கட்டுரைகள் முக்கிய செய்திகள்

« "பிரபாகரன்" என்ற மந்திரச்சொல்லின் மகத்துவத்தை புரிந்து கொள்ளத் தவறிய எரிக் சொல்ஹெய்ம் »

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனைப் புரிந்து கொள்வதற்கு நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவரான எரிக் சொல்ஹெய்முக்கு முப்பது ஆண்டுகளாகியிருக்கிறது என்று கிண்டல் அடித்துள்ளார் சிறிலங்காவின் ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல. விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் முப்பதாண்டு காலம் போராட்டம் நடத்தினார் என்பது உண்மையாயினும், அவரைப் புரிந்து கொள்வதற்கு எரிக் சொல்ஹெய்ம் அந்தளவு காலம் அவருடன் தொடர்பில் இருந்தவரல்ல என்பது கெஹலிய ரம்புக்வெலவுக்கு தெரியாது போலும்.

இலங்கை விவகாரத்தில் நோர்வேயின் சமாதான ஈடுபாடு தொடங்கியது கிட்டத்தட்ட 1998ம் ஆண்டு வாக்கில் தான். தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் சுகவீனமடைந்திருந்த போது, அவரை சிகிச்சைக்காக வெளிநாட்டுக்கு கொண்டு செல்ல முயன்றபோது தான், அது முதன் முதலாக ஆரம்பமாகியது. அந்தவகையில், விடுதலைப் புலிகளுடனான நோர்வேயின் அல்லது எரிக் சொல்ஹெய்மின் தொடர்புக்கு ஆயுள் ஆகக் கூடியது 11 ஆண்டுகள் தான். அப்படியிருக்கும் போது, தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களை புரிந்து கொள்ள எரிக் சொல்ஹெய்முக்கு 30 ஆண்டுகள் தேவைப்பட்டுள்ளதாக, கெஹலிய ரம்புக்வெல கூறியிருப்பது மிகையான கருத்தே.

அதேவேளை, எரிக் சொல்ஹெய்ம் இப்போது கூட தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களை சரிவரப் புரிந்து கொள்ளவில்லை என்பதே உண்மை.

அண்மையில் ஊடகங்களில் அவர் தெரிவித்திருந்த கருத்துகள் பரபரப்பான விவாதங்களை ஏற்படுத்தியிருந்தது. தான் சொன்னதைக் கேட்டிருந்தால், பிரபாகரன் இன்று உயிரோடு இருந்திருப்பார் என்று அவர் பெருமையாக கூறியுள்ளார். அவரது இந்தக் கருத்து ஒன்றே, பிரபாகரனைப் புரிந்து கொண்டது எவ்வளவு என்பதைக் காட்டுகிறது.

தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் ஒன்றும் உயிரோடு வாழ்வதற்காக ஆசைப்பட்ட – சாதாரணமான ஒரு மனிதர் அல்ல. இராஜகோபுரம் எங்கள் தலைவர் அழுத்தவும் பத்திரிகையாளர் மாநாடு அவ்வாறான சிந்தனையில் அவர் இருந்திருப்பாரேயானால், ஒரு போதும் தன் கழுத்தில் சயனைட் அணிந்திருக்க மாட்டார். எந்த நேரத்திலும் மரணம் தன்னை அரவணைக்கலாம் என்பதையும், அதற்குத் தயாராகவே இருக்கிறேன் என்பதையும் அவர் வெளிப்படுத்தியே வந்தவர். அவர் உயிருக்காக ஆசைப்பட்டிருந்தால், சலுகைகளுடன் வாழ ஆசைப்பட்டிருந்தால், யாரும் எதிர்பாராத வசதிகளோடு வாழ்ந்திருக்க முடியும். இந்தியப்படைகளுடன் போருக்குச் சென்று காடுகளில் கரந்தடி வாழ்வை நடத்தும் அளவுக்கு அவர் சென்றிருக்க வேண்டிய நிலை அப்போது ஏற்பட்டிருக்காது. அதன் பின்னர் கூட, தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் நினைத்திருந்தால், குறைந்தபட்சமான ஒரு தீர்வைப் பெற்றுக் கொண்டு வசதியோடும் பதவிகளோடும் வாழ்ந்திருக்க முடியும். அவை எதையும் அவர் எதிர்பார்க்கவும் இல்லை. விரும்பவும் இல்லை. தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் விரும்பியதெல்லாம், ஒரே இலட்சியத்தை அடைவது தான். அந்த இலட்சியத்தை அடைவதற்கான அவரது குறி தவறிச்செல்வதை உணர்ந்தபோது கூட, அவர் தனது பாதையை மாற்றிக் கொள்ளவில்லை. பயணத்தைக் கைவிடவில்லை. இலட்சியத்தில் உறுதியோடு சாவையும் சந்திக்கத் தயாரானார். அதனால் தான், அவரால் முள்ளிவாய்க்காலில் எல்லாவற்றையும் இழந்து நின்றபோது கூட, சிங்களப்படைகளிடம் மண்டியிடாமல் இருந்தார். இந்த உறுதியை சொல்ஹெய்மோ நோர்வேயோ புரிந்து கொள்ளவில்லை. அதனால் தான், அவரையும் பொட்டம்மானையும் சிங்களப்படைகளிடம் சிறைவைக்கும் ஒரு திட்டத்தை நோர்வே முன்வைத்தது.

போர் தீவிரமாக நடந்து கொண்டிருந்த போது, தலைமையையே சிறைகொடுத்துச் சரணடைய எந்தவொரு விடுதலை அமைப்பும் முன்வராது என்ற உண்மை நோர்வேக்கு தெரியாமல் போனது.. அதைவிட, சிங்களப்படைகளின் காலடியில் சரணடைந்து வீழும் அளவுக்கு தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் ஒரு சாதாரண மனிதர் அல்ல என்ற உண்மையும் அவர்களுக்குப் புரியாமல் போயிற்று.

நடைமுறைச்சாத்தியமான ஒரு போர் நிறுத்தத்தை கொண்டுவர வக்கில்லாத நிலையில் இருந்த சொல்ஹெய்ம் போன்றவர்கள் அங்கம் வகித்த இணைத்தலைமை இராஜதந்திரிகளுக்கு இது பெரும் சறுக்கல். இணைத்தலைமை நாடுகள் போரை நிறுத்துவதை விட, சிங்களப்படைகளிடம் புலிகளை சரணாகதி அடையச் செய்வதிலேயே குறியாக இயங்கின என்பது இப்போது நிரூபணமாகிறது. அவர்களின் அந்த முயற்சி இப்போது தோற்று விட்டது. அந்தத் தோல்வியை – அந்தச் சறுக்கலை மறைத்துக் கொள்ளவே,தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் மீது சேறு பூச முனைகிறார் சொல்ஹெய்ம்.