தமிழ் புலம்பெயர் முக்கிய செய்திகள்

ஒற்றுமையை வலுப்படுத்தும் மாவீரர் நாள் 2013- தமிழ் தேசிய நினைவேந்தல் அகவம்

அன்பான எம் தமிழ் உறவுகளே!

logoTNRFஎமது தேசிய விடுதலைக்காக தேசியத்தலைவரின்; வழிகாட்டலில் களமாடி காவியமான விடுதலை வீரரின் வீரநாள். தமிழரை இப்பூமிப்பந்தில் மீண்டும் தலைநிமிரச் செய்த எம் மாவீரச் செல்வங்களை ஒரு கண நேரம் எம் நெஞ்சிருத்தி அவர் நினைவுகளில் தடம்பதித்து தாயக விடுதலைப்பயணத்தில் அனைவரும் அணிதிரள உறுதியெடுக்கும் எழுச்சி நாள். உலகத்தமிழினமே எம்வீரர் பாதம் பணிந்து கண்ணீர்ப் பூச்சொரியும் புனிதநாள். இது எமது தேசிய நாள். இந்நாளை 1989ஆம் ஆண்டு தொடக்கம் பல்வேறு பரிமாண வளர்ச்சியுடன் விடுதலை வீரரின் தியாகத்தினை தாயகத்து உணர்வுகளுடன் வணங்கி வருகிறோம். எமது இனத்தின் தேசிய விடுதலைப் போராட்ட வரலாற்றின் பாதையில் ஏற்பட்ட இராணுவ நெருக்கடியும், சர்வதேச அழுத்தமும் எமது விடுதலைப்பயணத்தில் 2009 இல் ஏற்படுத்திய அசாதாரண சூழலின் பின் புலம்பெயர் தேசங்களில் மட்டுமே மாவீரர்நாள் நிகழ்வுகள் நடைபெறுவதற்கான சூழல் அமைந்தது.

குறிப்பாக கடந்த முப்பது வருடங்களுக்கு மேலாக தமிழ்மக்களால் முன்னெடுக்கப்பட்ட ஆயுதவழியிலான அரசியற் போராட்டம். பயங்கரவாத முத்திரை குத்தப்பட்டு 2009 மே மாதம் முள்ளிவாய்க்காலில் மௌனிக்கப்பட்டபோது தாயகத்தை விட்டு பல்வேறு வழிகளில் வெளியேறிய போராளிகள் விடுதலை அமைப்பின் கட்டமைப்புகளை மீள் ஒழுங்குபடுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர்.

அவ்வகையில் பிரித்தானியாவில் மாவீரர்நாள் நிகழ்வை நடாத்துவதற்காக 2007 ஆம் ஆண்டு விடுதலை அமைப்பின் தலைமையால் கட்டமைக்கப்பட்ட தேசிய நினைவேந்தல் அகவத்தினராகிய நாம் எம்வீரப்புதல்வர்களுக்கான தேசிய நினைவெழுச்சி நாளை அதன் புனிதம் பாதிக்கப்படாமல் புதிய சூழலுக்கு ஏற்ப நடாத்துவதற்கு ஒழுங்குபடுத்தியிருந்தோம்.

இவ்வாறு எடுக்கப்பட்ட தீர்மானத்தினை நிர்வாக ரீதியாக ஏற்றுக்கொள்வதில் 2009 ஆம் ஆண்டு தொடக்கம் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன. 2009 மற்றும் 2010 ஆம் ஆண்டுகளில் இவ்விடயத்தினை சம்பந்தப்பட்டவர்களுக்கு தெளிவுபடுத்தி அவ்வாண்டுகளில் தேசிய நினைவெழுச்சி நாளை அவ்வாறே நடாத்தியிருந்தோம்.

இருந்தபோதும் நிர்வாக ஒழுங்கமைப்பில் கருத்து வேறுபாடு நிலவியதால் 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வில் சகல தரப்பினரையும் உள்வாங்கி வெளிப்படையான வகையில் மாவீரர் நாளினை நடாத்துவதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. 2007 ஆம் ஆண்டு தொடக்கம் பிரித்தானியாவில் மாவீரர் நாள் நிகழ்வை நினைவெழுச்சியோடு நடாத்திவரும் தமிழ்த் தேசிய நினைவேந்தல் அகவத்தினராகிய நாம். எதிர்காலத்தில் மாவீரர்நாள் நிகழ்வு, மற்றும் மாவீரர் தியாகங்களை நினைவிருத்தவும், பல இடங்களில் மக்கள் சந்திப்புக்களை மேற்கொண்டுபெற்ற கருத்துக்களுக்கு ஏற்ப மக்களுக்கான மாபெரும் பொதுக்கலந்துரையாடல் ஒன்றை வடமேற்கு லண்டன் பகுதியின் 366 STAG LANE ,KINGSBURY எனும் முகவரியில் ; 16/10/2010 மாலை 3 மணி தொடக்கம் 6 மணிவரை நடாத்தியிருந்தோம்.

அக்கலந்துரையாடல் ஊடாகக்கிடைத்த ஆரோக்கியமான கருத்துக்களை உள்வாங்கி சட்டவாளர்கள், கணக்காளர்கள். மற்றும் பொது அமைப்புக்களைச் சேர்ந்தவர்களும் கடந்த பலவருடங்களாக தமிழ்த்தேசியச் செயற்பாடுகளில் முன்னின்று உழைத்தவர்களில் சிலரையும் தெரிவு செய்து கடந்தகால கசப்பான அனுபவங்களைக் கருத்திற் கொண்டும், சரியானதும், தெளிவானதுமான செயற்திட்டங்களோடு எம்மால் 11 பேர் கொண்ட மாவீரர் நாள் ஏற்பாட்டுக்குழு உத்தியோக பூர்வமாக அமைக்கப்பட்டு மண்மீட்புப் போரில் வீரகாவியமாகி வித்தாகி வீழ்ந்த மாவீரர்களை நினைவு கொள்ளும் புனிதநாளான தமிழ்த்தேசிய நினைவுநாளை கடந்த இரண்டு ஆண்டுகளாக ஈகப்பேரொளி முருகதாசன் நினைவுத்திடலில் பல்லாயிரம் மக்கள் ஒன்றுகூட தாயகத்து உணர்வுகளோடு மெய்யுருக விளக்கேற்றி வணங்கினோம்.

இருந்தபோதும் 2011ஆம் ஆண்டுக்கான மாவீரர்நாள் நிகழ்வுகள் பிரித்தானியாவில் பல இடங்களில் (5 இற்கும் மேற்பட்ட இடங்களில்) நடைபெற்றது. இது அனைத்து மக்களுக்கும் மிகப்பெரும் வேதனையை ஏற்படுத்தியிருந்தது. இவ்விடயத்தில் நல்லதொரு இணக்கப்பாட்டை ஏற்படுத்த சம்பந்தப்பட்டவர்களை அணுகி தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட சம காலத்தில் 2012 ஆம் ஆண்டு மாவீரர்நாள் நிகழ்வும் பல்வேறு நிர்வாக ஒழுங்குகளில் நடைபெற்று முடிந்தது.

இவ்வாறு நிர்வாக ரீதியாக ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் பல்வேறு விரும்பத்தகாத சக்திகளுக்கு வழிசமைத்துக் கொடுக்கக்கூடிய வாய்ப்புக்களை ஏற்படுத்தியிருப்பது அவதானி;க்கப்பட்டது. அவ்வகையில் இந்நிலை தொடர்ந்தும் நீடிக்க வேண்டுமென சிறீலங்கா பயங்கரவாத அரசு எதிர்பார்க்கின்றது. அதே போன்று புலம்பெயர் தேசங்களில் செயற்படும் சில அமைப்புக்களும் எதிர்பார்க்கின்றனர். இவற்றிற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் முகமாகவும், சகல தேசிய உணர்வாளர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளிக்கும் வகையிலும். பிரித்தானியாவில் இம்முறை ஈகப்பேரொளி முருகதாசன் நினைவுத்திடலில் நினைவிருத்திவரும் மாவீரர்நாள் நிகழ்வை இடைநிறுத்தியுள்ளோம்.

எமது இந்தத் தீர்மானம் எதிர்காலத்தில் ஒற்றுமைச் சூழலை வலுப்படுத்துமென நம்பிக்கையுடன் எதிர்பார்க்கின்றோம். விடுதலைப் பயணத்தின் புதிய நெருக்கடியின் போது நாம் எடுத்த முடிவிற்கு ஆதரவாக எமக்குப் பலவழிகளிலும் ஒத்துழைப்பும், ஆதரவும் வழங்கிய எமது உயிரினும் மேலான உறவுகளே! உங்கள் கரங்களை அன்புடன் பற்றிக்கொள்கின்றோம். எமக்கு ஒத்துழைப்பு வழங்கியமையினால் நண்பர்கள், உறவுகளுடன் தனிப்பட்ட ரீதியாகக்கூட நீங்கள் முரண்பட்டுள்ளீர்கள். பல விமர்சனங்களுக்கு முகம்கொடுத்து நின்றீர்கள். பொருளாதாரரீதியாக பாதிக்கப்பட்டுள்ளீர்கள். இவையனைத்தும் உங்களின் விடுதலை உணர்வினைப் புலப்படுத்தியிருக்கிறது.

இதே வேளை ஊடக நண்பர்களையும், பல்வேறு கட்டமைப்பு நிர்வாகிகளையும், அவர்களது ஒத்துழைப்பினையும் அன்புடன் எண்ணிப்பார்க்கின்றோம். எவ்வாறு எமது உண்மை நிலையினையும், உணர்வினையும் உய்த்தறிந்து ஒத்துழைப்பு வழங்கினீர்களோ அதே உணர்வுடன் இந்த முடிவினையும் ஏற்றுக்கொள்வீர்கள் என எதிர்பார்க்கின்றோம்.

தேசியத்தலைவரினால் வழிநடத்தப்பட்ட எமது விடுதலைப் போராட்டத்திற்கு வலுச்சேற்கும் வகையில் எமது பணிகள் தொடரும். அதற்கு ஆதாரவலிமையாக, ஆணிவேராக இருப்பவர்கள் எமது மாவீரர்களே. எனவே அவர்களை நினைவுபடுத்தும் இப்புனிதநாள் எதிரியால் கூடக் கொச்சைப் படுத்தப்பட்டுவிடக்கூடாது என நாம் எதிர்பார்க்கின்றோம்.

‘நான் பெரிது நீ பெரிது என வாழாமல் நாடு பெரிதென வாழ்’

எனும் எமது தேசியத் தலைவரின் சிந்தனைக்கு அமைவாக தேசியவிடுதலை எனும் புனிதப் பயணத்தில் எமக்குள் விட்டுக் கொடுப்புக்களைச் செய்து எத்தனை இடர்வரினும் எமது விடுதலைப் பயணத்தில் மனம் தளராது பயணிப்போம் என மாவீரத் தெய்வங்கள் மீது உறுதி எடுத்துக் கொள்கின்றோம்.

‘தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம்’

தமிழ் தேசிய நினைவேந்தல் அகவம்