தேசிய செயற்பாட்டாளர் றீகன் (பருதி) அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தி தமிழீழ விடுதலைப் புலிகள் அறிக்கை!

Home » homepage » தேசிய செயற்பாட்டாளர் றீகன் (பருதி) அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தி தமிழீழ விடுதலைப் புலிகள் அறிக்கை!

பிரான்சில் தமிழீழ விடுதலைப்புலிகளது முன்னாள் தீவகக் கோட்டப் பொறுப்பாளரும், பிரான்சு நாட்டின் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் இணைப்பாளருமான பரிதி என அழைக்கப்படும் நடராசா மதீந்திரன் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டடை தொடர்பாக தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைமைச் செயலகம் வீரச்சாவு அறிவித்தல் விடுத்து அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. அதன் விபரம் கீழ்வருமாறு.  >>>>

தலைமைச் செயலகம், த/செ/ஊ/அ/05/12
தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்.
09/11/ 2012.

வீரச்சாவு அறிவித்தல்

தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் தீவகக் கோட்டப் பொறுப்பாளரும், பிரான்சு நாட்டின் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் இணைப்பாளருமான றீகன் என்று அழைக்கப்படும் திரு.பரிதி [நடராசா மதீந்திரன்] அவர்கள் வீரச்சாவடைந்துள்ளார். கரம்பொன் ஊர்காவற்றுறையினைப் பிறப்பிடமாகக் கொண்ட பரிதி அவர்கள் 1983 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பில் தன்னை இணைத்துக்கொண்டு தொடக்ககாலப் பணியினை மன்னார் மாவட்டத்திலும் பின்னர் தீவகக் கோட்டப் பொறுப்பாளராகவும் செயற்பட்டவராவார்.

புலம்பெயர் நாடுகளில் தமிழ்மக்களின் விடுதலை நோக்கிய எழுச்சிச் செயற்பாடுகளை முடக்கி முற்றாக ஒழிக்கும் வகையில் செயற்பட்டுக்கொண்டிருக்கும் சிறிலங்கா பேரினவாத அரசின் நீண்டகால திட்டமிட்ட செயற்பாட்டின் ஒரு வெளிப்பாடே பரிதி அவர்கள் மீதான படுகொலைத் தாக்குதலாகும்.

இவ்வாறான கொலைவெறித்தாக்குதல்கள் நீண்டகாலமாகவே புலம்பெயர் நாடுகளில் சிங்கள இனவெறி அரசினால் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. இதே பிரான்சில் லெப். கேணல் நாதன், கப்டன் கஜன் ஆகியோர் சிங்களப் புலனாய்வாளர்களால் சுட்டுக்கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பரிதி அவர்கள் தாயகத்தில் இருந்து புலம்பெயர்ந்த பின்னரும் தான் வாழும் நாட்டில் விடுதலைக்காக தன்னை அர்ப்பணித்துச் செயற்பட்டவர். எமது போராட்டம் தொடர்பான சர்வதேசத்தின் தவறான புரிதலால், பரிதி அவர்கள் பிரான்ஸ் நாட்டில் நீண்டகாலம் சிறையிலிருந்தார். சிறைமீண்டு வந்த பின்னரும் தனது பணியினை தன்னலம் பாராது இறுதிவரை செய்துவந்தார்.

புலம்பெயர் நாடுகளில் துடிப்புமிக்க தேசியச் செயற்பாட்டாளர்களைக் கொல்வதன் மூலம், தமிழீழ விடுதலை நோக்கிய செயற்பாடுகளை முடக்கி, எமது இனவிடுதலைப் போராட்டத்தினை முற்றாக அழித்துவிடலாம் என சிங்களம் கனவு காண்கின்றது.

சிங்களப் பேரினவாதத்தின் இந்த நீண்டநாட் கனவு ஒருபோதும் நிறைவேறாது. போராளிகளும் விடுதலைக்காக தம்மை அர்ப்பணித்துச் செயற்படும் தேசியச் செயற்பாட்டாளர்களும் விழவிழ எழுவார்கள். பரிதி அவர்களின் வீரச்சாவு, தேசியச் செயற்பாட்டாளர்களையும், போராளிகளையும் இன்னும் முனைப்பாகப் பணிகளை முன்னெடுக்கத் தூண்டுமே தவிர எந்தவொரு சூழலிலும் விடுதலை நோக்கிய செயற்பாடுகளை சிங்களப் பேரினவாத அரசு நினைப்பது போன்று வீழவிடாது என்பதனை இந்த நேரத்தில் சுட்டிக்காட்டுகின்றோம்.

அதேவேளை ஆயுதம் எதுவும் அற்ற அரசியற் போராளிகளைத் தொடர்ந்து குறிவைக்கும் சிங்களத்தின் நயவஞ்சக, மனித நேயமற்ற தாக்குதல்களை பன்னாட்டுச் சமூகம் கண்டிக்கவேண்டும் எனவும், இத்தகைய கொலைவெறி வலைப்பின்னல்களில் இருந்து அரசியல் செயற்பாட்டாளர்களிற்கு உரிய பாதுகாப்பினைக் கொடுக்கவேண்டும் எனவும் கேட்டுக்கொள்கின்றோம்.

தாயகத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் தன்பணிகளைச் சரிவரச் செய்து சிங்களத்தின் கொலைவெறியர்களால் கொல்லப்பட்ட பரிதி அவர்களுக்கு தமிழீழ விடுதலைப்புலிகள் தமது வீரவணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கின்றனர். இவரது இறப்பால் துயருறும் அவரது குடும்பத்தினருக்கும் உறவினருக்கும் நண்பர்களுக்கும், தேசியச் செயற்பாட்டில் அவரோடிணைந்து பணியாற்றிய செயற்பாட்டாளர்களுக்கும் எமது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

தலைமைச் செயலகம்,

தமிழீழ விடுதலைப் புலிகள்,

தமிழீழம்.

Comments Closed

%d bloggers like this: