இலங்கை தமிழ் முக்கிய செய்திகள்

ஐநா அறிக்கையை சர்வதேசம் ஆவலுடன் எதிர்பார்ப்பு

un_logo-1024x1024இலங்கை தொடர்பான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் விசாரணை அறிக்கையை மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாடுகள் தெரிவித்துள்ளன.

நேற்றையதினம் ஜெனீவாவில் ஆரம்பமான ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 30வது கூட்டத் தொடரில் உரையாற்றிய அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் இதனைத் தெரிவித்தனர்.

ஐ.நா.மனித உரிமைகள் பேரவை விசாரணை அறிக்கையில் முன்மொழியப்பட்டிருக்கும் விடயங்களை நிறைவேற்றுவதற்கும் நம்பத்தன்மையான பொறுப்புக் கூறலை உறுதிப்படுத்துவதற்கும் ஏதுவாக இலங்கை அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் பிரேரணையொன்றைக் கொண்டுவரவிருப்பதாக நேற்றைய அமர்வில் உரையாற்றிய அமெரிக்காவின் சர்வதேச அமைப்புக்களுக்குப் பொறுப்பான பிரதி உதவித் தூதுவர் எரின்.எம்.பார்க்கிளே தெரிவித்தார்.

இலங்கைக்கு எதிரான அறிக்கையை எதிர்பார்த்திருப்பதுடன், மனித உரிமை சூழலை முன்னேற்றுவதற்கும் நல்லிணக்க செயற்பாட்டை உறுதிப்படுத்துவதற்கும் இலங்கைக்குத் தொடர்ந்தும் உதவி வழங்கத் தயாராக இருப்பதாக ஐரோப்பிய ஒன்றியமும் அறிவித்துள்ளது.

அதேவேளை, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் அதன் ஆணையாளர் முன்வைக்கும் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த இலங்கை அரசுக்கு தமது அரசாங்கம் ஆதரவளிக்கும் என்று பிரித்தானியாவும் அறிவித்துள்ளது.