சிறிலங்கா அரசை காப்பாற்ற சம்பந்தனுக்கும் சிறிலங்கா அரச தரப்புக்கும் இடையில் இரகசிய பேச்சு?

Home » homepage » சிறிலங்கா அரசை காப்பாற்ற சம்பந்தனுக்கும் சிறிலங்கா அரச தரப்புக்கும் இடையில் இரகசிய பேச்சு?

தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கும் சிறிலங்கா அரசாங்கத்திற்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளில் ஒரு முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ள நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும், சிறிலங்கா அரசு தரப்பு பேச்சுவார்த்தை குழு உறுப்பினர்களான அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அமைச்சர் ஜி.எல்.பீரீஸ் மற்றும்சிறிலங்கா பாராளுமன்ற உறுப்பினர் சஜின்வாஸ் குணவர்த்தன ஆகியோருக்கும் இடையில் இரகசியச் சந்திப்பு ஒன்று நடைபெற்றிருப்பதாகத் தகவல்கள் கசிந்திருக்கின்றன.

கொழும்பில் கடந்த 27.01.2012ஆம் திகதி இந்தச் சந்திப்பு இடம் பெற்றிருப்பதாகவும், இந்தச் சந்திப்பின் போது, தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் சார்பில் சிறிலங்கா பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்கான பெயர்களும் இரா.சம்பந்தனால் அரச தரப்பினருக்கு வழங்கப்பட்டிருப்பதாகவும் நம்பகமான அரசியல் வட்டாரங்களில் இருந்து தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் சார்பில் பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு வழங்கப் பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்ற பெயர் விபரங்களை வெளியிட வேண்டாம் என்று இரா.சம்பந்தன் சிறிலங்கா அரச தரப்பினடம் கேட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த இரகசிய சந்திப்பு இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படும் 27ஆம் திகதிக்கு முந்திய தினமாகிய 26 ஆம் திகதி முதல் கொழும்பில் உள்ள இலங்கைக்கான இந்திய தூதுவருடைய இல்லத்தில் இடம்பெற்ற இந்திய குடியரசு தின வைபவத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முக்கியஸ்தர்களாகிய இரா.சம்பந்தன், சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், பொன் செல்வராசா ஆகியோர் கலந்து கொண்டிருந்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவராகிய இரா.சம்பந்தனின் நெருங்கிய சகாவாக கருதப்படுகின்ற சுமந்திரன் தனது வெளிநாட்டுப் பயணத்தை முடித்துக்கொண்டு, இலங்கை வந்திருந்த போதிலும், அவருக்கும் மாவை சேனாதிராஜாவுக்கும் கூட தெவிக்காமல், இரா.சம்பந்தன் மிகவும் இரகசியமாக அரசாங்கத்தரப்புடனான சந்திப்பை நடத்தியிருப்பதாகவே கூறப்படுகிறது. இத்தகைய சந்திப்பு ஒன்று நடைபெற்றிருப்பது குறித்து தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் முக்கியஸ்தர்களைத் தொடர்பு கொண்டு கேட்ட போது, இதுபற்றி தங்களுக்கு எதுவுமே தெரியாது என்று தெரிவித்துள்ளனர்.

இதற்கு முன்னர் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதத்தில் பேச்சுவார்த்தையில் முறிவு ஏற்பட்டபொழுது தனிப்பட்ட முறையில் இரா. சம்பந்தன் சிறிலங்கா ஜனாதிபதியைச் சந்தித்திருந்தார் என்பது தெரிந்ததே. தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கும் அரசுக்கும் இடையில் நடைபெறுகின்ற பேச்சுவார்த்தையில் இணக்கப்பாடு ஏற்பட்டால் மாத்திரமே தமிழ்த் தேசிய கூட்டமைப்பு,சிறிலங்கா பாராளும ன்ற தெரிவுக்குழுவில் அங்கம் வகிக்கும் இல்லையேல் அதில் கலந்து கொள்ள முடியாதென்று இந்தச் சந்திப்பின் போது சிறிலங்கா ஜனாதிபதியிடம் தான் அழுத்தம் திருத்தமாகக் கூறியதாகவும் இரா.சம்பந்தன் ஊடகங்களுக்கு அப்போது தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து தடைப்பட்டிருந்த பேச்சு வார்த்தைகள் தொடர்ந்து இடம்பெற்றன. கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் ஜெனீவாவில் நடைபெற்ற மனித உரிமைகள் பேரவையின் மாநாட்டின் போது சிறிலங்காக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விவாதம் நடைபெறவிருந்த சமயத்தில், அரசாங்கத்தை அந்த இக்கட்டில் இருந்து காப்பாற்றும் வகையில் ஆகஸ்ட் மாதத்தில் இரா. சம்பந்தனுக்கும் சிறிலங்கா ஜனாதிபதிக்கும் இடையிலான இரகசிய சந்திப்பு நடைபெற்றிருந்தது. எதிர்வரும் மார்ச் மாதம் ஐ.நா.வின் மனித உரிமைகள் பேரவைக் குழு கூட்டம் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments Closed

%d bloggers like this: