அனைத்துலகம்

ரஷ்யாவில் ‘வேட்டை’ கடைக்கு உள்ளே துப்பாக்கி சூடு! 6 பேர் பலி!!

russia-20130422ரஷ்யாவில் இன்று வேட்டைக்கு பயன்படும் பொருட்கள் விற்கும் கடை (hunting shop) ஒன்றில் நடைபெற்ற துப்பாக்கி சூடு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடையில் பணிபுரிந்த விற்பனையாளர்கள் 3 பேர் உட்பட, 6 பேர் கொல்லப்பட்டுள்ளனர். சம்பவ இடத்தில் எடுக்கப்பட்ட தனிப்பட்ட  வீடியோக்களில், கடைக்கு வெளியே விழுந்து கிடக்கும் உடல்களை காணக்கூடியதாக உள்ளது. 6 பேரை சுட்டுக் கொன்ற நபர், கடைக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த BMW காரில் ஏறி பறந்து விட்டார்.

கொல்லப்பட்ட 6 பேரில், 14 வயது சிறுமியும் ஒருவர்.

கடையில் பொருத்தப்பட்டுள்ள வீடியோ கேமராவில் இருந்த பதிவில் இருந்து, துப்பாக்கி சூடு நடத்திய நபரை அடையாளம் கண்டிருப்பதாக போலீஸ் தெரிவிக்கிறது.

ரஷ்யாவின் தெற்கு எல்லையில் உக்ரேனுக்கு அருகில் உள்ள நகரமான பெல்கொரொட் (பெல்கிரேட் அல்ல) நகரைச் சேர்ந்த ஒரு நபர்தான் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் என்று கூறியுள்ள ரஷ்ய போலீஸ், அந்த நபரின் அடையாளத்தை வெளியிடவில்லை.

மாஸ்கோவில் இருந்து சிறப்பு புலனாய்வு குழு ஒன்று சம்பவம் நடந்த இடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடையில் நடைபெற்ற வாக்குவாதத்தால் ஏற்பட்ட சம்பவமா இது என்பதை சொல்ல முடியாதுள்ளது என்று கூறியுள்ள போலீஸ், “காரணம், கடையில் அந்த நேரத்தில் இருந்த அனைவரும் கொல்லப்பட்டுள்ளனர், கொலையாளியை தவிர” என்று தெரிவித்துள்ளனர்.