இந்தியா

தமிழ்நாட்டில் உள்ள சிறப்பு முகாங்களை மூடவேண்டும் – பட்டினிப் போராட்டம்

பூந்தமல்லி சிறப்பு அகதிகள் முகாமைச் சேர்ந்த ஈழத் தமிழ் அகதியான செந்தூரன் என்பவர் காலவரையறையற்ற பட்டினிப்போராட்டத்தை மேற்கொண்டுள்ள நிலையில், அவருடன் மேலும் எட்டு சிறிலங்கா அகதிகள் பட்டினிப்போராட்டத்தில் இணைந்துள்ளனர்.

சிறப்பு முகாங்கள் மூடப்படவேண்டும் என்பதை முன்வைத்து செந்தூரன் பட்டினிப்போராட்டத்தை நடாத்த முற்பட்டவேளையில், ஓகஸ்ட் 04 அன்று செங்கல்பட்டு முகாமிலிருந்த செந்தூரன் பூந்தமல்லி முகாமுக்கு மாற்றப்பட்டார். முகாங்களில் உள்ள அகதிகளை ஒன்றிணைத்து பட்டினிப்போராட்டம் ஒன்றை மேற்கொள்வதில் செந்தூரன் ஈடுபடுவதாக சந்தேகிக்கப்பட்ட நிலையிலேயே இவர் பூந்தமல்லி சிறப்பு அகதிகள் முகாமுக்கு மாற்றப்பட்டார்.

“இவ்வாறான சிறப்பு முகாங்களில் உள்ளவர்கள் பல்வேறு நெருக்கடிகளை சந்திப்பதுடன், இவர்கள் எந்தவொரு நியாயமான காரணங்களுமின்றி இங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்” என அகதி ஒருவர் தெரிவித்துள்ளார்.

செந்தூரன் தனது பட்டினிப்போராட்டத்தை ஓகஸ்ட் 06 அன்று ஆரம்பித்தார். தொடர்புபட்ட அதிகாரிகள் செந்தூரனுடன் பேச்சுக்களை நடாத்தி அவரது கோரிக்கையை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி தாமும் இப்போராட்டத்தில் இணைந்து கொள்வதென மேலும் எட்டு அகதிகள் தீர்மானித்துள்ளனர்.

“இதனுடன் தொடர்புபட்ட அதிகாரிகள் செந்தூரனுடன் பேச்சுக்களை நடாத்தும் வரை நாம் எமது பட்டினிப்போராட்டத்தை தொடர்வதென தீர்மானித்துள்ளோம்” என காலவரையறையற்ற பட்டினிப்போராட்டத்தில் கலந்துகொண்டுள்ள ஒருவர் தெரிவித்துள்ளார்.