தனிநபர் புகழ் தேடுதல் விடுதலை போராட்டத்திற்கு உரம் சேர்க்குமா?-ச.வி.கிருபாகரன்.

Home » homepage » தனிநபர் புகழ் தேடுதல் விடுதலை போராட்டத்திற்கு உரம் சேர்க்குமா?-ச.வி.கிருபாகரன்.

eelam52009ம் ஆண்டு மே மாதத்தின் பின்னர் தாயகத்திலும் புலம் பெயர் தேசங்களிலும் தமிழீழ மக்களது வாழ்வு, மாலுமிகள் இருந்தும், இல்லாதது போல் யாவும் தலைகீழாக நடைபெறுகிறது என சிலரும் பலரும் கதைப்பதை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். இதில் தாயகத்தில் நிலைமை, எமது உடன்பிறப்புக்ளின் கட்டுப்பாட்டிற்கு அப்பால், சிங்கள பௌத்தவாதிகளினால் மக்கள் தினமும் ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்றனர்.

ஆனால் கடந்த வடமாகாண சபை தேர்தலில், தமிழர் கூட்டமைப்பின் அமோக வெற்றியை தொடர்ந்து, தாயகத்தில் மட்டுமல்லாது, புலம் பெயர் தேசத்திலும் தமிழீழ மக்களிடையே ஓர் மனோநிலை மாற்றத்தை காணக் கூடியதாகவுள்ளது.

இதில் புலம் பெயர் வாழ் தேசத்து மக்களது நிலைமைகளை ஆராயுமிடத்து, தமிழீழ விடுதலை போராட்டம் உக்கிரமாக நடந்த வேளையில் தோள் கொடுக்க முன்வராத பலர், 2002ம் சமாதான காலத்தின் பின்னர், விசேடமாக 2005 முதல் 2007 காலப்பகுதியில், திடீரென உதயமாகினார்கள். இவர்களது செயற்பாடுகள் பல கபட நோக்கங்கள் கொண்டவையாக அமைகிறது.

இக் காலப்பகுதியில் முன்வந்தவர்களில் கைவிட்டு எண்ணக்கூடிய சிலரே, விசுவாசமாக போராட்டத்திற்கு துணை போகும் நோக்குடன் உழைப்பவர்கள். மற்றையவர்கள், ஒன்றில் தமிழீழ விடுதலை போராட்டத்தை சிதைப்பதற்காகவோ, அல்லது தமக்கென தனி நபர் புகழை தேடுவதற்காகவே உருவானவர்கள்.

நாம் அறிந்த வரையில், ஏறக்குறைய மூன்று தசாப்தங்களாக தமிழீழ போராட்டத்திற்கு எந்தவித உதவியும் செய்ய முன்வராத சில நபர்கள், முன்பு செயற்படதாது மட்டுமல்லாது, அவர்களது இல்லம் தேடிச் சென்ற தொண்டர்களை கண்டித்து பேசி, விடுதலை போராட்டத்தை கொச்சைப்படுத்தி, தங்களது வீடுகளிலிருந்து துரத்திய பெயர்வழிகளே. இவர்களில் ஒரு பகுதியினர் திடீரென தமிழீழ விடுதலை போராட்டத்தில் அக்கறை கொள்வதற்கு பலவித பின்ணனிகள் காரணிகளாகவுள்ளன.

தகவல் சேகரிப்பு

யாருடைய ஏவுதலினாலோ, அல்லது ஊதியத்திற்காகவோ, நீண்டகால விசுவாசமான செயற்பாட்டாளர்களது விபரங்கள் கடமைகள் பற்றிய தகவல்களை சேகரிப்பதற்காகவும், இதேவேளை நீண்டகாலச் செயற்பாட்டாளர்களிடையே மறைமுகமான மோதல்களை உருவாக்குவதுடன், தமிழீழ விடுதலை போராட்டத்திற்கு நீணடகாலமாக உதவிவந்த வெளிநாட்டவர்கள் – கல்விமான்கள், இளைஞர்கள், புத்திஜீவிகள், வழங்கறிஞர்களை திறம்பட திட்மிட்டு ஓரம் காட்டுபவர்களாக காணப்படுகின்றனர்.

இத்துடன் இவர்கள் தங்களது செயற்பாடுகளை நிறுத்தவில்லை. சிறு பராயத்திலிருந்து தமிழீழ விடுதலை போராட்டத்திற்காக இரவு பகலாக புலம்பெயர் தேசத்தில் உழைத்து பல்கலைக்கழகம் வரை கல்வி கற்று, ஆங்கிலம் உட்பட பல சர்வதேச மொழிகளில் பாண்டித்தியம் பெற்ற இளையோரை திட்டமிட்டு சாட்டுபோக்குகள் கோள்கள் கூறி, ஒவ்வொரு இளைஞர்களாக வெளியேற்றிவருவதையும் காணக்கூடியதாகவுள்ளது.

அத்துடன் அவ் இளைஞர்கள் மிக நீண்ட காலமாக ஆற்றி வந்த கடமைகளை, தாம் வலோத்காரமாக சுவீகரித்து, ஏற்கனவே திறம்பட நடைபெற்ற வேலைகளை நசமாக்குவதையும் அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.

மொழிகளில் பாண்டித்தியம்

யாவரையும் வெற்றிகரமாக ஒதுக்கிவிட்டு, தம்மை ஓர் நவீன கால அரசியல் ஆலோசகர்களாக காண்பிக்க முயல்பவர்கள், சர்வதேச பரப்புரை செய்யுமளவிற்கு அவர்கள் மேற்கு நாட்டு மொழிகளில் பாண்டித்தியம் பெற்றவர்களாகவும் காணப்படவில்லை.

இதே வர்க்கத்தை சேர்ந்த இன்னுமொரு பிரிவினர், தமது நாசகார வேலைகளின் நோக்கங்கங்கள் செயற்பாடுகளை, புலம்பெயர் தேசத்துடன் நிறுத்தவில்லை. தங்களது இலக்கை அடைவதற்காக, சமாதானக் காலத்தை பயன்படுத்தி, நாட்டிற்கு சென்று, �பணம் என்றால் பிணமும் வாய் திறக்கும்� என்ற வாய் மொழியை இவர்கள் அறிந்த காரணத்தினலோ என்னவோ, ஒரு சில ஆயிரத்தை கொடுத்து, தாம் முன்பு செயற்பட முன்வராததற்கு, தாம் வாழும் நாட்டில், அவ்வேளையில் இருந்த கொடூரமான செயற்பாட்டளார்களின் போக்கே காரணமென கூறினார்கள். இதனால் தாம் நிதிப் பங்களிப்போ, சரீர உதவியோ அன்று செய்ய முன்வரவில்லையென்ற பாப்பா கதைகளை கூறி, தம்மை ஓர் விடுதலை விரும்பியாக காண்பித்தார்கள்.

இதற்காக முன்பு கடமையாற்றிய செயற்பாட்டளார்கள் யாவரும் நல்ல திறமைசலிகள் என்றோ, அல்லது சகலரையும் அரவணைக்கும் மனோபாவம் கொண்டவர்கள் என்றோ நான் இங்கு கூற முன்வரவில்லை.

ஆனால் விடுதலைப் போராட்டத்திற்கு வேலை செய்ய முன்வருபவர்கள், சகல சாவல்களையும் சமாளித்து, குழப்பவாதிகளை அலட்சியம் பண்ணி, தமது கடமை உணர்வுடன் வேலை செய்பவர்களாக இருக்க வேண்டும் என்பதே நியதி. இப்படியாக நின்று பிடித்தவர்கள் தான் இன்றும் சலிப்பின்றி செயற்படுகிறார்கள்.

ஊரை குழப்பும் மனுக்கள்

இன்னுமொரு பிரிவினர், கிடைத்த இடைவெளிக்குள் தாம் நினைத்தவை எல்லாவற்றையும் போராட்டத்தின் பெயரால், தமக்கு தனிப்பட்ட புகழை தேட முயலுகிறார்கள். உதாரணத்திற்கு, நாம் ஒரு மனுவை ஓர் சர்வதேச நிறுவனத்திடமோ, சர்வதேச பிரதிநிதிகளிடையே எங்கு எப்படிக் கொடுத்தாலும், அவர்கள் ஏற்பார்கள். மனுவை கை ஏற்பவர்கள், மனுக்கள் கொடுப்பவர்களிடம், நீங்கள் வண்டியில் வந்தீர்களா அல்லது தொடர்வண்டியில் வந்தீர்களா என கேட்பது கிடையாது.

ஆனால் தற்போதைய பாணி என்னவெனில், ஊரை குழப்பி பல ஆயிரம் யூரோக்களை செலவு செய்து, பண்டைகாலத்து முறைகளை கையாண்டு பல நாட்கள் கடந்து, மனுக்கள் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. இவ் தாழ்வு நிலையில், தமிழீழ விடுதலை போராட்டம் இன்று இல்லை.

இவ் வேலை திட்டங்களை செய்யும் தொண்டர்களது உணர்ச்சிகளையும் முயற்சிகளையும் நாம் மதிக்கிறோம், பாராட்டுகிறோம். ஆனால் இவற்றை செய்விப்பவர்களையும், இதற்காக பணத்தை வீண் விரயம் செய்பவர்களை எண்ணும் பொழுது, இவர்கள் எவ்வளவு தூரம் அப்பாவி மக்களுக்கு அலுவா கொடுக்கிறார்களென எண்ணத் தோன்றுகிறது.

அன்று தமிழீழ விடுதலை போராட்டத்தின் ஒரு அங்கமாக திலீபன் உணவு, நீர் ஒன்றுமே அருந்தாது, உண்ண விரதம் இருந்து, 11வது நாளில் சாவை தளுவிக்கொண்டான். இன்றும் திலீபனது வீரத்தை முழு உலகமே வியத்து நிற்கிறது. அன்றைய திலீபனின் இறப்பு, தமிழீழ விடுதலை புலிகளது அந்தஸ்தை ஒரு படி உயர்த்தியது. புலிகள் ஆயுதப் போராட்டத்தில் மட்டுமல்லாது, சாத்வீகப் போராட்டத்திலும் நம்பிக்கை கொண்டவர்ளென நிரூபிக்கப்பட்டது.

உண்ணவிரதம்

உண்ணவிரதம் பற்றிய சரித்திரத்தை புரட்டி பார்க்கும் பொழுது, தமீழிழ விடுதலை போராட்டத்திற்காக, நாட்டிலோ புலத்திலோ, உண்ணவிரதம் மூலம் சாதித்தது ஒன்றுமே கிடையாது. விசேடமாக மேற்கு நாடுகளை பொறுத்தவரையில் உண்ண விரதம் என்பது, ஓர் மிரட்டலாக கணிக்கப்படுகிறது.

இதன் காரணமாகவே, அன்று பிரித்தானிய பிரதமர் மாக்கிரேட் தட்சர் காலத்தில், வட அயர்லாந்தின் செயற்பாட்டாளாரும் பாரளுமன்ற உறுப்பினருமான, போபி சான்ட், சிறைக்கூடத்தில், உணவு மட்டும் அருந்தாது உண்ணவிரதமிருந்து, தனது 66 நாளில் சிறையிலேயே உயிரை திறக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அவர் மட்டுமல்லாது இன்னும் சில இவரது தோழர்களும் இவ் வழியிலே மரணத்தை தழுவிக் கொண்டார்கள்.

ஆகையால் ஓர் விடயத்தை, முன்னேடுக்கும் பொழுது, இதனால் தமிழீழ மக்களுக்கு, எமது தாயாக பூமிக்கு எவ்வளவு நன்மை உள்ளது என்பதை ஒவ்வொருவரும் ஓர் குழுவாக நடைமுறைப்படுத்தவுள்ள விடயங்களை ஆராய கடமைப்பட்டுள்ளார்கள்.

முன்பு ஒருமுறை, பிரித்தானிய பாரளுமன்றத்திற்கு முன்பாக நடந்த ஓர் உண்ணவிரதத்தின் பொழுது, உண்ணவிரதம் இருந்தவரை பார்க்க சென்றவர்களுக்கு தாரளமாக உணவு வழங்கப்பட்டது மட்டுமல்லாது, உண்ணவிரதம் இருந்தவர் மீது பல குறைபாடுகள், பிரித்தானிய பத்திரிகையில் வெளிவந்த காரணத்தினால், உண்ணவிரதம் இருந்தவர் நீதிமன்றம் வரை செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார். இதனால் எமது தமிழீழ விடுதலை போராட்டத்திற்கு கிடைத்த நன்மை என்ன? அவ் உண்ணவிரதத்தினால் தமிழீழ விடுதலை போராட்டம் மேற்கு நாட்டில் கொச்சைப்படுத்தப்பட்டது.

மாநாடுகள்

ஒரு பகுதியினர், கடந்த நான்கு வருடங்களாக உலகம் பூராகவும் சென்று, பல ஆயிரத்தை செலவு செய்து, மாநாடுகளை நடத்துகின்றனர். இதனால் தமிழீழ விடுதலை போராட்டத்திற்கோ, தமிழீழ மக்களுக்கோ கிடைத்த நன்மை என்ன? இவ் மாகாநாடுகளுக்கு செலவழிக்கும் பணத்தை நாட்டில் உள்ள விதவை பெண்களுக்கோ, பெற்றோர் அற்ற சிறுவர் சிறுமிகளுக்கு ஏன் நாம் உதவப்படாது? முன்னைய மாநாடுகளினால் எமது மக்களுக்கு கிடைத்த பெறுபேறுகள் என்ன?

இப்படியாக நடத்தப்படும் மகாநாடுகளில், ஒரு நாட்டின் ஜனாதிபதியோ பிரதமரோ அல்லது ஒரு அமைச்சர் தன்னும் கலந்து கொண்டு கருத்துக்கள் பகிர்ந்து கொண்டால் நிலைமை வேறு. இப்படியாக நடைபெறும் மகாநாடுகளில் கலந்து கொள்ளும் அதி முக்கிய நபராக காணப்படுபவர்கள், சாதாரண பாராளுமன்ற உறுப்பினராகவே உள்ளது. இப்படியாக ஒரு மகாநாடுகள் தற்போதைய நிலையில் தமிழீழ விடுதலை போராட்டத்தின் பெயரில் தேவையா?

ஈரானிய மூகாஜிடின்

கடந்த செப்டம்பர் மாதம், ஜெனிவாவில் நடைபெற்ற ஐ. நா. மனித உரிமை சபையின் 24வது கூட்டத் தொடர் வேளையில், ஈரானின் இடதுசாரி புரட்சிவாத ஈரானிய மூகாஜிடின் மக்கள் அமைப்பு, ஐ. நா. மண்டபத்தில் ஒர் கூட்டத்தை ஒழுங்கு செய்திருந்தனர். அவ் கூட்டத்தில் உரையாற்றியவர்களை கண்டு, ஐ. நா. மனித உரிமை சபையில் பங்கு கொண்ட சகலருமே அதிசயித்தார்கள்.

உலகின் முக்கிய புள்ளிகள் பலர் – அல்ஜீரியாவின் முன்னாள் பிரதமர், பிரான்ஸின் முன்னாள் வெளிநாட்டமைச்சர், பிரான்ஸின் முன்னாள் நீதிபதி, ஐ.நா. பொது செயலாளரின் ஈராக்கிற்கான பிரதிநிதி என பட்டியல் நீள்கிறது.

இதில் நாம் ஓர் முக்கிய விடயத்தை இங்கு கவனிக்க வேண்டும். ஈரானின் புரட்சிவாத அமைப்பான ஈரானிய மூகாஜிடின் மக்கள் அமைப்பு ஈரானில் மட்டுமல்லாது, அமெரிக்கா உட்பட, ஐரோப்பிய யூனியனால் முன்பு தடைசெய்யப்பட்டது. அவர்கள் அத்தடைகளுக்கு எதிராக ஐரோப்பிய நீதிமன்றம், அமெரிக்க நீதி மன்றங்களில் வழங்குகள் தொடுத்து, வெற்றியும் கண்டனர். இன்று அவர்களது அமைப்பு சர்வதேச ஆதரவுடன் ஈரானிய அரசுக்கு சவலாக சர்வதேச மட்டத்தில் செயற்படுகிறது.

இவ்வகையில் எம்மவர்கள் நடாத்தும் மாநாடுகள் ஏதும் நடைபெற்றால், நாமும் சர்வதேசத்தின் முன் தலை நிமிர்ந்து நிற்க முடியும்.

மாநாகர சபை, நகரசபை உறுப்பினர்

உண்மையை பேசுவோம்! எமது விடுதலை போராட்டம் வளர்ந்து சர்வதேச மட்டத்தில் உள்ள நிலையில், மாநாகர சபை, நகரசபை உறுப்பினர்கள் முக்கிய புள்ளிகளாக உரையாற்ற வேண்டிய நிலையில் தான் எமது சர்வதேச செயற்பாடுகள் உள்ளதனால், இது மிக வெட்ககேடான விடயம். அரசியல் வேலை செய்கிறோம், பரப்புரை செய்கிறோம் என்பவர்கள் புலம் பெயர் நாடுகளில் தமது தனிப்பட்ட புகழுக்காக தம்பட்டம் அடிக்கிறார்கள் என்பதை இங்கு உணர்த்துகிறது.

இதுமட்டுமல்லாது, விழாக்களை நடத்துபவர்களே, விழாக்களின் முக்கிய புள்ளிகளாக விழா வேளையில் வலம் வருவதையும் நாம் கண்கிறோம். சுருக்கமாக கூறுவதனால், கழுதை தேய்ந்து கடடெறும்பான� கதையாகவுள்ளது.

பிரித்தானியா, கனடாவில் சில பாரளுமன்ற உறுப்பினார்கள் தமிழீழ விடுதலை போராட்டத்திற்கு ஆதரவாகவுள்ளார்கள் என்பது உண்மை. இவர்கள் தமது ஆதரவை தமிழீழ விடுதலை புலிகளுக்கானதாக காட்டுவதற்கு தயங்குவதற்கான தடையை நீக்குவதற்கு, இன்று எத்தனை செயற்பாட்டாளர்கள் முயற்சிக்கிறார்கள்? நெய்குடம் உடைந்தது நாய்க்கு வேட்டையென, மிக குறுகிய காலத்திற்குள் தனி நபர் புகழ் தேடுதல் தொடர்கிறது.

ஐரோப்பிய நாடுகளில் ஓர் பாரளுமன்ற உறுப்பினர், புலம்பெயர் வாழ் தமிழீழ மக்களது கூட்டங்கள், விழாக்களுக்கு வருகை தருவது என்பது, ஓர் மாபெரும் செயல் திட்டமாக காணப்படுகிறது.

விக்னேஸ்வரன் ஓர் பொக்கிசம்

எமக்கு இதுவரையில் கிடைத்த பொக்கிசமான, வட மாகாண சபையின் முதலமைச்சாரான, முன்னாள் பிரதம நீதிபதி திரு விக்னேஸ்வரனையே ஓரம் கட்ட வேண்டுமென காணப்படும் கூட்டம், தற்செயலாக திரு விக்னேஸ்வரன், ராஜினமா செய்துவிட்டு இவற்றிலிருந்து ஒதுங்கினால் என்ன செய்வார்கள்? நல்லது போங்கள் என்பார்களா? அல்லது ஓர் மிக முக்கிய நபரை இழந்துள்ளோமென கவலைப்படுவார்களா?

இன்று உலகின் தலைவர்களும் முக்கிய பிரதிநிதிகளும் யாழ்ப்பாணம் சென்று, வடமாகணத்தின் முதலமைச்சரை சந்திக்கிறார்ளென்றால், அதற்கு திரு விக்னேஸ்வரனுடையே தகைமை, அனுபவம், பின்னணி போன்றவை முக்கிய காரணிகளாகவுள்ளது.

பொறுமை என்பது ஒருவருடைய வாழ்வில் மிக முக்கியமானது. இதற்கு ஓர் நல்ல உதாரணைத்தை இங்கு குறிப்பிட விரும்புகிறேன். இருவருக்கு பாரளுமன்ற தேர்தலில் இடம் கொடுக்கப்படவில்லை என்ற சாட்டு போக்கு கூறி (உண்மை அதுவல்ல), தமிழீழ விடுதலை புலிகளினால் ஆரம்பிக்கப்பட்ட தமிழர் கூட்டமைப்பு உடைக்கப்பட்டு, கைவிட்டு எண்ணக்கூடிய அங்கத்தவர்களை உள்ளடக்கிய, ஊர் பெயர் தெரியாத அந்தஸ்தை கொண்ட அரசியல் கட்சி ஒன்று உருவாகியது.

அன்று தமிழர் கூட்டமைப்பை உடைக்காது இவ் சந்தேக நபர்கள் பொறுமையாக அமைதியாக இருந்திருந்தால்,இவர்கள் மக்களால் நிரகரிக்கப்பட்டிருக்க மாட்டார்கள். அது மட்டுமல்லாது, சிலவேளைகளில் இன்றைய வடமாகாண சபையின் முதலமைச்சராகவோ, அல்லது அமைச்சராகவோ பதவி ஏற்றிருக்கக் கூடிய அந்தஸ்த்தை அடைந்திருப்பார்கள். ஆனால் பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரோன் போன்ற உலகத் தலைவர்கள் இவர்களை சந்திக்க நிச்சயம் யாழ்ப்பாணம் வந்திருக்க மாட்டார்கள்!

எட்டாப் பழம் புளிக்கும் என்பது போல், இவர்கள் தாம் 13வது திருத்தச் சட்டத்திற்கு கீழ் எதையும் ஏற்க மட்டோமென விடயம் விளங்காதவர்களுக்கு வீர வசனம் பேசுவதை நாம் அறிவோம். அப்படியானால், இவர்கள் தாம் பாரளுமன்றத்தில் 6வது திருத்தச் சட்டத்தின் கீழ் செய்த சத்தியப் பிரமாணம் என்னத்தை உள்ளடக்கியுள்ளது என்பது இவர்களுக்கே தெரியாதவர்களாகவுள்ளார்கள்.

இவர்கள் மக்களுக்கு சிறிலங்காவின் பாராளுமன்றத்தில் தமக்கு என்ன உரிமை இருந்தது என்பதை விசைப்படுத்தி மக்களுக்கு கூறவார்களா? யாதார்த்தம் என்னவெனில், ஓர் பாரளுமன்ற உறுப்பினரினால,; விசேடமாக தமிழ் பாராளுமன்ற உறுப்பினரினால் சாதிக்க முடியாததை, மாகாண சபை முதலமைச்சராலும், மாகாண சபை அமைச்சராலும் மக்களுக்காக செய்ய முடியும் என்பது தற்பொழுது நிரூபிக்கப்பட்டு வருகிறது.

இந்தியா பிரதமர், யாழ்ப்பாணத்திற்கு சென்றால், அதனால் அரசியல் பின்னடைவு ஏற்படுமென, 6வது திருத்தச்சட்டத்தின் கீழ் சத்தியப் பிரமாணம் செய்த முன்னாள் பாரளுமன்ற உறுப்பினரும், மக்களால் நிரகரிக்கப்பட்டு கட்டுக் காசை இழந்தவர்கள் கூறுகிறார்கள். என்ன செய்வது, இவர்களுக்கு தெரிந்த அரசியல் இது தானா? நல்ல வேளை, இவர்கள் இவ்வுலகில் பிறக்காவிடில், தழிழீழ மக்களுக்கு சுயநிர்ணய உரிமை என்பதை நினைவுபடுத்த யாரும் இல்லாது இருந்திருப்பார்கள்.

இசைபிரியா

மேலே கூறப்பட்டது போல், 2002ம் சமாதான காலத்தின் பின்னர், விசேடமாக 2005 முதல் 2007 காலப்பகுதியில், திடீரென உதயமாகியவர்களினால் ஆரம்பிக்கப்பட்ட இழிவு தளங்களும், எந்தவித பயிற்சியோ அனுபவமோ துறைசார் கல்வி இல்லாது உருவான ஊடகவியலாளர்களினாலும், தகைமைகள் அற்று ஊடகம் நடத்தும் பெயர்வழிகள் தான், இசைபிரியா பற்றிய செய்திகளையும் புகைப்படங்களையும் தாம் விரும்பியவாறு பிரசுரித்தும் ஆய்வுகள் செய்து கருத்து கூறுபவர்கள்.

மழுப்பல் ஊடகத் துறையினருக்கு, இசைப்பிரியாவின் குடும்பத்தின் சார்பாக, கடந்த 13ம் திகதி, திருமதி தர்மின வாகீசனினால், ஓர் பயிற்சி பட்டறைக்கான தகவல்கள் அடங்கிய கடிதத்தை வரையப்படும் வரை, எதுவும் புரியாதது, மிக கவலைக்குரியது.

தம்மை போன்ற சிலரிடையே புத்திஜீவிகள் அல்லா, புத்துஜீவிகளாக வாழும் இவர்கள், தனிநபர் புகழ் தேடுகிறார்கள். யாவரும் அறிவதற்கு, தெரிவதற்கு, படிப்பதற்கு நிறையவுண்டு. எந்த தயக்கமுமின்றி தொடர்ந்து தெரியப்படுத்தப்படும்.

ச. வி. கிருபாகரன்

பிரான்ஸ்.

tchrfrance@hotmail.com


%d bloggers like this: