நாட்டை புதிய அரசியல் யாப்பினூடாக அபிவிருத்தி செய்வதற்கு ஜனாதிபதியும் பிரதமரும் முயற்சிக்கின்றமைக்கு இந்த நாட்டில் இருக்கின்ற அனைத்து மக்களும் உதவி செய்ய வேண்டும் என உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜிர அபேயவர்த்தன தெரிவித்துள்ளார்.
வவுனியாவின் மன்னார் வீதியில் அரச சுற்றுலா விடுதி மற்றும் பதிவாளர் நாயகத் திணைக்களம் போன்றவற்றை நேற்று(21) திறந்து வைத்து அவர் உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கூறுகையில், அரச சுற்றுலா விடுதி மற்றும் காணிப்பதிவாளர் அலுவலகம் அமைப்பதற்கு 500 இலட்சம் ரூபா செலவு செய்யப்பட்டுள்ளது. யுத்தத்தின் பின்னர் வடக்கு மக்களின் வாழ்வை சீர்படுத்துவதிலும் அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்வதிலும் விசேட கவனம் செலுத்தி செயல்படுமாறு ஜனாதிபதியும் பிரதமரும் பணித்திருக்கும் நிலையில் நாங்கள் வடக்கு பிரதேசங்களில் கூடுதலான கவனம் செலுத்தி வருகின்றோம்.
உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் கீழ் 25 மாவட்ட செயலகங்கள் அதன் கீழ் 332 பிரதேச செயலகங்கள் அவ்வாறே 400 க்கு மேற்பட்ட பதிவாளர் திணைக்களங்கள் 14 ஆயிரத்திற்கு மேற்பட்ட கிராம அலுவலர் பிரிவுகள் 17 ஆயிரம் அபிவிருத்தி உத்தியோகத்தரின் பங்குகள் உடன் அமைச்சின் செயற்பாடுகள் விரிந்து பரந்து காணப்படுகிறது. அத்துடன் ஒரு மனிதன் பிறந்தது முதல் இறக்கும் வரையும் இந்த அமைச்சு சம்மந்தப்படுகிறது. அவ்வாறே தேசிய நிகழ்வுகளிலும் இந்த அமைச்சு சம்மந்தப்படுகிறது.
இந்த அமைச்சின் விசேட பணிகளில் ஒன்றாக ஜனாதிபதி மக்கள் நடமாடும் சேவை இருக்கின்றது. இதன் முதலாவது சேவையானது பொலன்னறுவை மாவட்டத்தில் செய்து முடிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து காலி மாவட்டத்தில் இச்சேவை செய்யப்பட்டு அதன் நிறைவு விழா ஜனவரி மாதம் நடைபெற இருக்கிறது. இதே போல் வடக்கு மாகாணத்தில் இருக்கின்ற வவுனியா, முல்லைத்தீவு, மன்னார், கிளிநொச்சி மாவட்டங்களை உள்ளடக்கியதாக ஜனாதிபதி நடமாடும் சேவை எதிர்வரும் சிங்கள புத்தாண்டுக்கு முன்னர் நடத்தப்பட வேண்டும் என ஜனாதிபதியும் பிரதமரும் உத்தரவிட்டுள்ளனர்.
பொலன்னறுவை மாவட்டத்தை எடுத்துக் கொண்டால் ஏழு பிரதேச செயலகப் பிரிவுகளை உள்ளடக்கிய 1 இலட்சத்து 80 ஆயிரம் மக்களை உள்ளடக்கிய ஒரு பிரதேசம் 54 திணைக்களங்களை ஒருங்கிணைத்து நடத்தப்பட்ட நடமாடும் சேவையில் 54 ஆயிரம் பிரச்சினைகள் இனங் காணப்பட்டது. எனது பிரதேசத்தில் மக்கள் தொகை பத்து இலட்சமாக இருக்கிறது 2 இலட்சத்து 50 ஆயிரம் பிரச்சினைகள் இனங் காணப்பட்டுள்ளது.
இப்பிரச்சினைகளை நான் உற்று நோக்கும் போது கள நிலை உத்தியோகத்தர்கள் செயற்படுவதில்லையா என்ற சந்தேகம் ஏற்படுகிறது. சில பிரதேசங்களில் ஒன்றாக வாழ்ந்து பிள்ளைகளை பெற்றுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் திருமணங்களை பதிவு செய்யாத நிலைமை காணப்படுகிறது. சில பிரதேசங்களில் திருமணப் பதிவுக்கு பணம் செலுத்தாத பட்சத்தில் அப்பணத்தை அரசாங்கமே செலுத்த முன்வந்துள்ளது. சில இடங்களில் 65 வயதுடைய நபர்கள் அடையாள அட்டை பெற்றுக் கொள்ளாமல் இருந்ததையும் காணக் கூடியதாக உள்ளது. கிராமப் புறங்களில் அனேகமானவர்கள் மோட்டார் சைக்கிளை செலுத்துகிறார்கள். அவர்களிடம் சாரதி அனுமதிப் பத்திரங்கள் இருப்பதில்லை. அவ்வாறானவர்களுக்குக் கூட இந்த நடமாடும் சேவையூடாக சாரதி அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்படும்.
காலி மாவட்டத்தில் இது வரையில் 22 ஆயிரம் பேர்களுக்கு அடையாள அட்டை பெற்றுக் கொடுத்துள்ளோம். காலி மாவட்டத்தில ஜனவரி 16 இல் செயற்றிட்டம் நிறைவு பெற்றதும் வவுனியா மாவட்டத்திற்கு வர இருக்கின்றோம். பொலன்னறுவை மாவட்டத்தில் சுமார் எட்டாயிரம் தேசிய அடையாள அட்டைகளை பெற்றுக் கொடுத்துள்ளோம். திருமணப் பதிவு செய்யாத சுமார் 800 குடம்பங்களுக்கு திருமணப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
காலி மாவட்டத்தில் தமிழ் மக்கள் 18 ஆயிரம் பேர் வசித்து வருகிறார்கள். அவர்களுடைய வாழ்க்கை காலத்தில் அவர்கள் அடையாள அட்டையை பெற்றிருக்கவில்லை. அவர்களின் தேவைகள் தோட்டத்தின் தலைவர் ஊடாகவே நிறைவேற்றப்பட்டிருக்கின்றது. இந்த நடைமுறை மாற்றப்படும்.
வவுனியா மாவட்டத்தில் சனத்தொகை 1 இலட்சத்து 90 ஆயிரம் பேர் தமிழ் மக்கள். 1 இலட்சத்து 52 ஆயிரம் பேர் சிங்கள மக்கள். 25 ஆயிரம் பேர் முஸ்லிம் மக்கள். 16 ஆயிரம் பேர் இங்கு நான்கு பிரதேச செயலகங்களையும் முக்கியப்படுத்தி நான்கு நடமாடும் சேவைகளை ஏற்பாடு செய்வோம்.
எனது மாவட்டத்தில் இவ்வாறான 20 நடமாடும் சேவைகளை நடத்தியுள்ளோம். ஒரு முறை ஒரு முதியவர் என்னிடம், “பொலிஸ் குறிப்பை பெறுவதற்கு 25 ரூபா தேவை. அதைக் கொண்டு வராத காரணத்தினால் எனது அடையாள அட்டையைப் பெற முடியவில்லை” என்றார்.
அதன் காரணமாக பொலிஸ் அதிகாரிகளுடன் கலந்துரையாடி பொலிஸ் குறிப்பை இலவசமாக பெற்றுக் கொடுத்திருந்தோம். வவுனியா பொலிஸ் அத்தியட்சகரிடமும் பொலிஸ் குறிப்பு பெறுவதற்கு மக்களிடம் பணம் பெற்றுக் கொள்ள வேண்டாமென்று ஒரு வேண்டுகோளை விடுத்திருந்தேன். அத்துடன் வவுனியாவில் கிராம உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படும் துண்டுப் பிரசுரங்கள் அனைத்து வீடுகளுக்கும் கிரம உத்தியோகத்தர்கள் ஊடாக அல்லது கள உத்தியோகத்தர்கள் ஊடாகச் சென்றடைய வேண்டும்.
காலி மாவட்டத்தில் 4 ஆயிரத்தி 200 கள உத்தியோகத்தர்கள் ஊடாக நாங்கள் இந்தப் பணியை முன்னெடுத்தோம். அதில் எங்களால் தீர்க்கப்பட்ட பிரச்சினைகள் மற்றும் தீர்க்க முடியாத பிரச்சினைகள் சம்மந்தமான அறிக்கை ஒன்றை அரசிற்கு வழங்கியிருந்தோம். ஆகவே கள உத்தியோகத்தர்கள் அனைவரும் எங்களுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். சுமார் 15 இலட்சம் அரச உத்தியோகத்தர் இந்த நாட்டில் இருந்தாலும் மக்கள் பிரச்சினைகள் தீரவில்லை. இதற்கு அரச உத்தியோகத்தர்கள் காரணம் இல்லை. இச்சேவைகளை ஒருங்கிணைக்கும் கொள்கை வகுப்பாளர்களே இதற்கு காரணம். இப்பிரச்சினைகளை தீர்க்க வடக்கு பிரதேச மக்கள் பிரதிநிதிகள் நடமாடும் சேவையை என்னிடம் கோரியிருந்தனர்.
வவுனியா மாவட்டம் உண்மையிலேயே வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடமாகும். 1930 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இங்கு ஒரு ஒழுங்கான மாவட்டச் செயலகம் இல்லை என்ற ஒரு குறை இருக்கிறது. வவுனியாவில் நடமாடும் சேவை ஆரம்பிக்கப்படுகின்ற போது மாவட்ட செயலகத்திற்கான அடிக் கல்லும் நாட்டப்படும். வட கிழக்கு மற்றும் தென் பகுதிகளில் மாவட்ட செயலகங்கள் மிகப் பெரிய அளவில் அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொண்டதால் வவுனியாவில் அபிவிருத்தி தாமதப்பட்டது.
1931 ஆம் அண்டு ஆரம்பிக்கப்பட்ட உள்நாட்டு அலுவல்கள் அமைச்சிற்கு கூட இன்று வரை பூரணப்படுத்தப்பட்ட கட்டிடத் தொகுதி இன்று வரை இல்லாதிருப்பது ஒரு குறைபாடே. ஜனவரி 2016 ஆம் ஆண்டு ஜனாதிபதியின் ஆசிர்வாதத்துடன் 15 மாடிக் கட்டிடம் ஒன்று கொழும்பில் கட்டப்பட்டு வருகிறது. 2018 ஆம் ஆண்டு கட்டிடம் நிறைவு பெறும். பல மாவட்டங்களில் மாவட்ட செயலகங்கள் ஒல்லாந்தர் மற்றும் ஆங்கிலேயரின் கோட்டை கட்டிடங்களில்தான் இயங்கி வருகிறது. இதை மாற்றுவதற்குத்தான் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சும் ஜனாதிபதி மற்றும் பிரதமரும் கவனம் செலுத்தி செயற்பட்டு வருகிறார்கள்.
பொது நிர்வாக அமைச்சானது 1970 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. உள்நாட்டு அலுவல்கள் அமைச்சில் தேவநாயகம் அமைச்சராக இருந்திருக்கிறார். மூவினத்தவர்களும் இந்த அமைச்சில் அமைச்சர்களாக இருந்துள்ளனர். 14 ஆயிரத்து 22 கிராம அலுவலர் பிரிவிலும் அலுவலகங்களை ஒரே நாளில் அமைக்க முயற்சிக்கின்றோம். அரச பணத்தில் அல்லது வேறு நிதியில் இதை அமைக்க முடியும். அந்த வகையில் இந்த நாட்டில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த முயற்சித்துக் கொண்டிருக்கின்றோம். ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் போது அதற்கு எதிராக எதிர்ப்புக்கள் ஏற்படுவது வழமையானது. ஒரு விடயத்தை எதிர்க்கும் போதோ அல்லது பகிஸ்கரிக்கும் போதோ எதிர்ப்பாளர்களுக்கு தெரியும் அவர்கள் அரசியல் ரீதியாக தோற்கப் போகிறார்கள் என்று. 1977 ஆம் ஆண்டு ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ரூபவாகினி ஒளிபரப்பு நிலையத்தை அறிமுகப்படுத்திய போது மக்கள் அதனையும் எதிர்த்தார்கள். நாங்கள் எதிர்ப்புக்களை புறந்தள்ளி பேதுறுதாலகால மலை உச்சியில் ஒளிபரப்புவதற்கான நிலையங்களை அமைத்தோம்.
அந்தக் காலத்தில் கொழும்புத் திட்டம் என்ற ஒன்றை அறிமுகப்படுத்தி அபிவிருத்தி வரைபு ஒன்றை கொண்டு வந்தோம். அதையும் மக்கள் எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்தார்கள். அதன் பின் நாங்கள் புதிய சட்ட ஏற்பாடுகளைக் கொண்டு வந்திருந்தோம். சுதந்திர வர்த்தக வலயங்களை உருவாக்கினோம். வவுனியா பிரதேசத்திற்கும் ஒரு சுதந்திர வர்த்தக வலயத்தை உருவாக்குவது பொருத்தமானது என நினைக்கிறேன். 1990 ஆம் ஆண்டு வர்த்தக கைத் தொழில் அமைச்சராக இருந்த ரணில் விக்கிரம சிங்கே சுதந்திர வர்த்தக வலயத்தை அறிமுகப்படுத்தினார். நீர்கொழும்பில் கூட மக்கள் எதிர்ப்புத் தெரிவித்தார்கள். ஆனால் நாங்கள் சுதந்திர வர்த்தக வலயங்களை அமைத்துக்கொண்டே சென்றோம்.
முன்பு வெளியே எதிர்ப்புக்களை வெளியிட்டவர்கள் பின்பு கைத் தொழில் பேட்டைகளின் உள்ளேயிருந்து எதிர்ப்புக்களை வெளியிட்டார்கள். அதே போல் தென் மாகாணத்தில் காலி பிரதேசத்தில் கொக்வல என்ற இடத்தில் அத்தகைய ஒரு சுதந்திர வர்த்தக வலயம் ஏற்படுத்தப்பட்டது. அதன் போதும் எதிர்ப்புக்களை எதிர்கொண்டோம். ஆனாலும் வர்த்தக வலயங்களை நிறுவினோம். அந்த காலத்தில் ரணில் விக்கிரமசிங்க கைத் தொழில் அமைச்சராக இருந்தார். 250 ஏக்கர் நிலப்பரப்பை கொண்ட வர்த்தக வலயத்தைப் பூரணப்படுத்த 20 ஆண்டுகள் சென்றது.
1994 ஆம் அண்டு எங்கள் அரசு தோல்வியை தழுவிய போதிலும் மீண்டும் நாங்கள் கைத்தொழில் பேட்டைகளை ஆரம்பித்து 7000 க்கும் மேற்பட்டவர்களுக்கு தொழில் முயற்சிகளை வழங்கியுள்ளோம். பிரத மந்திரி அமைச்சரவைக்கு ஒரு முக்கிய சட்ட வரைபை கொண்டு வந்துள்ளார். “பொருளாதார அபிவிருத்தி புதிய சட்டவாக்கம்” என்று அதற்குப் பெயரிடப்பட்டுள்ளது. அரசியல் ரீதியாக மாற்றுக் கருத்துள்ளவர்களுக்கு மிக நன்றாகத் தெரியும், இந்தப் பணி பூரணமடைந்தால் நாட்டில் அதிக தொழில் வாய்ப்புக்களை வழங்கக் கூடியதாக இருக்கும் என்பது. இதனால்தான் இப்போது குற்றச்சாட்டை முன்வைக்கின்றார்கள். மாவட்டங்களிலுள்ள அதிகாரங்களை ஒரு இடத்தில் வைத்துக் கொள்ள முயற்சிக்கின்றார்கள் என்ற குற்றச்சாட்டை முன்வைக்கின்றார்கள். எந்த ஒரு சட்ட ஏற்பாடும் அரசியல் யாப்பிற்கு முரண்பட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
1984 ஆம் ஆண்டில் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன மாகாணசபை சட்ட வரைபைக் கொண்டு வந்தார். அந்த நேரம் பிரபாகரனை இந்தியாவிற்கு கெலிகொப்டரில் அழைத்துச் சென்றார்கள். ரஜீவ் காந்தி இலங்கைக்கு வர முன்னர் அத்தகைய ஒரு உடன்பாடு எட்டப்பட்ட பின்னர்தான் இலங்கையில் வந்து அந்த ஒப்பந்தத்தை கைச்சாத்திட்டார்கள். அந்த நேரத்தில் நாசகார சக்திகள் எதிர்ப்புக்களை வெளியிட்டார்கள். ஆனால் அந்த உடன்படிக்கையை கைச்சாத்திட்டிருந்தோம். மாகாணசபையில் முன்னர் வரதராஜ பெருமாள் இருந்தார். அவரை நாங்கள் முதலமைச்சர் ஆக்கினோம். பிரபாகரன் யாழ்ப்பாணம் பளையில் இருந்து மக்களுக்கு உரையாற்றினார்.
தற்போதைய வடக்கு முதலமைச்சர் இந்த பிரதேசத்தை அபிவிருத்தி செய்வதற்கு கடுமையான முயற்சிகளைச் செய்கின்றார். உண்மையில் நாங்கள் இந்த சட்ட ஏற்பாடுகளைச் செய்வது உண்மையில் இந்த பிரதேசங்களை அபிவிருத்தி செய்வதற்காகத்தான். ஆனால் சிலர் அதிகாரத்தை ஒரு இடத்திற்கு எடுக்க முயற்சி செய்வதாக வதந்தியைப் பரப்புகிறார்கள். அத்துடன் இலங்கையை சிங்கப்ராபூக மாற்ற வேண்டும். மலேசியாவாக மாற்ற வேண்டும் என்று குறிப்பிடுகிறார்கள். அதிகம் கஷ்டப்படாமல் சிங்கப்பூரிலிருக்கும் அரச சட்ட ஏற்பாடுகளை இங்கு பாவனைக்குக் கொண்டு வந்தால் இலங்கையை சிங்கப்பூராக மாற்ற முடியும். அந்த நாட்டு சட்ட ஏற்பாடுகளில் மக்களுக்கு அநாவசியமான சுதந்திரங்களுக்கான சட்ட ஏற்பாடுகள் காணப்படுவதில்லை. மட்டுப்படுத்தப்பட்ட ஜனநாயக உரிமைகளைக் கொண்ட ஏற்பாடுகள்தான் வழங்கப்பட்டுள்ளது. அரசியல்வாதிகளுக்கு இரண்டு தெரிவுகள் தான் இருக்கின்றன. ஒன்று போலித்தனமாக கதைகளைப் பேசாதிருக்க வேண்டும் அல்லது அந்த நாட்டில் இருக்கும் அரசியல் யாப்பை பின்பற்றும் சூழ்நிலையை இங்கு உருவாக்க வேண்டும்.
இந்த நாட்டை புதிய அரசியல் யாப்பினூடாக அபிவிருத்தி செய்வதற்கு ஜனாதிபதியும் பிரதமரும் முயற்சிக்கின்றனர். இதற்கு இந்த நாட்டில் இருக்கின்ற அனைத்து மக்களும் உதவி செய்ய வேண்டும். அரச ஊழியர்கள் அரசாங்கத்தின் யாப்பின் பிரகாரம் பணிகளை முன்னெடுக்க வேண்டும். கடந்த அரசாங்கத்தின் கொள்கை முடிவிற்கு வந்துவிட்டது. சமகால அரசின் கொள்கையை முன்னெடுக்க வேண்டும். அரச உத்தியோகத்தவர்கள் என்பவர்கள் அரசாங்கத்தின் முக்கிய ஒரு அங்கமாகும். அத்துடன் அரச ஊழியர்களின் வாக்குகள் தொடர்பில் மிகக் கவனமாக முடிவுகளை எடுக்க வேண்டும். அரச ஊழியர்கள் வாக்களித்துவிட்டு எண்ணுகின்ற பணிகளையும் செய்கிறார்கள். அதனால்தான் கடந்த கால அரசின் கொள்கைகளை நிறைவு செய்து விட்டு இந்த அரசின் கொள்கைகளை சிறப்புடன் முன்கொண்டு செல்ல வேண்டும். எமது நாட்டிலிருந்து தான் உலக நாடுகளுக்கு பணம் அச்சடித்து வழங்கப்படுகிறது. இது பலருக்குத் தெரியாது. பியகம என்ற பிரதேசத்தில் அமைந்திருக்கும் நிறுவனத்தின் ஊடாகவே பணம் அச்சிடப்படுகிறது. இதை நிறுவியவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க. கடந்த 25 வருடங்களாக எமது நாட்டிலிருந்துதான் பணம் அச்சிட்டு உலக நாடுகளுக்கு வழங்கப்படுகிறது. அதே போல் களனி டயர் நிறுவனத்தை சியட் நிறுவனமாக மாற்றினோம். உண்மையில் அதை நாங்கள் விற்பனை செய்யவில்லை. புதிய தொழிநுட்பத்தை உள்ளே கொண்டு வந்தோம். இலங்கையில் 40 ஆயிரம் பேருந்துகள் இருக்கின்றன. அவைகளுக்குத் தேவையான டயர்கள் எமது நாட்டில் அப்போது இருக்கிறது.
நாட்டை புதிய அரசியல் யாப்பினூடாக அபிவிருத்தி செய்வதற்கு ஜனாதிபதியும் பிரதமரும் முயற்சிக்கின்றனர். இதற்கு இந்த நாட்டில் இருக்கின்ற அனைவரும் எமது அரசுக்கு ஒத்துழைப்பை வழங்க வேண்டும் எனத் தெரிவித்தார்.