கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளன.

பொதுமக்கள் கொல்லப்பட்ட கணக்கிடப்படதாத அளவிலானோர் பாதிக்கப்பட்ட, அனைத்துலக மனிதஉரிமை மற்றும் மனிதாபிமானச் சட்டங்கள் தொடர்பான அடிப்படைக் கொள்கைகள் மீறப்பட்ட- விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் சிறிலங்கா மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா முக்கிய பாத்திரம் வகித்தவர் என்று இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

“மனிதாபிமான நடவடிக்கை என்று சிறிலங்கா அரசாங்கம் இதனைக் கூறியுள்ள போதும், ஐ.நா நிபுணர்கள் குழுவின் அறிக்கையில் இந்தப்போரில் போர்க்குற்றங்களும மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்களும் இடம்பெற்றுள்ளதற்கான நம்பகமான சாட்சியங்கள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

ஐ.நா பொதுச்செயலரிடம் கையளிக்கப்பட்ட இந்த அறிக்கையில் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா தலைமை தாங்கிய சிறிலங்காவின் 58 வது டிவிசன் இந்தக் குற்றச்சாட்டுகளில் சம்பந்தப்பட்டதாக விவாதிக்கப்பட்டுள்ளது.

ஐ.நா அமைதி காக்கும் நடவடிக்கைகளுக்கான சிறப்பு ஆலோசனைக்குழுவுக்கு நியமிக்கப்படும் ஒருவரது தலைமைத்துவ ஆற்றலும், குற்றச்சாட்டுகளற்ற அப்பழுக்கற்ற தன்மையும் தகைமைகளாக கருதப்பட வேண்டும்.

சவேந்திர சில்வாவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் உறுதிப்படுத்தப்பட்டால், சிறப்பு ஆலோசனைக் குழுவுக்கான அவரது நியமனம் உலகத்துக்கு திகைப்பூட்டும் செய்தியாக அமையும்.

எனவே ஐ.நா பொதுசெயலர் பான் கீ மூன் சவேந்திர சில்வாவின் இந்த நியமனத்தை நிராகரிக்க வேண்டும் அல்லது அவரது நியமனத்தை விலக்கிக் கொள்ள வேண்டும்.“ என்றும் அந்த அமைப்புகள் கோரியுள்ளன.

மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு எதிராக நியுயோர்க் மாவட்ட நீதிமன்றத்தில் போர்க்குற்ற வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் இருந்து விலக்குப் பெறுவதற்கு சவேந்திர சில்வாவுக்கு இராஜதந்திர விலக்குரிமை உள்ளதாக அவரது சட்டவாளர் கூறியிருந்தார். ஆனால், நீதிமன்றம் இதுதொடர்பாக எந்த முடிவையும் இன்னமும் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, ஐ.நா அமைதிகாக்கும் நடவடிக்கைகளுக்கான சிறப்பு ஆலோசனைக் குழுவுக்கு மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்ட விவகாரத்தில் இருந்து ஒதுங்கி நிற்க ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் முடிவு செய்துள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவை இந்த குழுவுக்கு ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் நியமிக்கவில்லை என்றும் அவரை ஆசிய பசுபிக் நாடுகளின் குழுவே தெரிவு செய்தது என்றும் பான் கீ மூனின் பேச்சாளர் மார்ட்டின் நெர்ஸ்க்கி கடந்த வெள்ளியன்று தெரிவித்த கருத்தை மேற்கோள்காட்டி அந்த நாளிதழ் இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளது.

Comments Closed

%d bloggers like this: