சீமானா?? மாயமானா?? – சாத்திரி

Home » homepage » சீமானா?? மாயமானா?? – சாத்திரி

sஅண்மைக்காலத்தில் சமூகவலைத்தளங்களிலும் இணையப்பக்கங்கள் என எங்கும் சர்ச்சைக்குரிய விவாதங்களிற்கு சொந்தக் காரராக இருப்பவர் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான்.இவர் சர்ச்சைக்குள்ளாவதற்கு அதிக காரணங்கள் இவர் கட்சி நடாத்துவதே ஈழத் தமிழர்களையும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பையும் அதன் தலைவர் பிரபாகரனையும் மையமாக வைத்து என்பதால்தான்.அதே நேரம் தமிழ்நாட்டு அரசியல் கட்சி ஒன்றிற்கு  புலம் பெயர் நாடுகளில் வாழும் ஈழத் தமிழர்களால் இணையக் கிளைகள் நடாத்தப் படுவதும் சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு மட்டுமே.அதென்ன இணையக் கிளைகள் என்று யோசிக்கவேண்டாம்.அதாவது நாம் தமிழர் கட்சிக்கு வெளிநாடுகளில் கிளை அலுவலகங்கள் என்று என்று எதுவும் இல்லாமல் கனடா. பிரான்ஸ் .இங்கிலாந்து .ஜேர்மனி.என இணையத்தில் மட்டுமே கிளைகள் இயங்குவதால்  அவற்றை இணையக் கிளைகள் என அழைத்தேன்.இந்த இணையக் கிளைகளை நடாத்துபவர்கள் யாரெனில் கடந்த  காலங்களில் தமிழ்த்தேசியத்தினை  மூலதனமாக்கி  அதில் வியபாரம் செய்து ..வந்தவர்களேயாவார்கள்.முள்ளி வாய்க்கால்  பேரவலத்தின் பின்னரும் தலைவர் வருவார்  அடுத்த கட்ட ஈழப்போர் என ஒரு மாதிரி மூன்று வருடங்களை ஓட்டியவர்களிற்கு  இனி நான்காவது வருடத்தை தாண்டியும் தலைவர் வருவாரென சொல்லி புலம்பெயர் தமிழரிற்கு நிலாச்சோறு ஊட்ட முடியாது என்பதால்  புலம்பெயர் வாழ் தமிழர்களிற்கு ஈழம் பெற்றுத் தருவோமென  கூறியபடி தொடர்ந்தும் தங்கள் வியாபாரத்தினை  நடாத்த  இவர்களால் கண்டு பிடிக்கப் பட்ட புதிய தலைவர்தான் சீமான்.

இந்த வருடத்திலிருந்தே  தலைவர் வருவார் அடுத்தகட்ட ஈழப்போர் என்கிற பேச்சுக்கள் மறைந்து  சீமான் தமிழீழம் வாங்கித் தருவார் என்கிற புதிய அடுத்த மாயப்பரப்புரைகள் பரப்பத் தொடங்கப் பட்டு விட்டது மட்டுமல்லாமல் அண்மைக் காலத்தில் சீமானின் ஜரோப்பிய பயணமும் அவரது பேச்சுக்ககளும் அவரிற்காக  ஜரோப்பிய நாடுகளில் சேகரிக்கப் பட்ட நிதிகளும் தமிழ்த்தேசிய வியாபரம் இனி சீமானின் பெயரால் தொடப் போகின்றது என்பதையே உணர்த்தி நிற்கின்றது.அது மட்டுமல்லாமல் சீமான் தமிழ் நாட்டின் முதலமைச்சரானால்  தமிழீழம் கிடைத்துவிடுமென  அப்பாவித்தனமாக நம்பும் புலம் பெயர் தமிழர்களும் பலர் இருக்கத்தான் செய்கின்றனர்.

ஈழத் தமிழர் விகாரத்தினையும் புலிகளையும் தங்கள் பரப்புரைகளிற்காக தமிழக அரசியல் கட்சிகள் பயன் படுத்துவது இது ஒன்றும் முதற் தடைவையுமல்ல அதே நேரம் சீமான்தான் முதற்தடைவையாக  ஈழத் தமிழரை பற்றி முதன் முதலாக கதைப்பவரும் அல்ல.தமிழக அரசியலில் தனது கட்சிப் பரப்புரைக்காக  ஈழத் தமிழரையோ தமிழீழ விடுதலைப் புலிகளின் பெயரையோ பாவிக்கமல் உண்மையாக  உதவும் நோக்கோடு உதவிய ஒரேயொருவர்.எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்கள் மட்டுமே.அதற்கு பின்னர் அனைத்துக் கட்சிகளும் அதன் தலைவர்களுமே  ஈழ விவகாரத்தினை  பேசி தமிழ் நாட்டில்  தமிழர்கள் என்கிற உணர்வலையை  எழுப்பி தங்கள் கட்சி வளர்ச்சிக்காவே அனைவரும் பாவித்திருக்கிறார்கள்.அதே வரிசையில் புதிதக இணைந்திருப்பவர்தான்  சீமான்.

அதே நேரம் தனியாக ஈழத் தமிழர் பிரச்சனையை மட்டுமே கதைப்பதானால்  தமிழ்நாட்டில் உணர்வலைகளை எழுப்பி அதன் மூலம் முதலமைச்சராகி விடலாம் என்பது நடக்காத காரியம்.அங்கு ஒவ்வொரு தேர்தலும் மக்களின் அடிப்படைப் பிரச்சனையும் பண பலமுமே  ஆட்சியை  தீர்மானிக்கின்றது.கடந்த தேர்தலில் தமிழ் நாட்டின் மின்சாரப் பிரச்சனையும் .விலைவாசி .பண பலம் என்பதோடு  முள்ளி வாய்காலில் கொல்லப் பட்ட தமிழர்களின் புகைப் படங்களும் உணர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. இனி அடுத்த தேர்தலில் முள்ளி வாய்க்கால் படங்கள் பழையதாகிப் போயிருக்கும் ஆனால் அதே மின்சாரம். விலைவாசி . பணபலம் என்பனதான் தமிழ்நாட்டின் அடுத்த முதல்வரை தீர்மானிக்கப் போகின்றது.இவற்றை தவிர்து தனியாக ஈழத் தமிழர் பிரச்சனைமட்டுமே தமிழக முதல்வரை  தீர்மானிக்கின்றது எனப்பார்த்தால் வை.கோ அவர்கள் எப்போதே  முதலமைச்சராகியிருக்கவேண்டும். வை.கோ அவர்கள் தி.மு.க விலிருந்த காலத்தில்   அதன் தலைவர் கருணாநிதியை விடுதலைப் புலிகள் அமைப்போடு இணைந்து சதி செய்து கொலை செய்யப் பார்த்தார் என்று குற்றம் சாட்டப்பட்டு 1992 ம் ஆண்டு வெளியேற்றப் பட்டார்.இவர் தி.மு.க விலிருந்து வெளியேற்றப் பட்டதை தொடர்ந்து  மனமுடைந்த இவரது விசுவாசிகள் ஜந்துபேர் தீக் குளித்து இறந்து போனார்கள். அவர்களது மரணச் சடங்கில் கலந்து கொண்டு உணர்ச்சிகரமாக உரையாற்றிய வை.கோ  அவர்கள் தமிழகத்தில்  தி.மு.க  என்கிற  கட்சியை  இல்லாமல் செய்து  அடுத்த ஆட்சியை பிடிப்பது உறுதி இது இறந்து போனவர்களின் சாம்பல் மீது சத்தியம் என்று உணர்ச்சிகரமாக உரையாற்றியிருந்தார்.இவர் தி. மு.க.விலிருந்து வெளியேற்றிய  பின்னர் இவரேடேயே பல தி.மு.க முக்கிய உறுப்பினர்களும் கணிசமான தொண்டர்களும் பிரிந்து போய் மறு மலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் என்கிற கட்சியை உருவாக்கினார்.புலிகளைப் பற்றியும் ஈழத் தமிழர்களைப் பற்றியும் நிறையவே பேசினார் என்தோடு மட்டுமல்லாமல் வன்னியில் பிரபாகரனைப்போய் சந்தித்து  அவரிற்கு பக்கத்தில் நின்று புலிகளின் சீருடையோடு படமும் எடுத்திருந்தார்.ஆனாலும் கட்சி தொடங்கி இருபதாண்டுகளிற்கு மேலாகியும் தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க முடியவில்லை யென்பது மட்டுமல்ல எந்த. தி. மு.க வை தமிழகத்தில் இல்லதொழிப்பேன் என சபதமெடுத்தாரோ அதே தி.முக வோடு கூட்டணி வைக்கிறார் என்கிற செய்தியை படித்தபோது அவரிற்காக தீக்ககுளித்து  இறந்து போனவர்களின் முகங்கள்தான்  முன்னால் வந்து போனது.

vai.jpg
அடுத்ததாக  பொடா சட்டத்தில் கைது செய்து ஒன்றரை ஆண்டுகள் சிறையில் அடைத்த ஜெயா அம்மையாரோடு கூட்டுவைத்தார்.அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா என்று தட்டிக் கழித்து விட்டு பார்த்தாலும்  இப்படி மாறி மாறி கூட்டு வைத்தும் உணர்ச்சிகரமாக  நாடி நரம்புகள் புடைக்க நான்கைந்து மணித்தியாலங்கள்  தொடர்ச்சியாக நா  வரண்டு போகுமளவிற்கு  பேசக்கூடிய வை.கோ அவர்களாலேயே  முதலமைச்சராக மட்டுமல்ல  காத்திரமான ஒரு அமைச்சு பதவியையே  பெற்றுக் கொள்ள முடியாது போனது மட்டுமல்லாமல் அடுத்து வரும் தேர்தல்களிற்கு பேரம் பேசும் சக்தியையும் இழந்து கொடுப்பதை வாங்கவேண்டிய நிலைக்குத் தள்ளப் பட்டுள்ளார்.

அடுத்ததாக ஈழத் தமிழர்களைப் பற்றி அதிகம் கதைத்தவர் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர்  ராமதாஸ் அவர்கள்.90 ம் ஆண்டு கட்சியைத் தொடக்கியவர் ராஜுவ்காந்தி கொலை செய்யப் பட்ட பின்னர் இந்தியாவிலேயே ஈழத் தமிழர் அல்லது  விடுதலைப் புலிகள் என்கிற பெயரையே உச்சரிக்கப் பயப்பட்ட வேளையில் ராஜுவ் காந்தி கொலையில் சம்பந்தப் பட்டவர்கள் என குற்றம் சாட்டப் பட்டு துாக்குத் தண்டனையும் ஆயுள் தண்டனையும் பெற்ற 26 பேரிற்கு ஆதரவாக போராட்டம் நடத்தினார்.அத்தோடு நின்று விடாமல் அவர்களிற்கு ஆதரவாக உச்ச நீதி மன்றத்தில் மேன்முறையீடு செய்யவும் முயற்சிகள் நடந்து அதற்கு ஆதரவாக ஒரு குழு அமைக்கப் பட்டு அதற்கு தலைவராக ஜக்கிய ஜனதா தளக் கட்சியின் தலைவரான ஜேர்ச் பெர்ணான்டஸ் பொறுப்பாக நியமிக்கப் பட்டு மேன் முறையீடும் செய்யப் பட்டது.அதன் காரணமாக தண்டனை பெற்ற 19 பேர் விடுவிக்கப் பட்டனர். இங்கு தன் கட்சியை வளர்ந்துக் கொள்ள ராமதாஸ் இந்தப் பிரச்சனையை கையில் எடுத்திருந்தாலும் 19 பேர் நன்மையடைந்திருக்கிறார்கள். ஆனால் அவரும் பின்னர் தனது கட்சி உறுப்பினர்கள் அமைச்சரவைகளில் அங்கம் வகித்த்பொழுது ஈழம். விடுதலைப் புலிகள் என்கிற பெயர்களை அடக்கியே வாசித்தார் என்பது மட்டுமல்லாமல் ஜார்ச் பெர்ணான்டஸ் பின்னர்  இந்தியாவின் பாது காப்பு  அமைச்சராக இருந்த காலத்தில்  ஈழத்தமிழரைப் பற்றி வாயே திறக்கவில்லையென்பது மட்டுமல்ல விடுதலைப் புலிகளின் ஆயுதக் கப்பல் ஒன்றும் இந்திய கடற்படையின் உதவியோடு இலங்கைக் கடற்படையினர் தாக்கியழித்திருந்தனர் என்பதும் குறிப்பிடத் தக்கது.
parties.jpg
அதற்கடுத்ததாக ஈழத் தமிழர்கள் பிரச்சனை தீரும்வரை பிறந்தநாளே கொண்டாட மாட்டேன் என்றும்   அறிவித்து அப்படியே  செய்தும்  தன்னை  பிரபாகரன் விசுவாசியக காட்டி தனது மகனிற்கு பிரபாகரன் என்று பெயரும் வைத்த விஜயகாந்த்  சட்ட மன்றத்திற்குள் நுளைந்ததுமே ஈழத் தமிழர்  என்கிற வார்த்தையை எப்போதவதுதான் உச்சரிக்கிறார் என்பது மட்டுமல்ல  மீண்டும் கேக் வெட்டி பிறந்தநாளும் கொண்டாடத் தொடங்கி விட்டார். அடுத்தாக தி. மு. க தலைவர் கலைஞர் கருணாநிதி பற்றி நான் எழுதித் தான் இங்கு தெரியவேண்டும் என்பதில்லை பதவி போனதும் டெசோவை  தூக்குவதும் பதவிக்கு வந்ததும் அதனை சுருட்டி வைப்பதும் அவரிற்கு வழைமையனதொன்றாகி விட்டது. அதோடு விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் வீரத்தை பார்த்து வியந்தே  தனது கட்சிக்கு விடுதலைச் சிறுத்தைகள் எனப் பெயரிட்டேன் என்ற திருமாவளவன்.புதிய தமிழகம் கட்சி கிருஸ்ணசாமி.திராவிடர் கழகம்வீரமணி .லட்சிய  திராவிட முன்னேற்றக் கழகம் ரி. ராஜேந்தர் என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.இப்படி  தமிழகத்து அரசியல் வாதிகளின் ஈழத் தமிழர் அக்கறை என்பது  அவர்களையும் அவர்களது கட்சியை வளர்த்துக்கொள்ளவுமே பயன்படுத்தப்படுகின்றதென்பதை  பார்த்துப் பார்த்து அலுத்துப்போயிருந்த நேரத்தில்தான் புதிதாக புலிக்கொடியோடு புறப்பட்டிருக்கிறார் சீமான்.
புலம் பெயர் ஈழத் தமிழர்கள் நினைப்பது போல் சீமான் தமிழ்நாட்டின் முதலமைச்சரானால் .ஈழம் கிடைத்துவிடும் என்றால்( ஒரு பேச்சிற்குத்தான்)  அதற்கு சீமான் முதலில் முதலமைச்சராக வேண்டும். கணிசமான  தொண்டர்களோடும் அரசியலில் நீண்டகால அனுபவத்தோடும் தேர்தலில் குதித்த வைகோ அவர்களாலேயே கட்சி தொடங்கி இருபதாண்டுகளாகியும் முதலமைச்சராக வரமுடியாதிருக்கும்போது  இது வரை தமிழ் நாட்டில் உள்ள 12524 ஊராட்சி மன்றங்களில்  ஒன்றில் கூட ஊராட்சி  மன்றத் தலைவராக  மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத சீமான் முதலமைச்சராக வருவதற்கு ஒரு நாற்பதாண்டுகளாவது தேவைப் படும்.சீமானிற்கு  எத்தனை வயது என்பதில் ஒரு குழப்பம் அண்ணளவாக ஒரு நாற்பது என்று வைத்துக்கொண்டாலும்  அவர் தனியாக போட்டியிட்டு முதலமைச்சராக வரமுடியாது  மாறி மாறி கூட்டணி வைத்து கட்சியை வளர்த்து  முதலமைச்சராக வரும்போது அவரிற்கு வயது எண்பது.அப்பொழுது  அவர் ஈழத்தமிழரைப் பற்றி கவலைப் படுவாரா  அல்லது தனது பிள்ளைகள் பேரப் பிள்ளைகளிற்கான சொத்துக்களைப் பற்றி கவலைப்படுவாரா என்பது கேள்விக்குறியே. அதே நேரம் இன்னும் நாற்பது ஆண்டுகள் கழித்து ஈழத் தமிழர்கள்  தமிழர்களாக இருப்பார்களா??அல்லது ஈழத்தில் தமிழர்களே இருப்பார்களா என்பது அடுத்த பிரச்சனை.

எல்லாம் சரி சீமான் முதலமைச்சராகி விட்டாலும் ஈழம் ஒன்றும் பெற்றுத்தர முடியாது சட்ட மன்றத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றலாம்.ஜெயலலிதா அம்மையார் நிறைவேற்றாத தீர்மானங்களா?? தனித் தமிழீழம் பிரிந்து போவதற்கு  ஜ.நா சபை மேற்பார்வையில் வாக்கெடுப்பு நடாத்தபட வேண்டும்.மகிந்த ராஜபக்சவை சர்வதேச நீதி மன்றத்தில் நிறுத்தி தண்டனை வாங்கிக் கொடுக்கவேண்டும் .என்கிற தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டு இந்தியப் பிரதமரிற்கு கடிதங்களும் அனுப்பியுள்ளார். சீமான் முதலமைச்சரானாலும்  இதுவரை சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட  ஆயிரக் கணக்கான  தீர்மானங்களோடு சேர்த்து இன்னொரு தீர்மானத்தை நிறைவேற்றி பிரதமருக்கு கடிதம் அனுப்பலாம். அவ்வளவுதான். அப்போ சீமான் ஈழப் பிரச்சனையை தீர்ப்பதென்றால் என்னதான் செய்யவேண்டும் என்கிறீர்களா?..அதற்கு  அவர் இந்தியாவின் பிரதமராகவேண்டும் .தமிழகத்தின் முதலமைச்சராகவே இன்னும் நாற்பதாண்டுகள் என்றால் இந்தியாவின் பிரதமராவதற்கு  இன்னுமொரு நாற்பதாண்டுகள் தேவைப்படும்.அப்போ சீமானிற்கு நூற்றியிருபது  வயது…..என்ன இப்பவே கண்ணைக கட்டுதா?..எனக்கும் அப்படித்தான்.இறுதியாக  இங்கு நடந்த ஒரு சம்பவத்தையும் தெரிவிக்கிறேன்.வன்னி இறுதி யுத்தத்தின்போது மே மாதம் எட்டாம் ஒன்பதாம்  திகதிகளில் புலிகள் அமைப்பு தங்களின் இறுதி முடிவுநெருங்கி விட்டது சரணடைபவர்கள் சரணடையலாம் மற்றையவர்கள் இறுதி வரை போராடுவது என்கிற முடிவை பலர் எடுத்த பின்னர்  முக்கிய தளபதிகளின் மனைவிகள் மற்றும் அவர்களது பிள்ளைகளைகள் என சுமார் 56 பேர்வரையில் எப்படியாவது பத்திரமாக நாட்டை விட்டு வெளியேற்றிவிட முடிவுசெய்துகடற்புலிகளின் ஒரு பிரிவினர் அதற்கான  வேலைகளில் இறங்கியிருந்தார்கள். அவர்களது முதலாவது தெரிவாக தமிழ்நாடு இருந்தது  அங்கு கொண்டுபோய் சேர்த்து விட்டால் அவர்கள் சாதாரண அகதிகளைப் போல உயிர் பிழைத்து வாழ்ந்து விடுவார்கள் என்று நம்பினார்கள்.அது மட்டுமல்லாமல் அந்த இறுதிக கணங்களிலும் தங்களிற்கு ஆதரவான தமிழ்நாட்டுத் தலைவர்களிடம் அவர்களிற்கு நம்பிக்கையிருந்து கொண்டேதான் இருந்தது.அதே நேரம் தமிழ் நாட்டு தலைவர்களது தொலைபேசிகள் அனைத்தும் ஒட்டுக் கேட்கப் படும் என்பதால் புலிகள் அவர்களோடு நேடியாக தொடர்புகளை ஏற்படுத்தாமல் ஜரோப்பிய நாடுகளில் இருந்தவர்கள் மூலமாக தொடர்புகளை ஏற்படுத்தியிருந்தனர்.

ஜரோப்பாவிலிருந்து வை.கோ வை தொடர்பு கொண்டவர்கள் நிமையை அவரிற்கு சொல்லி கடற்புலிகள் தங்கள் உயிரைக் கொடுத்தாவது  பெண்களையும் குழந்தைகளையும் தமிழ் நாட்டுகரைகளில் இறக்கி  விடுவார்கள் நீங்கள் அதற்கு உதவவேண்டும் என்றதும்.எனக்கு இப்போ தேர்தல் வேலைகள் அதிகம் ஊர் ஊராக பயணம் செய்யவேண்டும் அதெல்லாம் முடியாது என்று தனது தொலைபேசியை நிறுத்தி விட்டிருந்தார்.அதே போல திருமாவளவன்.சு.ப.வீரபாண்டியன் .நெடுமாறன்.என்று தொடர்புகொண்ட ஈழத் தமிழ் ஆதரவுத் தலைவர்கள்  பட்டியல் நீளமானது.தங்களை யாரும் தொடர்பு கொள்ளவில்லையென இப்போது அவர்கள் மறுப்பறிக்கை விடலாம் அவர்கள்தான்  அறிக்கைகள் விடும் அரசியல் வாதிகளாச்சே ஆனால் அன்றுஅவர்களோடு தொடர்புகளை ஏற்படுத்திய பலரில் நானும் ஒருவன்.தமிழ் நாட்டு தலைவர்களிடம் இருந்து சாதகமான பதில்கள் எதாவது வரும் என காத்திருந்தபோதுதான் மே.11 ந்திகதி இலங்கை இராணுவத்தின் மோசமான செல் தாக்குதலில் பலர் கொல்லப் படவே இனியும் இந்த தமிழ்நாட்டு தலைவர்களை நம்பிக் கொண்டிருப்பதில் பயனில்லை என முடிவெடுத்து. பின்னர் தனிப்பட்ட நட்புகள் மூலம்  தொர்புகள் ஏற்படுத்தப் பட்டு சிறிய படகுகள் மூலம்பலர் தமிழ் நாட்டிற்கும் பலர் இந்தோனேசியா தீவுகளிற்கும் கொண்டு போய் சேர்க்கப் பட்டனர்.சிலர் கடற்படையினரின் தாக்குதலில் இறந்து போனார்கள்.

அன்று தமிழ்நாட்டு தலைவர்கள் உதவ மறுத்து தங்கள் கைத் தொலைபேசிகளையும் நிறுத்தி வைத்தபோது கட்டுக்கடங்காத கோபமே அவர்கள் மீது வந்திருந்தது ஆனால் பின்னர் ஆறுதலாக ஆழமாகச் சிந்தித்து பார்தத்தில் ஒரு உண்மை புரிந்தது அவர்களால் ஈழத் தமிழர்கள் பற்றியும் புலிகள் பற்றியும்.பிரபாகரன் பற்றியும்.மேடைகளில் அடுக்கு வசனங்களில் உணர்ச்சி பொங்க பேசவும் மக்களின் உணர்வுகளைத் தூண்டி விடவும் மட்டுமே முடியும்.நடைமுறை அல்லது செயல் என்று வரும்போது பாவம் அவர்களால் அங்கு எதுவுமே செய்ய முடியாது.அப்படி ஏதாவது செய்ய நினைத்தால் மத்திய.மானில உளவுப் பிரிவினர் ஏதாவது ஒரு வழக்கில் அவர்களை உள்ளே தள்ளிவிடுவார்கள்.ஆகவே இந்தியா என்பது பேச்சுரிமையை மதிக்கும் மாபெரும் ஜனநாயக நாடு என்ன வேண்டுமானாலும் பேசிவிட்டு போகலாம் செலில் எதுவுமே செய்யமுடியாது.இதுதான் நிலமை.
simaan.jpg
எனவே  புலம்பெயர் ஈழத் தமிழர்கள் நடைமுறைக்கு சாத்தியமில்லாத விடயங்களை  கற்பனை செய்து கொண்டு சீமானை நம்பி அவரிற்கு பின்னால் ஓடிக்கொண்டிருந்துவிட்டு அவர் ஒரு மாயமான் என்று தெரியவந்த பின்னர் அவரை திட்டித் தீர்துக்கொண்டிருக்காமல்  தாயகத்து தமிழர்களிற்கு என்ன  தேவை என்பதை சரியாக ஆராய்ந்து அவர்களிற்கு சரியானதொரு தீர்வை பெற்றுத்தரும்  சரியான ஒருவரை தாயகத்தில் இருந்தே தேர்வு செய்யவேண்டும். ஏனெனில் தமிழகத்து அரசியல் வாதிகள் அனைவரிற்குமே  ஈழத் தமிழர்கள் தொட்டுக் கொள்ளும் ஊறுகாய்தான்  தொடர்ந்தும் நாங்கள் அவர்களிற்கு ஊறுகாயாகத்தான் இருக்கப் போகின்றோம் என அடம்பிடிப்பவர்களை ஒன்றும் செய்ய முடியாது.இந்தக் கட்டுரை எழுதி முடிக்கும் போது இலங்கையில் மாகாணசபைத்தேர்தல் நடந்து முடிந்து  தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வெற்றி உறுதியாகியிருந்தது.எனவே  இனியும்  தனித் தமிழீழமே தீர்வு. பிரபாகரன் வருவார் அடுத்தகட்ட ஈழப்போர் என்கிற தமிழ்நாட்டு தலைவர்களின் வெற்று ஆவேசப் பேச்சுக்கள் குறைந்து விடும் என எதிர்பார்க்கலாம்.

நன்றி வணக்கம். – சாத்திரி

நன்றி : http://sathirir.blogspot.fr/2013/09/blog-post_6718.html

Comments Closed

%d bloggers like this: