புலிகளின் குரல் வானொலிக்கு எதிரான சதி முயற்சியில் டென்மார்க் தமிழ்குழு.

Home » homepage » புலிகளின் குரல் வானொலிக்கு எதிரான சதி முயற்சியில் டென்மார்க் தமிழ்குழு.
புலிகளின் குரல் வானொலிக்கு எதிரான சதி முயற்சியில் டென்மார்க் தமிழ்குழு.

டென்மார்க்கில் வசிக்கும் மகேஸ் எனப்படும் பொன்னம்பலம் மகேஸ்வரனின் தலைமையில் இயங்கும் மகேஸ்குழுவினர்களினால் மேற்கொள்ளப்படும் தமிழ் தேசவிரோத செயல்பாடு கண்டறியப்பட்டுள்ளது.

ஏற்கனவே மாவீரர் கஸ்ரோ அவர்களின் தலைமையில் இருந்த அனைத்துலக தொடர்பகம் அல்லது ரிரிசி யினை கைப்பற்றியதனூடாக புலம்பெயர் நாடுகளில் இருந்த தமிழ் தேசிய சொத்துக்களை தம்வசப்படுத்தியுள்ளனர்.

இப்பொழுது இந்த குழுவில் முக்கிய நபராக செயல்படும் டென்மார்க் கேர்ணிங் நகரில் வசிக்கும் சசி என்பவர் ஊடாக புலிகளின் குரல் வானொலிக்கு எதிரான சதி முயற்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக புலிகளின் குரல் நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புலிகளின் குரல் வானொலியின் இணையத்தில் இருந்து ஆவணங்களை திருடி பொய்யான ஒரு இணையத்தளத்தை தயாரித்துள்ளதுடன் இணையவானொலிக்கென நிதி சேகரிப்பிலும் இப்பொழுது ஈடுபட்டுள்னர்.

முழுமையான புலிகளின் குரல் நிறுவனத்தின் அறிக்கை>>>>>>

அன்பான தாயக, தமிழக, புலம்பெயர் உறவுகளே!

புலிகளின்குரல் வானொலியின் ஒலிபரப்புக்கள் 2004 ஆம் ஆண்டு முதல் இணையத்தளத்தில் ஒலித்துவருவது நீங்கள் அறிந்த விடயம்.
தமிழீழத் தேசியத்தலைவரால் உருவாக்கப்பட்ட அனைத்து கட்டமைப்புக்களிலும், அதன் நோக்கம் மாறாது, 2009 ஆம் ஆண்டிற்கு பின்னரும், இன்றுவரை தனது பணியை தாயகத்தின் விடியலுக்காகத் தொடர்ந்தும் முன்னெடுத்ததும், இறுதியாக இன்றுவரை எஞ்சியுள்ள ஒரேயொரு கட்டமைப்பும் புலிகளின்குரல் வானொலியாகும்.
2009ம் ஆண்டுக்கு பின்னர், புலிகளின்குரல் வானொலிக்கு பல தரப்பினராலும் பல நெருக்கடிகள் வந்த போதிலும, தனது பணியை இடைநிறுத்தாது தெளிவான பாதையினூடாக புலிகளின்குரல் எடுத்துச்சென்றதைக் குறிப்பிட்ட ஒரு சிலரே அறிவார்கள்.

இதுவரை காலமும் தனது இன்னல்களை வெளிக்கொணராத புலிகளின்குரல் வானொலிக்கு, புதிதாக ஏற்பட்டிருக்கும் இந்த இடையூறைத் தகர்த்து பயணிப்பது என்றால், அது அனைத்து மக்களின் கைகளில் தான் உள்ளது என்பதால், புலிகளின்குரல் நிறுவனம் இந்த அறிக்கையை அனைத்து மக்களின் கவனத்திற்கும் கொண்டு வர முடிவெடுத்துள்ளது.

2009ஆம் ஆண்டிற்கு முன்னர் அனைத்து ஒலிபரப்புக்களும் தாயகத்திலிருந்து தயாரிக்கப்பட்டு இணையவழியூடாக அனைத்துலகத்திற்கும் ஒலிபரப்பப்பட்டன. ஆனால் இணையத்தள வடிவமைப்பு, காலத்துக்கேற்ற மாற்றங்கள் மற்றும் இணைய பராமரிப்பு என்பன புலம்பெயர் தேசத்திலிருந்தே செய்யப்பட்டு வந்தன.

மே மாதம் 2009 ஆம் ஆண்டுக்கு முன்னராகவே புலிகளின்குரல் வானொலியின் அனைத்து ஆவணங்களும் தாயகத்தில் இருந்து இணையவழியூடாக பதிவேற்றம் செய்யப்பட்டு, மே மாதம் 15ம் திகதி தாயக்த்தில் இருந்த புலிகளின்குரல் நிறுவனம் அழிக்கப்படும் முன்னரே, புலம்பெயர் தேசத்திலிருந்து இணையத்தள வேலைத்திட்டங்களை மேற்கொண்டவரிடமே, புலிகளின்குரல் வானொலியின் ஒலிபரப்பை முன்னெடுத்துச்செல்லும் பணி புலிகளின்குரல் வானொலி பொறுப்பாளரான திரு தமிழன்பன் (ஜவாண்) அவர்களால் ஒப்படைக்கப்பட்டது.
அதற்கமைய, புலம்பெயர் தேசத்திலிருந்து, 2009 ஆம் ஆண்டு யூலை மாதம் 5ஆம் திகதி, கரும்புலிகள் நாள் அன்று மீண்டும் புலிகளின்குரல் வானொலி இணையத்தளத்தில் ஒலிக்கத் தொடங்கியது. ஒரு தனிநபர் அர்ப்பணிப்பில், தேசியப்பற்றுடன் இறுதிவரை புலிகளின்குரல் வனொலியில் பணிபுரிந்தோரை ஒன்று சேர்த்து புலிகளின்குரல் மீண்டும் ஒலிக்க ஆரம்பித்தது.

2009ல் இருந்து இன்று வரை புலம்பெயர் தேசத்து அனைத்து கட்டமைப்புக்களும் புலிகளின்குரல் வானொலியை தாங்கள் பொறுப்பேற்று தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதாக கூறி, சிறு நிதிப்பங்களிப்பு செய்ய ஆரம்பிப்பார்கள். ஆனால், ஒரு சில மாதக் காலப்பகுதியில், தாங்கள் சார்ந்த பரப்புரைகளுக்கு புலிகளின்குரல் வானொலியின் ஒலிபரப்பில் முக்கியத்துவம் வழங்கும்படி கேட்பார்கள். அவ்வாறான விண்ணப்பத்தை புலிகளின்குரல் நிர்வாகத்தினர் மறுப்பார்கள். அத்தருணம் தங்களின் சுய விருப்பு வெறுப்புக்களுக்காக, புலிகளின்குரல் வானொலி மீது அவதூறுகளை பரப்பி, நேர்காணல்களை வழங்கியவர்களுக்கு « இனி வரும் காலங்களில் புலிகளின்குரல் வானொலிக்கு எவ்வித ஒத்துழைப்புக்களையும் வழங்கவேண்டாம் » என அறிவிப்பார்கள்.

இதில் 2010ம் ஆண்டு மற்றும் 2011ம் ஆண்டில் தமிழகத்தில் தங்கியிருந்தவரும், தற்போது பிரான்சில் வாழ்பவருமான இளங்கோ என்பவர், முழுமையாகச் செயற்பட்டு, தமிழகத்தில் புலிகளின்குரல் வானொலிக்கு நேர்காணல்களை பெற்று தந்தவர்களை மிரட்டியதுடன், அவருடைய மிரட்டல்களுக்கு அடிபணிந்து செல்ல பணியாளர்கள் மறுத்தபோது, புலத்திலிருந்து சிலரை வைத்து தமிழக தலைவர்களுக்கு தவறான தகவல்களை வழங்கி, குறிப்பாக காசி ஆனந்தன் போன்றவர்களை புலிகளின்குரலுக்கு ஏதிராகத் திருப்பியிருந்தமை இங்கு குறிப்பிடத் தக்கது.

கடந்த காலங்களில், புலம்பெயர் தேசத்தில் வெளியிடப்பட்ட குழப்பகரமான அறிக்கைகளை புலிகளின்குரல் வானொலியூடாக வெளியிட்டு, தாங்கள் தேசியத்தோடு பயணிப்பதாக மக்களுக்கு காட்டிக்கொள்ள முற்பட்டவர்களின் சதி திட்டத்திற்கு புலிகளின்குரல் நிறுவனம் அடி பணிய மறுத்தபோது, இவர்கள் புதிது புதிதாக வானொலிகளை உருவாக்க முயற்சித்தமையும், புலிகளின்குரல் வானொலியில் பணி செய்தவர்களை பண ஆசை காட்டி, அவர்களை தாங்கள் உருவாக்கும் இணையத்தளங்கள் மற்றும் வானொலிகளுக்கு பணியாற்ற வருமாறு கேட்கப்பட்ட விடயங்களும் நடந்த வண்ணமே இருந்தமையும் இங்கு குறிப்பிட வேண்டிய காலத்தில் தற்போது உள்ளோம்.

2009ம் ஆண்டு மாவீரர் நாள் உரையினை புலிகளின்குரல் வானொலியூடாக அனைத்து புலம்பெயர்தேச மண்டபங்களிலும் ஒலிக்கவைத்த அனைத்துலகத் தொடர்பகம், அதைத் தொடர்ந்து வந்த காலங்களில் ஒவ்வொரு கட்டமைப்புக்களாக தங்களுக்கு விரும்பிய வண்ணம் மாவீரர் நாள் அறிக்கைகளை வெளியிட்ட போது, புலிகளின்குரல் வானொலி அந்த அறிக்கைகளை ஒலிபரப்ப மறுத்தமையும், இதனால் புலிகளின்குரல் வானொலியின் நடத்துனர் மீது உண்மைக்கு புரணான செய்திகளை இணையத்தளத்திலும், மற்றும் தங்களின் ஊதுகுழல் இணையத்தளங்களில் பரப்பியதுடன், புலிகளின்குரல் வானொலிக்கு புலம்பெயர் தேசத்தில் நடைபெறும் எழுச்சி நிகழ்வுகளில் பதிவுகளை செய்வதற்கு அனைத்துலகத் தொடர்பகம் தடை விதித்திருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

2010ம் ஆண்டு, மற்றும் 2011ம் ஆண்டுகளில் தலைமைச் செயலகம் வெளியிட்ட அறிக்கையினை புலிகளின்குரல் வானொலி இணைத்திருந்தது. இவ் அறிக்கைகள் புலிகளின்குரல் வானொலியூடாக ஒலிபரப்பப்பட்ட போது புலத்தில் உள்ள தமிழர் ஒருங்கிணைப்புக் குழுக்களுக்கும் (இரும்பொறை) தலைமைச் செயலக நிர்வாகிகளுக்கும் இடையில் நடபெற்ற கருத்து மோதல்களினாலும், தலைமை மோதல்களினாலும், நிதி மோசடிகளால் எற்பட்ட பிளவுகளினாலும், இவர்கள் புலிகளின்குரல் வானொலி மீது பொய்ப் பிரச்சாரங்களை கட்டவிழ்த்து விட்டிருந்தார்கள்.
இப்படியான பொய்ப் பிரச்சாரங்களை இவர்கள் செய்தபோதும், புலிகளின்குரல் வானொலி தனது ஒலிபரப்பில் எந்த குழப்பமும் இன்றி தடைகளை தகர்த்த வண்ணம் தொடர்ந்தும் முன்னேறிய படியே வளர்ந்து கொண்டிருந்ததையும், தாயகம் நோக்கிச் சிற்றலையூடாக தனது ஒலிபரப்புகளைக் கொண்டு சென்றதையும் தாங்கள் அறிவீர்கள்.

2012ம் ஆண்டு மற்றும் 2013ம் ஆண்டில் அனைத்துலகத் பொறுப்பாளராகப் பொறுப்பேற்ற திரு கோகுலன் அவர்கள், அனைத்துக் கட்டமைப்புக்களையும் ஒன்றிணைத்து செயற்படப் போவதாகக் கூறிப் புலிகளின்குரல்வானொலியையும் இணைத்து அதற்கான செலவுகளையும் பொறுப்பேற்று செய்வதாக வாக்குறுதிகள் தந்திருந்தபோதும், புலிகளின்குரல் வானொலியால் எவ்வித வருமானமும் பெற முடியாது என்ற நிலையில் (புலிகளின்குரல் வானொலியில் வர்த்தக விளம்பரங்கள் இணைக்கப்படுவதில்லை), இவர் தந்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் இழுத்தடித்து வந்தமையும், சம நேரத்தில் இணையத்தளத்தில் ஒளிபரப்புவதற்கு ரிரிஎன் என்ற இணையத்தள தொலைக்காட்சிக்கு இவர்கள் பெரும் தொகைப் பணத்தை வாரி இணைத்து அத் தொலைக்காட்சியை ஆரம்பித்தார்கள்,

அவர்கள் ஆரம்பித்த இணையத் தொலைக்காட்சி பெட்டியில் கூட அனைத்து பிற வானொலிகளையும் இணைத்தபோதும், தேசிய வானொலியான புலிகளின்குரல் வானொலியை ஒரம்கட்டி இணைக்க மறுத்து அதற்கான காரணமாக புலிகளின்குரல் வானொலி தங்களின் அறிக்கைகளை ஒலிபரப்பில் இணைக்க மறுப்பதே என்றும் சொன்னார்கள்.

2013ம் ஆண்டு தமிழகத்தில் எமது இணைப்பாளர்கள் ஊடாக நாம் பெற்று வந்த நேர்காணல்கள் மற்றும் நிகழ்சிகளை ஒரே கட்டமைப்பின் கிழ் கொண்டுவந்து « ஊடக ஒழுங்கமைப்பு » என்ற பெயரில் எமது இணைப்பாளர்களை நிறுத்தி, எமக்குரிய நேர்காணல்களை, தாங்களே ஒருவரை இணைத்து பெற்று தருவதாகப் பேர்லின் சங்கர் அவர்களும் கோகுலன் அவர்களும் கூறினார்கள்.

அதே நேரத்தில், நேர்காணல்களை ஒலிப்பதிவு செய்வதற்கான கருவிகளுக்கான செலவுகளை அங்கு அனுப்புமாறு கூறினார்கள். அதற்கமைய அவர்களுக்கு புலிகளின்குரல் நிறுவனத்தால், ஒலிப்பதிவு செய்வதற்குரிய கருவிகளைப் பெற்றுக்கொள்ளப் பணம் அனுப்பி வைக்கப்பட்டது.

தமிழகத்தில் வாழும் திரு கண்ணன் என்பவருக்கு பணம் அனுப்பி வைக்கப்பட்டு, புலிகளின்குரல் வானொலிக்குரிய இணைப்பாளராக திரு கண்ணன் அவர்கள் இணைக்கப்பட்ட போதும், எமக்கான ஒலிப்பதிவுகள் மற்றும் நேர்காணல்கள் 2014ம் ஆண்டு மாவீரர் நாள் வாரத்தில் கிடைக்கப்பெறாததால் நாம் மீண்டும் அனைத்துலகத் தொடர்பகப் பொறுப்பாளர் போன்றவர்களைத் தொடர்பு கொண்டபோது, அவர்களிடம் இருந்து எவ்வித பதில்களும் கிடைக்கப் பெறவில்லை.

தமிழகத்தில் உள்ள தலைவர்களிடம் புலிகளின்குரல் வானொலிக்கு என நேர்காணல்கள் பெறப்பட்டதாக அறிந்தபோது, மீண்டும் திரு கண்ணன் அவர்களிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது, கண்ணன் அவர்கள் கூறிய பதில், நேர்காணல்கள் பெறப்பட்டன. ஆனால் திரு கோகுலன் அவர்களால் அந் நேர்காணல்கள் புலிகளின்குரல் நிறுவனத்திற்கு கொடுக்க வேண்டாம் எனக் கூறப்பட்டதாக அறிய முடிந்தது.

ஊடக ஒழுங்கமைப்பு என்ற முறையில் கடந்த காலங்களில் திரு தேவர் ஊடாகப் பெறப்பட்டு வந்த நேர்காணல்களுக்கு தங்களின் சாதுரியத்தனத்தால் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு, தடைக்கல்லை ஏற்படுத்த முயற்சி செய்தபோதும் புலிகளின்குரல் வானொலி 2014ம் ஆண்டு மாவீரர் நாள் சிறப்பு ஒலிபரப்பினை செய்து முடித்திருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

ஒவ்வொரு தடைகளையும்,மாவீரர் துணைகொண்டு புலிகளின்குரல் வானொலி தகர்த்த போதும் இவர்களின் துரோகச் செயற்பாடுகளும், மறு முனையில் முழுவீச்சுடன் நடைபெற்றுக் கொண்டிருந்தமையும் நாம் அறிந்தோம்.

புலிகளின்குரல் வானொலியின் ஒலிபரப்புக்களுக்குரிய சேர்வர், மற்றும் பாடல்கள் சேர்வர், தொலைபேசியில் வானொலியை கேட்க, கைத்தொலைபேசியில் மென்பொருள் உருவாக்கம், பிரான்சில் இணைய வழங்கி நிறுவனமான பிறி இணைய வழங்கியூடாக புலிகளின்குரல் ஒலிபரப்பு என அனைத்து செலவுகளும் தனி மனிதனால் செய்யப்பட்டு வந்தபோதும் புலத்தில் உள்ள எந்தவொரு கட்டமைப்புக்களும் புலிகளின்குரல் வானொலியைத் தாங்க வேண்டும், தாயகம் நோக்கி ஒலிக்க வைக்க வேண்டும் என்ற எண்ணமற்று வர்த்தக முறையில் எதாவது ஒன்று செய்து அதனூடாக எதாவது பெற முடியுமா என்ற எண்ணத்திலேயே இன்று புலத்தில் அனைத்து கட்டமைப்புகளும் செயற்படுவது என்பது வெளிப்படுகின்றது.

தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் அகவை 60 சிறப்பு வெளியீடாக வெளியிடப்பட்ட ஈழச்சூரியன் குறுவெட்டினை புலத்தில் வெளியீடு செய்வதற்கு நாம் மிகப்பெரிய பிரயத்தனம் செய்து அனைத்துலகத் தொடர்பக வெளியீட்டுப்பிரிவின் பொறுப்பாளராக உள்ள திரு சசி என்பவரை தொடர்பு கொண்டு இதனை வெளியிட்டு தருமாறு கேட்ட போது பல நிபந்தனைகள் உள்ளது எனக் கூறி இறுதியாக, 1000 பிரதிகள் தங்களிடம் தருமாறு கேட்டிருந்தார்கள்.
அதற்கமைய, பிரான்சில் உள்ள தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவிடம் 1000 பிரதிகள் 4 யூரோக்கள் அடிப்படையில் கையளிக்கப்பட்டு, 5யூரோக்களுக்கு விற்பனை செய்யுமாறு கேட்கப்பட்டிருந்தது.

ஈழச்சூரியன் குறுவெட்டின் உருவாக்கத்தில் எவ்வித பங்களிப்பு தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினர் செய்யாத போதும் மாவீரர்நாள் மண்டபத்தில் இக் குறுவெட்டினை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்காக புலிகளின்குரல் நிறுவனம் 1 யூரோக்களை இவர்களுக்கு வழங்கியிருந்தபோதும், சுவிசிலாந்தில் ஐநா ஐக்கிய நாடுகள் சபையின் முன்பாக முருகதாசன் திடலில் நடைபெற்ற எழுச்சி நிகழ்வுகளில் சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவால் ஈழச்சூரியன் இறுவெட்டு 10யூரோக்களுக்கு விற்கப்ப்பட்டது.

இப்படியான கீழத்தரமான செயற்பாடுகளால் புலிகளின்குரல் நிறுவனத்திற்கும், அனைத்துலக தொடர்பாகத்திற்கும் இடையில் கருத்து முரண்பாடுகள் உண்டாகியது.
புலிகளின்குரல் நிறுவனத்தின் கட்டமைப்புக்கள் பற்றிய போதுமான தெளிவின்மை, புலிகளின்குரல் வானொலி எவ்வாறு இது வரை காலமும் பயணித்தமை போன்ற வரலாற்று தெளிவுகள் இல்லாதவர்கள் புலம்பெயர் தேசத்தில் பணி செய்வதால் இவ் வானொலியின் புனிதத்திற்கு தொடர்ந்தும் குந்தகம் விளைவிக்கும் தேச விரோத செயற்பாடுகளில் ஈடுபடுவதை இனியும் புலிகளின்குரல் நிறுவனம் பொறுத்துக் கொள்ளப் போவதில்லை என்பதை இவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
தாயகத்தில் விடுதலைப்புலிகளின் கட்டமைப்பு செயற்பட்ட காலத்திலிருந்தே அனைத்துலகம் நோக்கி எமது தேசியத்தலைவர் பல வேலை திட்டங்களை நகர்த்தியிருந்தார். இதில் பரப்புரை என்பதும், எமக்கான ஊடகம் என்பதும் முக்கியமான ஒன்றாகச் செயற்பட்டது.

2009ம் ஆண்டுக்கு முன் தேசியத்தின் மீது முழுவீச்சுடன் செயற்பட்ட ஊடகங்கங்களை 2009ம் ஆண்டுக்கு பின்னர் தங்களை தாங்களே விடுதலைப்புலிகளின் பிரதிநிதி;கள் ஏன கூறிக்கொள்ளும் சிலரின் செயற்பாட்டால் அவ் ஊடகங்கள் நிர்முலமாக்கப்பட்டதை அறிவீர்கள்.

புலிகளின்குரல் இணையத்தளம் 2004ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் விடுதலைப்புலிகளின் உத்தியோகபூர்வ தளங்களாக
புலிகளின்குரல், தமிழீழ வானொலி, அருச்சுணா, விடுதலைப்புலிகள் பத்திரிகை, தமிழ் தேசிய தொலைக்காட்சி, நிதர்சனம், தமிழீழ விளையாட்டுத்துறை, தமிழீழ நிதித்துறை, சாமதான செயலகம் போன்ற தளங்கள் விரிந்து இருந்தன 2009ம் ஆண்டுக்கு பின்னர் அனைத்து தளங்களும் சேவையில் இருந்து ஒதுங்கி கொள்ள புலிகளின்குரல் வானொலி மற்றும் தமிழீழ வானொலியுடன் அருச்சுனா புகைப்படப்பிரிவும் இன்றுவரை இயக்கிய வண்ணமே உள்ளன.

2009ம் ஆண்டுக்கு முன் எமது போராட்டத்தின் வரலாற்றுக்களை புலத்திற்கு உடனுக்கு உடன் தெரியப்படுத்திய தளங்களான தமிழ்நாதம், புதினம், ஈழவிசன் போன்ற தளங்களை நிர்வாகித்தவர்கள் மிரட்டப்பட்டு அவர்களை இந்த தேசியத்தின் பாதையில் இருந்து ஒதுங்க வைத்தவர்கள் இன்று புதிய பாதையில் புதிய முறையில் புலிகளின்குரல் வானொலியின் புனிதத்தை கெடுக்கவும், எஞ்சியுள்ள ஒரே கட்டமைப்பான புலிகளின்குரல் வானொலி போன்றே அதே வடிவமைப்பில் அதே முறையில் தளத்தை வடிவமைத்து எமது மக்களையும், எமது தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களால் உருவாக்கப்பட்ட இந்த வானொலியையும் சிதைக்க இவர்கள் தீட்டம் தீட்டி உள்ளதை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டியுள்ளது.

www.puligalinkural.com  (G) என்ற இணைய முகவரியில் புதிய தளத்தை டென்மார்க்கில் உள்ள தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் அனைத்துலக வெளியீட்டு பிரிவின் பொறுப்பாளர் திரு சசியின் வங்கி அட்டையிலும், வாங்கப்பட்டு அவரது முகவரியிலும், அவரது தொலைபேசி இலக்கத்திலும் பதிவு செய்யப்பட்டு உள்ளதை நாம் அறிந்து அவருடன் தொடர்பு கொண்டபோது அவர் எமக்கு கூறிய பதில் நான் தான் செய்கின்றேன் என்பது.

நாம் அவரிடம், 11 வருடங்களாக இணையத்தில் ஒலிக்கும் புலிகளின்குரல் வானொலிக்கு புதிய இணைய முகவரியில் K என்ற எழுத்துருவுக்கு பதிலாக G என்ற எழுத்துருவுடன் பதிவு செய்யப்பட்டு புலிகளின்குரல்.கொம் இல் உள்ள படங்கள் மற்றும் விடயங்களை திருடி புதிய தளத்தை உருவாக்க முயற்சி செய்வது என்பது எதோ ஒரு குழப்பத்தை எம் மக்கள் மீது புலிகளின்குரல் என்ற பெயரில் திணிப்பதற்கும், வானொலியின் புனிதத்தை அழிப்பதற்கும் இவர்கள் முயற்சி செய்கின்றார்கள் என்பது மட்டும் நிஜப்படுகின்றது.

திரு சசி அவர்களும் சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் பொறுப்பாளர் திரு ரகுபதி அவர்களும் இணைந்து இத் தேச விரோத செயற்பாட்டினை முன்னெடுத்து வருகின்றமை என்பதும் எதற்காக என்பதையும் புதிய பெயரில் புலிகளின்குரல் வானொலிக்கு இணையாக புதிய வானொலியை இவர்கள் இருவரும் உருவாக்க முயற்சிக்கின்றார்கள் என்பதையும் எமது மக்கள் இனம் கண்டு கொள்ளுமாறு உரிமையுயோடு கூறிக் கொள்வதோடு எமது தேசியத்தலைவர் அவர்கள் கூறியது போல. ‘எதிரியையும் அவனது நோக்கத்தையும் இனம் கண்டு கொள்வது சுலபம். ஆனால் துரோகிகள் முகமூடி அணிந்து நடமாடுகிறார்கள். ஏதிரியின் கைப்பொம்மையாகச் செயற்படுகின்றார்கள். தமது சுய நலத்திற்காக சொந்த இனத்தையே காட்டிக்கொடுக்கத் தயங்காத இந்த ஆபத்தான சக்திகள் மீது எமது மக்கள் மிகவும் விழிப்பாக இருக்க வேண்டும்” என்ற தேசியத்தலைவரின் சிந்தனையுடன் புலிகளின் குரல் வானொலி தொடர்ந்தும் தனது ஒலிபரப்புக்களை காலத்தின் தேவையறிந்து இன்னும் முழுவீச்சுடன் முன்னெடுக்கும் என்பதையும் எமது இணையத்தள முகவரி மின்னஞ்சல் முகவரிகள் எவையும் மாற்றம் செய்யப்படவில்லை என்பதையும், புலிகளின்குரல் வானொலியின் இலட்சினையை பாவித்து முகப்புத்தகங்கள், மற்றும் போலி இணையத்தளங்களை உருவாக்குவதை முழுமையாக நிறுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

எத்தனையோ மாவீரார்களின் குருதியாலும், எமது மக்களின் உழைப்பாலும் 26 ஆண்டுகளை கடந்து ஒலித்து வரும் புலிகளின்குரல் வானொலியை செயலிழக்க செய்யும் முயற்சியினை நிறுத்தி எமது தேசிய வானொலி தாயகம் நோக்கி தனது ஒலிபரப்புக்களை கொண்டு செல்ல அனைவரும் இணைந்து செயற்படுவோம் என உறுதி கொள்வோம்.

நாம் யாரையும் ஏமாற்றவும் இல்லை, துரோகம் இழைக்கவும் இல்லை, ஆனால் எம்மை யாரும் ஏமாற்றினால் அல்லது துரோகம் இழைத்தால் நாம் பதிலடி கொடுக்கத் தயங்கமாட்டோம்” (மேதகு வே. பிரபாகரன்)
 

புலிகளின் குரல் நிறுவனம்

Comments Closed

%d bloggers like this: