கட்டுரைகள் முக்கிய செய்திகள்

மீண்டும் தொடங்கும் மிடுக்கு; கட்டுடைத்தது யாழ்.பல்கலை

விடிந்து சில நிமிடங்கள் கழிந்திருந்தன. முதல் நாள் செய்து முடிக்காத வேலைகளுக்காக குடும்பத் தலைவர்களும், தலைவிகளும் தீவிரமாகிக் கொண்டிருந்தனர். நாய்களின் எதிர்ப்பு அந்தக் கிராமத்தையே அதிரச் செய்து கொண்டிருந்தது.

மக்காட் இல்லாத சைக்கிள்களிலும், விடுதலைப்புலிகளிடம் இறுதிப் போரில் மாட்டிக் கொண்ட பொதுமக்களிடம் இருந்து கைப்பற்றிக் கொண்ட மோட்டார் சைக்கிள்களிலும் ஒவ்வொரு வீட்டையும் சுற்றிவளைத்தது இராணுவம்.

நாளைக்கு (27.11.2012) எந்த முன்னாள் போராளியும் வீட்டில் இருக்கக் கூடாது. விடிந்த உடனேயே எங்களின் முகாம்களுக்கு வந்து விட வேண்டும், என்ற கட்டளையை அறிவித்துக் கொண்டே மற்றைய கிராமத்துக்கு நகர்ந்தது இராணுவம். தடுப்பிலிருந்து விடுதலையான முன்னாள் போராளிகளே மாவீரர் தினம் அனுஷ்டிப்பர் என்ற அசையாத நம்பிக்கை இராணுவத்துக்கு இருந்தது.

ஏனெனில் கடந்த மூன்று வருடத்துக்குள் பொதுமக்கள், மாணவர்கள், பொது அமைப்புக்கள் என்ற அனைத்துத் தரப்பினையும் மாவீரர் தினத்திலிருந்து பிரித்து வைத்துவிட்டோம் என்ற நம்பிக்கை அவர்களுக்கு இருந்தது.

அடக்க முடியாத அடக்கு முறை

ஆனால் முன்னாள் போராளிகள் எதிர்பார்த்தளவுக்கு எதுவுமே செய்யவில்லை. மௌனித்தனர். நீண்ட மௌனத்தை கலைத்த எழுச்சி வேறொரு பக்கமிருந்து வந்தது. அடங்கியிருத்தலின் எல்லை கட்டுடைத்தது. 3 நூற்றாண்டுகளுக்கு முன்னரான அடக்குமுறையை விட மோசமான மிலேச்சத்தனத்தை தமிழர்கள் கடந்த 3 ஆண்டுகளில் அனுபவித்திருந்தனர். நிலம் பறிப்பு, தொழில் இழப்பு, வாழ்க்கை இழப்பு என அனைத்தையும் பெரும்பான்மையினம் வேகமாகசூறையாடிக் கொண்டு வந்தது.

இருந்த ஒரே தீர்வான 13 ஆவது அரசியலமைப்பையும் அழித்துவிட அரச அமைச்சர்கள் தீவிரமாகியிருந்தனர். என்றும் நடக்காது என நம்பியிருந்த விடயமும் நடந்தேறியது. தமிழ்ப் பெண்கள் இராணுவத்தில் இணைக்கப்பட்டனர். இதனால் உண்டான விரக்தியும், வெறுப்பும் பலரை மனநோயாளிகள் கூட ஆக்கியது. 24 மணிநேரமும் மனக்கொதிப்பு நிலையுடனேயே பலர் வாழ்ந்தனர். இன்னமும் வாழ்கின்றனர். இதிலிருந்து யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் விதிவிலக்கானவர்கள் இல்லையே.

உறங்கிக் கிடந்த காலம்

2006 ஆம் ஆண்டிலிருந்து மோசமான இராணுவத்தினரின், இராணுவ புலனாய்வாளர்களின், பொலிஸாரின், இராணுவத்தோடு சேர்ந்தியங்கும் குழுக்களின் வன்முறைகளை இந்தப் பல்கலைக்கழக மாணவர்கள் தாங்குகின்றனர். அந்த ஆண்டில் உரிமைக்காக குரல் கொடுத்த பல மாணவர்களை கொடூரக் கொலைபுரிந்தன இனந்தெரியாதவர்களின் துப்பாக்கிகள்.

அத்தோடு பலர் கல்வியை இடை நடுவில் விட்டு யாழ்.பல்கலைக்கழகப் பக்கம் திரும்பிப் பார்ப்பதையே நிறுத்திவிட்டனர். அவ்வப்போது எதிர்ப்பைக்காட்ட சிறு ஆர்ப்பாட்டங்களை செய்வதும், கலைந்து போவதும் தான் கடந்த 27 ஆம் திகதி வரைக்கும் அவர்களிடம் இருந்த போராட்ட வடிவம். மாணவர்களுக்குள்ளேயே ஊடுருவியிருக்கின்ற புலனாய்வாளர்கள் இனங்கண்டு கலைவதில் எப்போதும் தீவிரமாக இயங்கினர்.

அவர்களின் மீதான பயம் அந்தத் திகதி வரைக்கும் பல்கலைக்கழக கல்லிருக்கைகளில் உரிமை அரசியல் பேசுவதைக் கூட தடுத்திருந்தது. ஆனால் அடங்கிப் போதலுக்கும் ஒரு எல்லைக் கோட்டைக் கிழிக்க அந்த எழுச்சி நாள் வந்தது.

புலம்பெயர் தேசம் தந்த எழுச்சி

இந்த முறை என்றுமில்லாத எழுச்சியை நவம்பர் 27 பெற்றிருந்தது. புலம் பெயர் நாடுகளில் விடுதலைப் புலிகளின் காலத்து மாவீரர் தினம் போல் இருந்தது. அந்த எழுச்சிக்கு மாவீரர் தினம் நெருங்கிக் கொண்டிருக்கையில் பிரான்ஸில் வைத்து விடுதலைப் புலிகளின் முக்கிய செயற்பாட்டாளர் பரிதி துரோகிகளால் சுட்டுக் கொல்லப்பட்டமையும் ஒரு காரணம்.

எந்தத் தடை வரினும் மாவீரர் தினத்தை அதே மரியாதையுடன் அனுஷ்டித்தே தீருவோம் என சத்தியம் செய்திருந்தது புலம் பெயர் சமூகம். அதனைச் சாதித்தும் காட்டியது. பிரான்ஸ்,கனடா,லண்டனில் மாதிரித் துயிலுமில்லங்களே அமைக்கப்பட்டிருந்தன. இந்த எழுச்சியின் விவரங்கள் உடனுக்குடன் முகநூல்களில் பகிரப்பட்டன. பல்கலைக்கழக மாணவர்களின் பார்வைக்கும் வந்தன.

“நாங்களும் செய்யவேணும்” என்ற முடிவை விடுதி அறைகளில் இரகசியமாக எடுத்துக் கொண்டார்கள். வழமை போல 26 ஆம் திகதிக்குரிய இரகசிய சுவரொட்டிகள் இரவோடிரவாக ஒட்டப்பட்டன. இராணுவக் கவனிப்பாளர்கள் இதனை எதிர்பார்த்திருக்கவேயில்லை. பல்கலைக்கழகம் தமது கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டது என்பதில் அசையாத நம்பிக்கையிலிருந்தனர்.

விடுதிகளில் நடந்ததென்ன?

ஆனால் அசம்பாவிதம் நடந்துவிட்டது. 27 ஆம் திகதி பல்கலைக்கழகம் இராணுவத்தின் முழுக்கவனத்துக்கு வந்தது. நேரம் மாலை 6.05 மணியை நெருங்க அந்தக் கவனம் பாலசிங்கம் விடுதிப் பக்கம் பரவியது. அங்கு நடந்த சம்பவங்களை இப்படித்தான் ஒருவர் பதிவு செய்கின்றார். (ஆனந்த குமாரசாமி பெண்கள் விடுதி) “அப்ப நேரம் 5.30 இருக்கும்”

“எங்கட ஹொஸ்டலில் விளக்கேத்த தயாராகிக் கொண்டிருந்தம். அமைதியான முறையில் விளக்கேத்துறது என்ற முடிவ நாங்கள் எடுத்திருந்தம். ஆனா அந்த நேரத்தில பாலசிங்கம் விடுத்திக்குள் அத்துமீறிய ஆமிக்காரர் பெடியளை மிரட்டினாங்கள். அங்க ஒட்டியிருந்த மாவீரர் படங்கள கிழிச்செறிஞ்சாங்கள். விளக்கேத்த தயார் செய்யப்பட்டிருந்த பொது இடத்துக்கு மேல நிறைய ஆமிக்காரர் ஏறி நின்டாங்கள். அநேகமான ஆண் மாணவர்கள் வெளியில இருந்து ரூமுக்குள்ள போயிட்டாங்கள். வெளியால நிக்கிறவங்களைக் கூப்பிட்டு விசாரிக்கிறாங்கள். அங்க நடக்கிற எல்லாத்தையும் எங்கட விடுதியின் மொட்டை மாடியில் இருந்து பாத்துக் கொண்டிருந்தம். எங்களோடயே கூடியிருந்து புதினம் பாத்த சிங்களப் பெட்டயளுக்கு சரியான சந்தோசம். தங்கட மொழியில் ஏதேதோ சொல்லி எங்கள நக்கல்அடிக்கிறாங்க.. எங்களுக்கு சரியான கோபம் வந்தது. அப்பத்தான் பாலசிங்கம் விடுதியில இருந்து, ஒன்டுமே செய்ய முடியாதென்று எங்களுக்கு எஸ்.எம்.எஸ். வந்தது”.

“நாங்களாவது செய்யனும்”

எல்லாருமே வேகமாக கீழ இறங்கி சரியான நேரத்தில விளக்கேத்தினம். ஆமிக்காரர் வரப்போறான் என்டு தெரிஞ்சு கேற்பூட்ட எங்கட பிரசிடன்ட் போனவ. இதை எதிர்பாக்காத ஆமிக்காரர் பின் வாசல் வழியா எங்கட ஹொஸ்ட்டலுக்குள்ள திமு திமுவென்டு ஓடிவந்தாங்கள். கேற் பூட்டப் போன பிள்ளைய மிரட்டினாங்கள். எதையுமே கவனிக்கேல்ல.

இரவு நேரத்தில யாரோட அனுமதியும் இல்லாம 3 ST-I பில்டிங்குக்குள்ள ஆமிக்காரர் நுழைஞ்சாங்கள். வாசலில் நின்ட பிள்ளையள துப்பாக்கி காட்டி மிரட்டினாங்கள். ஏத்தியிருந்த விளக்குகள மளமளவென்டு படம் எடுத்தாங்கள். அந்த விளக்குகள அணைச்சிட்டு ஒரு மாணவியைப் பிடிச்சு நெற்றில துப்பாக்கிய வச்சு சுடப்போறன் என்டாங்கள்.

இந்த நேரத்தில சிங்கள மாணவிகள் ஆமிக்காரரோட கதைக்கத் தொடங்கீற்றினம். எங்கள யார் யாரெல்லாம் விளக்கேத்தினது என்டத சொல்லிக்குடுத்திட்டாளுகள். ஒவ்வொருத்தரையும் ஆமிக்காரர் மிரட்டினாங்கள். எங்கட ரூம் கதவு, படிக்கிற மேசை கதிர, வாளி எல்லாத்தையும் அடிச்சி நொருக்கினாங்கள். என்னோட படிக்கிற பிள்ளையின்ர மோட்ட சைக்கிளையும் உடைச்சுப் போட்டாங்கள்.

பிறகு 3 ST-II பில்டிங்குக்கு போயிட்டாங்கள். அங்க அவங்களால நுழைய முடியல. எங்கட பில்டிங்கில பிரச்சின நடக்கும் போதே அந்த பில்டிங்க் கதவெல்லாத்தையும் பூட்டீட்டாளுகள். இதால ஆத்திரப்பட்ட ஆமிக்காரர் துவக்குகள், பொல்லுகளாள யன்னல அடிச்சிஉடைச்சாங்கள். பில்டிங்கின்ர தண்ணீர் குழாய்வழியாக மேல ஏறி அங்க ஏத்தியிருந்த விளக்குகள வேகமாக அணைச்சாங்கள். சிட்டிகளால பிள்ளையள அடிச்சாங்கள்.

இதுக்கிடையில ஹொஸ்டலுக்கு வெளியாலயும் பெரிய கலவரம் நடந்தது. றிப்போர்ட்டர் ஆக்களுக்கு ஆமிக்காரர் அடிச்சதாம். இவ்வளவு பெரிய கலவரத்த ஆமிக்காரர் ஒரு மணித்தியாலத்துக்கு மேல செய்து கொண்டிருக்கேக்குள்ளயும் கம்பஸ்ல இருந்து யாருமே வரேல்ல. சரியா 7. 00 மணிக்கு கம்பஸ் ஆக்கள் வந்த பிறகு ஆமிக்காரர் போனாங்கள்.

எங்கட ஹொஸ்டலுக்குள்ள ஆமிக்காரர் வரும் போது வாசலில நின்ட செக்கியுறிட்டி ஒன்றுமே செய்யேல்ல. பேசாம எல்லாத்தையும் பாத்துக் கொண்டிருந்தார். அன்றைக்கு மத்தியானமே அவர்“, ”நீங்கள் தீபம் ஏத்தி ஆமிக்காரர் நுழைந்தால் நான் ஒன்றும் செய்யமுடியாது” என்று சொல்லியிருந்தார். அந்த நேரத்தில வோடன் கூட அங்க இருக்கேல்ல.

24 மணிநேரமும் அங்கயே இருக்கும் அவர் அன்றைக்கு அந்த நேரத்தில் மட்டும் வெளியால போயிருந்தார். ஆமிக்காரர் வந்த பிறகு போன் அடிச்சு அவவுக்கு சொன்னதுக்கு” வீ.சிக்கு சொல்லீற்றன் பயப்படாதிங்க என்டு சொல்லீற்று போன வச்சிற்றா”.

இன்னொரு பேரெழுச்சியின் தொடக்கம்

மறுநாள் இந்தச் சம்பவத்துக்கு எதிர்ப்புத் தெரிவுக்கும் முகமாக மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டம் பேரெழுச்சியொன்றுக்கு வித்திட்டுள்ளது. யாருமே இதனை எதிர்பார்த்திருக்கவில்லை. அமைதியான முறையில் யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் தொடங்கிய போராட்டத்தை ஆயுதங் கொண்டு அடக்க முற்பட்டதன் விளைவு வேகமாக பரவியது.

சமூக வலைத்தளங்களில் அதிக பகிர்வுக்குள்ளான இந்தக் கலவரச் சம்பவம் மீண்டும் ஈழத்தில் இனப்போராட்டம் ஆரம்பமாகி விட்டதா என்ற பார்வையை ஏற்படுத்தியிருக்கின்றது. தமிழ் மக்கள் மத்தியில் அவ்வாறானதொரு எதிர்பார்ப்பையும் இது உருவாக்கியிருக்கின்றது. உடனடியாக சர்வதேச கவனத்தைப் பெற்றுவிட்ட இந்தச் சம்பவம் அமெரிக்கா உள்ளிட்ட தூதரகங்களின் நேரடி கவனிப்பைப் பெற்றுள்ளது.
இலங்கையிலும், புலம்பெயர் தளத்திலும் இயங்கும் பல்வேறு தமிழ் அரசியல் கட்சிகளும் இந்தப் பிரச்சினை குறித்து கவனம் செலுத்தவும், அதற்கான நியாயத்தைக்கோரவும் கூடி நிலையை உருவாக்கியிருக்கின்றது. இன்னொரு புறத்தில் இலங்கை அரசு தமிழர்களுக்கு எவ்வாறான அநீதிகளை இழைக்கின்றது என்ற விடயமும் வெளிச்சத்துக்கு.

தன்னிச்சையான போராட்டம்

இது ஈழத் தமிழ் மக்கள் கடந்த காலங்களில், அதாவது 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னர் முன்னெடுத்த ஜனநாயக வழியில் அமைந்த போராட்டங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. நிலஅபகரிப்பு, காணாமல் போதல், சிறைக் கைதிகள் விடுவிப்பு போன்ற காரணங்களுக்காக அரசியல் கட்சிகள் ஒழுங்குபடுத்திய போராட்டங்களில் மக்கள் கலந்து கொண்டனர். ஆனால் இந்தப் போராட்டம் சுயமாக உருவானது.

யாழ்.பல்கலைக்கழகத்தில் கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்ட பெரும்பாலான மாணவ நிலை அரசியல் போராட்டங்களுக்கு அரசியல் பின்னணி இருந்தது. ஆனால் இது எந்தப் பின்னணியையும் வைத்துக் கொள்ளாமல் தமது பிரச்சினையை தாமே தீர்த்துக்கொள்ள மாணவர்கள் முன்னெடுத்த போராட்டம். முற்றிலும் ஜனநாயக வழிப்பட்டது. கட்சிகளின் சாயங்களற்றது. இந்தக் காரணத்தினால் தான் இதனை அடக்க அரச யந்திரங்கள் காட்டுமிராண்டித்தனத்தைக் கட்டவிழ்க்க வேண்டியிருந்தது.
அரியதோர் சந்தர்ப்பம்.

இந்தப் போராட்டம் இப்போது இரண்டாம் கட்ட நிலையை அடைந்திருக்கின்றது என்றே குறிப்பிட வேண்டும். யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் தாக்கப்பட்டு இரண்டாம் நாளே பேராதெனிய பல்கலைக்கழக மாணவர்கள் ஒரு ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளனர். றுகுணு பல்கலைக்கழக மாணவர்கள் அடுத்த ஆர்ப்பாட்டம் ஒன்றுக்கு தயாராகின்றனர்.

இது தமிழ் தேசிய மீள்எழுச்சிப் போராட்டமாக தமிழர் தரப்பில் நோக்கப்பட்டாலும், அதனை ஏற்றுக் கொண்ட அனைத்து சக்திகளுடனும் கலந்து போராட வேண்டிய சந்தர்ப்பத்தை உருவாக்கியளித்துள்ளது. இனியும் தமிழருக்காக தமிழர்கள் மட்டுமே போராடி வெல்வது சாத்தியமற்றது.

தமிழர்களுக்கு தொடர்ந்தும் நீடிக்கும் சுதந்திரமற்ற நிலையும், உரிமை மறுப்பும் இலங்கையில் வாழும் ஏனைய இனங்களுக்கு எடுத்துச் சொல்லப்படவேண்டியவை. அதற்கான முதற் தொடக்கமாக பல்கலைக்கழக போராட்டம் அமைந்துவிட அனைத்து தரப்பினரும் முயற்சிக்க வேண்டும். ஆனால் இதுவரையில் அதற்கான எந்த சமிக்ஞைகளும் எதிர்பார்க்கப்படும் தரப்பினரிடமிருந்து வரவில்லை.

அடுத்த கட்டமும் தயார்

ஆக, இது மாதிரியான கல்விச் சமூகத்தின் போராட்டங்களுக்கு நம்பிக்கை தரும் ஒரு விடயம் கட்டுரை எழுதப்படும் நேரத்தில் நடந்திருக்கின்றது. யாழ்.பல்கலைக்கழக யாழ். பல்கலைக்கழகத்தின் கல்வி சாரா ஊழியர்கள் மாணவர்கள் தாக்கப்பட்டதை எதிர்த்து நடத்திய ஆர்ப்பாட்டத்தில் முக்கியமான ஒரு முடிவு அறிவிக்கப்பட்டிருக்கின்றது. இனிவரும் காலங்களில் இறந்தவர்களுக்கு தாமும் மாணவர்களுடன் இணைந்து தீபமேற்றப்போவதாக அறிவித்திருக்கின்றனர்.

இது போன்ற இன உரிமை சார்ந்த நிகழ்வுகளை மாணவர்கள் தனியே நடத்துவதாலேயே தாக்கப்படுகின்றனர். இவ்வாறு பல தரப்பினரும் இணைந்து அதனை நடத்தினால் பொது வெளிக்கு கொண்டுவர முடியும். அடுத்த கட்டமாக பொது மக்களும் அதில் தாமாக முன்வந்து இணைந்து கொள்வர். இழந்து விட்ட ஒரு உரிமை மீளக் கிடைக்கும். அதுவே அடுத்த கட்டம் நோக்கி நம்மை இழுத்துச் செல்லும்.முடக்கப்படுவதற்கான

சந்தர்ப்பங்களும் தயார்

ஒரு அரிய சந்தர்ப்பத்தை புலிகளற்ற இந்த மாவீரர் தினம் தமிழர் தரப்புக்கு தந்து போயிருக்கின்றது. கடந்த காலங்களைப் போல இதனையும் ஆறவிடமால் பற்றிப்பிடித்தால் 30 வருடப் போராட்டத்துக்கு நல்லதொரு விளைவைப் பெற்றுக் கொள்ளலாம். பல்கலைக்கழக சூழலைப் பொறுத்த வரையில் இந்தக் கொதிநிலையை நீண்டகாலத்துக்கு தக்க வைத்திருக்க முடியாது.

அங்கு தற்போது நிலவும் நிர்வாகநிலைமைகள் முற்றிலும் தமிழ்த் தேசிய அரசியலுக்கு முரணானது. உயர்பீடங்கள் பதவிகளுக்காக ஒடுக்கும் அரசின் கால்களில் விழுந்து கிடந்து, அதன் நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாக இயங்குவதை அவதானிக்க கூடியதாகவுள்ளது. மறுபுறத்தில் போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்களும், ஏனையவர்களும் இராணுவப் புலனாய்வாளர்களின் அதீத கண்காணிப்புக்கு உள்ளாகின்றனர். இனிவரும் நாள்களில் மிரட்டல்கள், உயிர் அச்சுறுத்தல்கள், கைதுகள் மேற்கொள்ளப்படலாம். எப்படியாவது இந்த தன்னெழுச்சியை கட்டப்படுத்த வேண்டிய தேவை அதிகாரத் தரப்புக்கு உண்டு.

இவர்கள் என்ன செய்வர்?

இதனைக் கருத்தில் கொண்டு வடக்கில் தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இரு பிரதான அரசியல் கட்சிகளும் தமது எதிர்கால அரசியல் நிகழ்ச்சி நிரலில் மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும். இதில் ஒரு முரணான, மாற்றங்காணப்படவேண்டிய விடயத்தை சுட்டிக்காட்டலாம். மாணவர்கள் தாக்கப்பட்ட நாளன்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றுக்கு அழைப்பு விடுத்திருந்தது.

அந்தக் கட்சியின் ஆர்ப்பாட்டம் எதிர்வரும் 4ஆம் திகதி என அறிவிக்கப்பட்டிருந்தது. உடனடியாக தமிழ் தேசிய கூட்டமைப்பும் ஒரு எதிர்ப்ப்பு ஆர்ப்பாட்டத்துக்கான அறிவிப்பை வெளியிட்டது. அதனுடைய ஆர்ப்பாட்டம் எதிர்வரும் 3ஆம் திகதி. அதவாது தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஆர்ப்பாட்டத்துக்கு முதல் நாள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆர்ப்பாட்டம்.

இப்போதிருக்கின்ற நிலையில் இவ்வாறான போராட்டங்களுக்கு மக்களை அணிதிரட்டுவதென்பது மிகக் கடினம். உயிர்ப்பயமும், கடந்த காலங்களில் போராட்டங்களில் ஈடுபட்டோருக்கு ஏற்பட்ட மோசமான அனுபவங்ளும் பொதுமக்கள் அணிதிரள்வதை அச்சத்துக்குரிய ஒன்றாக மாற்றியிருக்கின்றது. இந்த கட்டத்தில் கூட இரு கட்சிகளும் போட்டியிடுகின்றன. ஏன் இரு கட்சியினரும் இணைந்து ஒரே நாளில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை வெற்றிகரமாக நிகழ்த்த முடியாது?

மாவீரர் நாள், தமிழ்த் தேசியத்தின் எழுச்சி நாளாகவே அடையாளப்படுத்தப்படுகின்றது. அதனையே அந்த நாளுக்கான அறிவிப்புக்களிலும் எழுதி வைத்திருக்கின்றனர். அந்த நாளுக்குரிய எழுச்சியை காலம் இம்முறை உருவாக்கியளித்திருக்கின்றது. அதைப்பற்றிப் பிடித்துக் கொள்வதும், உதறித் தள்ளுவதும் தமிழர் தரப்பிடமே இருக்கின்றது.