தமிழீழ விடுதலைப் புலிகளும், அதன் பெயரில் உலாவரும் போலிகளும்- தி.தமிழரசனின்ஆய்வு அறிக்கை-01

Home » homepage » தமிழீழ விடுதலைப் புலிகளும், அதன் பெயரில் உலாவரும் போலிகளும்- தி.தமிழரசனின்ஆய்வு அறிக்கை-01
தமிழீழ விடுதலைப் புலிகளும், அதன் பெயரில் உலாவரும் போலிகளும்- தி.தமிழரசனின்ஆய்வு அறிக்கை-01

ஈழம்5 இணைய வாசகர்களின் வேண்டுகோளுக்கு இணங்கள் தமிழீழ விடுதலைப் புலிகளும், அதன் பெயரில் உலாவரும் போலிகளும் – ஆய்வு அறிக்கை, காலத்தின் தேவை கருதி இன்றில் இருந்து ஒரு தொடராக வெளிவரவுள்ளது. இந்தத் தொடர் தொடர்பில் உண்மைகளையும், தவறுகளையும் சுட்டிகாட்டி உங்கள் கருத்துக்களை எமக்கு எழுதி அனுப்பி வையுங்கள் தேவைப்படின் அவற்றையும் இணைத்துக் கொள்கிறோம். நன்றி

ஐந்தாம் கட்ட ஈழப்போரும், மாவீரகளின் விதைகுழியில் வியாபாரம் பேசியதும் ஏன்!

தவறுகளைச் தட்டிக் கேட்பதாக சொல்லிக்கொண்டு கண்டபடி எழுதித் தள்ளும் சில ஊடகங்கள்  விதை குழியில் வியாபாரம் பேசிய செயலைக் கண்டும் காணாதது போல் இருந்தது ஏன்? தமக்கு சாதகமாக தமக்குப் பிடிக்காதவர்களை குற்றம் சாட்டுவதற்கு இவர்கள் எதை வேண்டுமானாலும் பயன் படுத்துவார்கள் என்பது எமக்குத் தெரியும்,. இருப்பினும் மாவீரர்களின் கல்லறையை வைத்து வியாபாரம் பேசும் இந்த செயற்பாட்டை என்னவென்று சொல்வது?!
2012 மாவீரர் நாளில் தமிழீழத்தில் ஐந்தாம் கட்ட ஈழப்போர் ஆரம்பித்து விட்டோம் என்று சில போராளிகளை இலக்கு வைத்து புலம்பெயர் நாட்டின் தடுப்பு முகாமில் இருந்த சில புல்லுரிவிகளுக்கு பணம் கொடுத்து காணொளி ஒன்று தயாரிக்கப்பட்டு வெளிவந்திருந்தது, அதிலும் விழுப்புண் அடைந்திருந்த இரண்டு போராளிகள் இன்றும் (அதாவது 2012 மாவீரர் நாளில்) வீரச்சாவடைந்துள்ளனர் என்று கூறி இரண்டு மண் திட்டிகளையும் காண்பித்திருந்தனர் இந்த எட்டப்பர்கள்.
இந்தச் செயல் தமிழீழ விடுதலைக்காக களமாடி வீரச்சாவடைந்த மாவீரர்கள் அனைவரின் தியாகங்கள் மீதும், அவர்கள் விதைக்கப்பட்ட கல்லறைகள் மீதும் விலைபேசும் செயற்பாடும், அதற்கு ஒரு பெண் பிள்ளையை பயற்படுத்திய இந்த எட்டப்பர்களின் அருவருக்கத் தக்க செயல் தம் உடலை விற்றுப் பிழைப்பு நடத்தும் விபச்சாரியின் செயற்பாட்டிற்கும் சிறு துளியேனும் வேறுபாட்டைக் காண முடியாது.

ஒருங்கிணைப்புக் குழுக்களின் பொறுப்பாளர்கள் என்று கூறிக் கொள்பவர்கள் தம்மிடம் உள்ள தமிழீழ தேசிய சொத்துக்களை சுருட்டிக் கொள்ளும் நோக்கில் திட்டமிட்டு வெளியிடப்பட்ட அவர்களுடைய இந்தக் காணொளி அனைவராலும் புறக்கணிக்கப்பட்டிருந்த நிலையில், தமிழ் மக்கள் மத்தியில் பெரும் கோபத்தையும் இந்தக் குழுக்கள் மீது ஏற்படுத்தி இருந்தது.
இந்தக் காணொளியை உருவாக்க நியூசிலாந்து, சுவிஸ், பிரித்தானியா, நோர்வே, டென்மார்க், பிரான்ஸ் போன்ற நாடுகளில் இருந்து உருவாக்கப்பட்ட ஒரு குழு பின்னணியில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது. அவர்கள் யார் என்பதும் அடையாளம் காணப்பட்டும் உள்ளது.
தமது சுய நலன்களுக்காக மாவீரர்களின் விதை குழிகளையே வியாபாரப் பொருளாக்க முனைந்த இந்தக் கும்பலின் செயற்பாடுகளை நினைக்கும் பொழுது மனம் வேறு விதமாக சிந்திக்கின்றது, இருப்பினும் இன்றும் எமது கைகள் கட்டப்பட்டுள்ளது.
மாவீரர்களின் வீர வரலாறுகளையும், தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற தன் நிகரில்லா மாபெரும் விடுதலை இயக்கத்தையும், அதன் மரபுகளையும் சீரழிக்கும் இப்படியான சில்லறைத் தனமான செயற்பாடுகளின் தேவை யாருக்கு உண்டு? இதன் ஊடாக சுவிஸ், நியூசிலாந் உள்ளிட்ட ஐரோப்பிய நாட்டு ஒருங்கிணைப்புக் குழுக்கள் சாதிக்க நினைப்பது என்ன?

“போர்க்குற்ற நாள் “முள்ளிவாய்கால் கறுப்பு நாள்” “தமிழினப் படுகொலை நாள்” “தமிழ் இன அழிப்பு நாள்” “செந்நெருப்பு நாள்”

இவ்வாறு வருடத்திற்கு ஒரு பெயரைச் சூட்டுவதன் ஊடாக சாதிக்க நினைப்பது என்ன? அல்லது இன்று வரை சாதித்தது தான் என்ன? பேக்காட்டுக்கு ஒரு போராட்டமும், பேருக்கு ஒரு நிகழ்வும், நடாத்திவிட்டு, வருமானம் ஏற்படுத்தும் வகையில் கலை நிகழ்வுகளையும், விளையாட்டுப் போட்டிகளையும், நடாத்திவிட்டு நாம் தாம் விடுதலைப் புலிகள் என்று கூறி தேசிய சொத்துக்களை கையகப்படுத்தியவாறு குளிர்காய்ந்து கிடக்கப் போகிறீர்களா?

தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவிடம் நாங்கள் கேட்பது! தமிழீழ விடுதலைப் புலிகளின் உத்தியோக பூர்வ அறிக்கையும், அதற்கு எதிரான போலி அறிக்கையும் ஏன்?
இது ஏட்டிக்கு போட்டியானது என்பதற்கு அப்பால், தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் கட்டி வளர்க்கப்பட்ட மரபு ரீதியிலான கொள்கைகளையும், பண்பாடுகளையும் இல்லாது ஒழித்து, தமிழீழ விடுதலைப் புலிகளால் முன்னெடுக்கப்பட்டு வந்த விடுதலைப் போரை ஏற்க மறுக்கின்ற ஒன்றாகவே கருதவேண்டியுள்ளது. அதுவே உண்மையாகவும் உள்ளது.
2009 மே மாதத்திற்கு முன்னர் ஒருங்கிணைப்புக் குழுக்களால் இயக்கப்பட்டு வந்த சில இணையத்தளங்களில் “தமிழீழ விடுதலைப் புலிகள்” எனற போர்வையில் பிரதான தலைப்பிட்டு தமிழர் இனவழிப்பு நினைவு நாளினை “செந்நெருப்பு நாள்” என பிரகடனம் செய்யவேண்டியதன் அவசியம் என்ன?
இந்த செயற்பாடு சிங்கள இனவாத அரசிற்கு துணைபோகும் வகையில், மகிந்தா குடும்பத்தை இனவழிப்பு, மற்றும் போர்க்குற்ற விசாரணைகளில் இருந்து பாதுகாக்கும் வகையில் அறிக்கை “வெளியிடப்பட்டமை கண்டனத்துக்குரிய குற்றம் மட்டுமல்லாமல், மன்னிக்க முடியாத துரோகமும் ஆகும்.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பானது தமிழ் மக்களின் ஆட்சி அதிகாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக உலக நாடுகளால் நோக்கப்படும் நிலையில், புலத்தில் மட்டுமே செயற்படும் ஒருங்கிணைப்புக் குழுக்கள் தனித்தனியாக தமது கருத்துக்களை விடுதலைப் புலிகள் என அடையாளப்படுத்தி மக்களைக் குழப்பும் வகையில் தமிழீழ விடுதலை புலிகளின் தலைமை செயலக அறிக்கைக்கு பதில் அறிக்கையாக வெளியிட்டு வருவதை ஈழ விடுதலையை ஆழமாக நேசிக்கும் எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைமைச் செயலகத்தால் வெளியிடப்படும் அறிக்கைகள் உத்தியோக பூர்வமாக விடுதலைப் புலிகளின் இணையம் ஊடாக மாற்றங்கள் எதுவும் இன்றி தொடர்ந்து வெளிவரும் நிலையில், அந்த அமைப்பின் பெயரால் போலியான அறிக்கைகளை வெளியிடுவதன் பயனாக இந்தக் குழுவிற்கு கிடைக்கப்போகும் பயன் என்ன? தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு எந்த வகையில் அது பயன்படும்? எது எவ்வாறு இருப்பினும் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டமைப்புக்களின் துணைக் கட்டமைப்புக்களின் கடைசி குழுவாக இருந்த இந்த ஒருங்கிணைப்புக் குழுவிற்கு விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முழுமையான அதிகாரத்தைக் கையில் எடுக்கும் ஆசையைக் கொடுத்தவர்கள் யார்? முகமறியா 3,சேரா மான்களா? (இந்த சேரமான்கள் யார் என்பதையும் அவர்களின் நோக்கம் என்ன என்பதையும் இன்னும் ஒரு கட்டுரையில் விபரமாகப் பார்ப்போம்)
வீரச்சாவு அறிவித்தலும், கேணல் தர அதிகாரி ஆக்கியவர்களும் யார்?!
பரிதி அவர்கள் படுகொலை செய்யப்பட்டபோது தமிழ்மக்கள் அனைவருமே பெரும் திகைப்பிலும் அடுத்தது என்னவென்று ஆதங்கப்பட்டும் இருந்த நிலையில், தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர்கள் எவருடனும் கலந்து ஆலோசனை செய்யாமல், சட்டச் சிக்கல்கள் பின் விளைவுகள் எதனையும் கருத்தில் கொள்ளாமல், குறிப்பாக விடுதலைப் புலிகளின் ஒட்டு மொத்த அதிகாரத்தையும் போராளிகளாக இல்லாத இவர்கள் தமது கைகளில் எடுத்துக் கொண்டு, எந்தவித கலக்கமும் இன்றி மறுகணமே கேணல் தர அதிகாரியாக விடுதலைப் புலிகளின் அறிக்கை என போலியான அறிக்கை ஒன்றின் ஊடாக தரப்படுத்தப்பட்ட போது உண்மையில் நாம் அதிர்ந்து போனோம்.

பரிதி அவர்கள் படுகொலை செய்யப்பட்டதை விட இந்தக் குழுக்களின் செயற்பாடு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

பரிதி அவர்கள் சாதாரண ஒரு போராளி அல்ல, தமிழீழ விடுதலை போராட்டம் ஆயுத வழியில் முன்னெடுக்கப்பட்ட காலத்தில் இருந்தே தமிழர்களின் விடுதலைக்காக போராடிய ஒரு போராளி, விடுதலைப் புலிகளுடன் இந்தியப் படைகள் வலிந்து மேற்கொண்ட தாக்குதல்கள் முதல், சிங்களப்படைகளின் முகாம்கள் அழித்தொழிப்புத் தாக்குதல் வரை களமாடிய ஒரு போராளி, புலம்பெயர் தேசத்தில் அவரின் படுகொலை என்பது விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஒரு திருப்பு முனையாக தோற்றம் கொள்ள வேண்டிய ஒன்றை, எட்டப்பர்கள் சிலரின் திட்டமிட்ட செயல்கள் மூடி மறைத்து விட்டன.

ஆம் அவரை ஒரு விடுதலைப் புலிகளின் போராளியாக, அதுவும் கேணல் தர அதிகாரியாக தரப்படுத்தியமை பிரித்தானியாவின் ஸ்கொட்லான்ட் யார்ட், பிரான்ஸ் காவல்த்துறை, மற்றும் நீதித்துறையின் தீர்மானங்களில் மாற்றத்தை ஏற்படுத்தியது, இந்தச் செயலும் திட்டமிட்ட சதியாகவே பதிவாகியுள்ளது.

போராட்ட களத்தில் களப்பலியாகும் ஒரு போராளியை அவரின் தரத்திற்கு அமைவாக பதவி நிலையை வழங்குவது ஒரு உயர்நிலைத் தளபதியாக இருக்கும் பொழுது, புலத்தில் படுகொலை செய்யப்பட்ட ஒரு போராளியை கேணல் தர அதிகாரியாக பதவி வழங்குவதற்கு, பிரிகேடியர் தரத்தை தாண்டிய நிலையில் இருக்கும் ஒரு உயர் அதிகாரியால் மட்டுமே அவ்வாறு பதவி வழங்க முடியும்.

இந்த நிலையில் ஒருங்கிணைப்புக் குழுக்களில் அவ்வாறு ஒரு உயர் அதிகாரி உள்ளாரா என்பது எமது கேள்வி? அவ்வாறு ஒரு அதிகாரி இந்தக் குழுக்களில் இருப்பதற்கு எள் அளவும் சந்தர்ப்பம் இல்லை. காரணம் அனைத்துலக தொடர்பகத்தில் மட்டுமே போராளிகள் இருந்தனர், தொடர்பகத்தின் கீழ் மக்களையும் செயற்பாட்டாளர்களையும் கொண்டு செயற்பட்ட இந்தக் குழுக்களில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் போராளிகள் எவரும் அங்கம் வகிப்பதில்லை என்பதே உண்மை. போராளி பரிதி அவர்கள் கூட அனைத்துலக தொடர்பகத்தின் பிரான்ஸ் நாட்டுக்கான பொறுப்பாளர் என்பது தான் உண்மை குழுவின் பொறுப்பாளர் அல்ல.

உதாரணமாக பிரித்தானியாவில் செயற்படும் ஒருங்கிணைப்புக் குழுவில் போராளிகள் எவரும் இல்லை, சாஜகான் கூட அமைப்பில் இருந்து முற்றுமுழுதாக விலகிய ஒருவர் தான், சாதாரண மக்களையும் ஆதரவாளர்களையும், செயற்பாட்டாளர் களையும் உள்வாங்கி, மக்களுக்காக நடத்தப்படும் மக்கள் கட்டமைப்புத்தான் அனைத்து நாடுகளிலும் செயற்படும் இந்த ஒருங்கிணைப்புக் குழுக்கள்.இந்தக் குழுக்களின் செயற்பாடுகளே முள்ளிவாய்க்கால் பேரழிவுக்கும் காரணமாக அமைந்தது.

போராளி பரிதி அவர்கள் 1990 களின் மண்டைதீவுப் பகுதியில் சிங்களப் படை முகாம்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் நடவடிக்கையின் பின்னர் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து விலகி, நாட்டை விட்டு வெளியேறி இருந்தவர், இந்த நிலையில் தான் அவர் ஒரு செயற்பாட்டாளராக செயற்பட்டு வந்தவர், பின்னர் சமாதான காலத்தில் நாடு திரும்பிய அவரை மீண்டும் இயக்கத்தில் இணைந்து செயற்படுமாறு அழைப்பு விடுத்ததை அடுத்து இயக்கத்தில் இணைந்து கொண்டவர், அதன் பின்னர் பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவில் இருந்து விலகி இருந்தவாறு ஆலோசனைகளை அந்தக் குழுவிற்கு வழங்கி செயற்பாடுகளை முன்னெடுத்து வந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

2009 ஆயுத அமைதிப்படுத்தலின் பின்னர் சிலர் குழுவாதம் பேசி விடுதலைப் புலிகள் இயக்கத்தையும், அதன் போராளிகளையும் புறம்தள்ளி, கட்டமைப்புக்களை சீர்குலைக்க முனைந்து குழப்பங்களை ஏற்படுத்தி, தான்தோன்றித் தனமான போக்கில் ஒருங்கிணைப்புக் குழுக்களை வழிநடத்த முனைந்த அவரது நெருங்கிய நண்பர்கள் சிலரை எதிர்த்த பரிதி அவர்கள், தனக்கே உரிய திறமையால் 2009, இன் பின்னர் பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவை பொறுப்பேற்று சிதைவுறாமல் வழிநடத்தி வந்தவர்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் எதிர்கால செயற்பாடுகளை கருத்தில் கொண்டு குழப்பங்களைத் தவிர்த்து காலத்தின் தேவை உணர்ந்து 2012 இல் தலைமைச் செயலகத்துடன் இணைந்து செயற்பட பரிதி அவர்கள் முன்னெடுத்த நடவடிக்கைகள் தான் அவரின் படுகொலைக்கு காரணமாக அமைந்தது. பரிதி அவர்கள் தலைமைச் செயலகத்துடன் இணைந்து செயற்படுவதை விரும்பாத அவருடன் கூடவே இருந்த எட்டப்பர்கள் எடுத்த முடிவே அவரின் வீரச்சாவுக்கும் காரணமாக அமைந்தது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகம் வெளியிட்ட வீரச்சாவு அறிவித்தல் அறிக்கையில் போராளி பரிதி, அவர்களை “தேசிய செயற்பாட்டாளராக” மதிப்பளித்திருந்தனர். ஒரு போராளியை செயற்பாட்டாளராக மதிப்பளிக்கப்பட்டிருந்ததை ஆட்சேபித்து அவர்களுடன் தொடர்பு கொண்டு கேட்ட பொழுது “இன்றைய சூழலில் பரிதி அவர்களுக்கு எதிரான வழக்கு பிரான்ரில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் அவர் தான் ஒரு போராளி இல்லை, செயற்பாட்டாளர் என்ற விவாதத்தின் அடிப்படையில் தனது வழக்கை எதிர்கொண்டு வரும் நிலையில், அவரின், அவரது குடும்பத்தினரின் நன்மைகள், சட்டச் சிக்கல், மற்றும் புலம்பெயர் தேசத்தில் முன்னகர்த்தப்படும் தமிழீழ விடுதலைப் போராட்டம் தொடர்பிலான எதிர்கால செயற்பாடுகளையும் சட்டச் சிக்கல்களையும் கருத்தில் கொண்டு அவரை நாம் தேசிய செயற்பாட்டாளராக மதிப்பளித்துளோம்.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீள் செயற்பாடுகள் மக்கள் மயப்படுத்தப் படும் போது பரிதி அவர்கள் உரிய அதிகாரத்துடன் லெப்.கோணல் தர அதிகாரியாக மாவீரர்கள் பட்டியலில் இணைக்கப்படுவர் என பதில் வழங்கியிருந்தனர்.

ஆனால் “கேணல்” தரம் வழங்கிய குழுவினருடன் இது தொடர்பில் கேட்ட பொழுது அவர்கள் பதில் எதனையும் வழங்கவில்லை, அவர்களுடன் எம்மால் எதுவும் கலந்துரையாடவும் முடியவில்லை. எங்கள் கேள்விகளுக்கு இன்றுவரை எதுவித பதில்களும் இல்லை? பரிதி அவர்களுக்கு கேணல் தரம் வழங்கிய இந்தக் குழுவின் பிரிகேடியர், அல்லது அதையும் தாண்டிய உயர் அதிகாரி யார் என்பதும் தெரியவில்லை.
இவ்வாறு 2009, மே19 இன் பின்னர் தமிழீழத்திலும், புலம்பெயர் தேசத்திலும் செயற்பட்டு வந்த தேசிய செயற்பாட்டாளர்கள் பலர் சாவடைந்துள்ள நிலையில், இரண்டு பிரிவினராலும் கண்டுகொள்ளாமல் விடப்பட்ட சம்பவங்களும் உள்ளன. இனி வரும் காலங்களில் இப்படியான செயற்பாடுகள் நடைபெறாமல் சம்மந்தப்பட்டவர்கள் கவனத்தில் கொள்ளவேண்டும். உதாரணத்திற்கு சில சம்பவங்கள்.
*இராசையா நவநாயகம் அவர்கள்!- அவர்களை நாட்டுப் பற்றாளராக மதிப்பளித்தமையும்! மதிப்பளிக்காதமையும்!
அண்மையில் பிரித்தானியாவில் 25வருடங்களுக்கும் மேலாக தேசிய செயற்பாட்டளராக செயற்பட்டு வந்த திரு. இராசையா நவநாயகம் அவர்கள் காலமாகியிருந்தார் அவரை பிரித்தானியா தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினர் தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற போலி அறிக்கை ஊடாக மதிப்பளிப்பதாக நினைத்து அவரின் செயற்பாடுகளை அவமதித்து இருந்தனர்.
விடுதலைப் புலிகள் என்ற பெயரில் போலியான அறிக்கையினை வெளியிட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இந்த அடாவடித் தனத்தை தடுத்து நிறுத்த பல முயற்சிகளை பலர் எடுத்தும் பயன் எதுவும் கிடைக்கவில்லை. அந்த அறிக்கையை அமரர். இராசையா நவநாயகம் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வில் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் கருதப்படும் தனம் அவர்கள் மேடையில் வாசித்து இருந்தார். அதேவேளை தமிழீழ விடுதலைப் புலிகள் இராசையா நவநாயகம் அவர்களை நாட்டுப்பற்றாளராக மதிப்பளிகாத்து எமக்கு பெரும் குழப்பத்தை பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.
*இராஜசூரியர் அவர்களை நாட்டுப்பற்றாளராக மதிப்பளித்தமையும் மதிப்பளிக்காதமையும்!

தமிழ் மக்களுக்கும் தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கும் அளப்பரிய பணிசெய்த திரு. நடராஜா இராஜசூரியர் (ரங்கன் / குபேரன்) அவர்கள் 27.12.2012 அன்று சுகவீனம் காரணமாகச் பிரித்தானியாவில் சாவடைந்தார். அவருடைய சேவையை பாராட்டி தமிழீழ விடுதலைப் புலிகள் அவரை நாட்டுப் பற்றாளராக மதிப்பளித்து இருந்தனர் அந்த அறிக்கை வழமை போல் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடகப் பிரிவினரால் வெளியிடப்பட்டிருந்தது.

ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினர் திரு. நடராஜா இராஜசூரியர் அவர்களை கண்டுகொள்ளாமல் விட்டு விட்டனர். இதற்கான காரணம் என்ன வென்றும் தெரியாமல் இருந்தது. அவர் ஒரு முன்னாள் போராளி என்பதன் காரணமாக அவர்கள் அவரை மதிப்பளிக்க வில்லையாம் அவரை தாம் மாவீரர் பட்டியலில் இணைத்துள்ளதாக தனம் அவர்கள் தெரிவித்திருந்தார், சரி அதையாவது அறிக்கையின் ஊடாக தெரிவித்திருக்கலாம் தானே என தனம் அவர்களிடம் கேட்டபொழுது அதற்கு சட்டச் சிக்கல் என்று கூறி இது தொடர்பில் மேலதிகமாக எதுவும் கேட்ட வேண்டாம் என்று நழுவி விட்டார்!
அப்பொழுத அருகில் இருந்த போராளி ஒருவர் “பரிதி அண்ணையை கேணலாக அறிவிக்கும் பொழுது வராத சட்டச் சிக்கல் ரங்கன் அண்ணைக்கு அறிவிச்சா வந்துவிடுமாம், அப்படியானால் பரிதி அண்ணைக்கும் அறிவிக்காமல் இருந்திருக்கலாம் தானே இயக்கம் வரும்போது அதையும் அறிவிச்சிருக்கும், இதை எல்லாம் என்ன வென்று சொல்லுவது, கேட்பவன் எல்லாரையும் துரோகி ஆக்கிவிட்டு இவர்கள் என்னதான் செய்யப்போகிறார்களோ தெரியவில்லை” என்று கூறி தனக்குள்ளே முணு முணுத்தபடி பேச்சை நிறுத்திக் கொண்டார். என தெரிய வருகிறது.

தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் வழங்கிய கட்டளையை ஏற்று, சயனைட் குப்பிகளைக் கழற்றி தமது தளபதிகளின் கைகளில் கொடுத்துவிட்டு, வெறுங்கைகளுடன் வெள்ளைக் கொடிகளை ஏந்தியவாறு சிங்களப் படைகளிடம் சரணாகதி அடைந்த எங்கள் தேசப் புதல்வர்களான போராளிகளிடம் இறுதிவரை இருந்த தலைவருக்கும், அவருடைய வார்த்தைகளுக்கும் கட்டுப்படும் விசுவாசம்! ஒரு சிறு துளியாவது புலம்பெயர் செயற்பாட்டாளர்களிடமும் இருக்கட்டும்!

உண்மைகள் தொடரும்!…..

போராளிகள், செயற்பாட்டாளர்கள் என்ற இன்றும் சிறீலங்கா, ஐந்திய புலனாய்வாளர்களுடன் தொடர்பில் இருந்து புலம்பெயர் தேசத்தில் குழப்பங்களை ஏற்படுத்தும் நபர்கள் சிலரின் உண்மையின் பின்னணி விரைவில்….

மானம் ஒன்றே வாழ்வெனக் கூறி வழியில் நடந்தான் மாவீரன்! அவன் போன வழியில் புயலென எழுந்து போரில் வெல்வார் புலிவீர!
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.

ஈழம்5.இணையம் தி.தமிழரசன். தொடர்புகளுக்கு skyp: eelam5.com

தமிழீழ விடுதலைப் புலிகளும், அதன் பெயரில் உலாவரும் போலிகளும்- ஆய்வு அறிக்கை -00

Comments Closed

%d bloggers like this: