தமிழீழம் முக்கிய செய்திகள்

தமிழீழம் எங்கும் ஒட்டப்பட்டிருந்த தமிழீழ விடுதலைப்புலிகளின் மாவீரர்நாள் சுவரொட்டிகள்.

தமிழீழ விடுதலைப்புலிகளினால் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டிருந்த மாவீரர்நாள் 2012 க்கு உரிய சுவரொட்டிகள் தமிழீழத்தின் அனைத்துப்பகுதிகளிலும் ஒட்டப்பட்டிருந்ததாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழீழப்பகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டது, தமிழீழத்; தேசியகொடிகள் பறக்க விடப்பட்டதன் பின்னணியில் உள்ளவர்கள் யார் என்பதைக் கண்டறிய சிறிலங்கா காவல்துறையின் தீவிரவாத தடுப்புப்பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக தகவல் வெளியிட்டுள்ள சிறிலங்கா தீவிரவாத தடுப்புப்பிரிவு அதிகாரி ஒருவர்,:  “யாழ்ப்பாணம், வவுனியா, திருகோணமலை உள்ளிட்ட பல பகுதிகளிலும் புலிக்கொடிகள் பறக்க விடப்பட்டதாகவும், புலிகளுக்கு ஆதரவான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்ததாகவும் தகவல் கிடைத்துள்ளது. இந்தச் சம்பவங்கள் தொடர்பாக விசாரித்து வரும் உள்ளூர் காவல் நிலையங்களின் உதவியுடன் இதன் பின்னணி தொடர்பாக விசாரணைகளை தொடக்கியுள்ளோம். சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு சிறப்பு புலனாய்வுக் குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டு, இதில் சம்பந்தப்பட்டுள்ள புலிகள் ஆதரவு சக்திகளை இனங்காண்பதற்கான விசாரணைகள் நடத்தப்படவுள்ளன.”என்று கூறியுள்ளார்.

அதேவேளை, பெயர் வெளியிட விரும்பாத சிறிலங்கா  பாதுகாப்பு அதிகாரி ஒருவர், ‘இந்தச் செயற்பாட்டுக்கு நிதி வழங்கியோர் பற்றிய விசாரணைகளை நடத்தவுள்ளதாகவும், இது நாட்டுக்கு அவப்பெயரை ஏற்படுத்த மேறகொள்ளப்பட்ட முயற்சி’ என்றும் கூறியுள்ளார்.

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் அரசியல் துறையின் ஒரு நிர்வாக கட்டமைப்பான அனைத்துலகத் தொடர்பகத்தில் இருந்து வெளியேறிய குழு ஒன்றும் தமிழீழ விடுதலைப்புலிகளின் பெயரில் அறிக்கைகளை விடுவதுடன் மாவீரர்நாள் பிரசுரங்களையும் புலம்பெயர் நாடுகளில் மக்களை குழப்புவதற்காக தமது இணையங்களில் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இவர்களின் கபட நோக்கங்களை தமிழீழ மக்கள் புரிந்துகொண்டுள்ளனர். புலம் பெயர் நாடுகளில் இவர்களால் மேற்கொள்ளப்பட்ட மாவீரர் நாள் நிகழ்வுகளில் தமிழீழ விடுதலைப்புலிகளின் அதிகாரபுர்வ ஊடகமான புலிகளின் குரலில் ஒலிபரப்பப்பட்ட மாவீரர்நாள் அறிக்கையையும் புறக்கணித்திருந்தனர்.