இலங்கை அரசுக்கு விலைபோய்விட்டதா உலகத் தமிழ் அமைப்புக்கள்?

Home » homepage » இலங்கை அரசுக்கு விலைபோய்விட்டதா உலகத் தமிழ் அமைப்புக்கள்?
இலங்கை அரசுக்கு விலைபோய்விட்டதா உலகத் தமிழ் அமைப்புக்கள்?

போர்க்குற்ற விசாரணைகளின்றி விடுதலைப்புலிகளின் போராளிகள் மட்டும் உள்நாட்டு நீதிமன்றத்தில் ஒருதலைப்பட்சமாக விசாரிக்கப்பட்டு தண்டிக்கப்படுவதையிட்டு புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் தமது எதிர்ப்புகளை வெளிப்படுத்தாது மௌனம் சாதிப்பது ஏன்?

சர்வதேச சுயாதீன விசாரணைகளை மேற்கொள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கு அழுத்தம் கொடுப்பதற்கு போராளி கண்ணதாசனுக்கான பொதுமன்னிப்பை மீறிய தீர்ப்பினை முன்னுதாரணப்படுத்தி புலம்பெயர் அமைப்புக்கள் ஐ.நாவை நோக்கிய தமது போராட்டங்களை மேற்கொண்டிருக்கலாம்.

மேலும் போராளி கண்ணதாசனுக்கு வழங்கப்பட்ட ஆயுள் தண்டனை என்பது விடுதலைப்புலிகள் மீது போர்க்குற்றங்களை வலிந்து சுமத்தும் நோக்கத்தை மையமாகக் கொண்டதே. எதிர்காலத்தில் தமிழர்கள் முன்னெடுக்கும் போராட்டங்களும், அனைத்துலக விசாரணைகளுக்கான கோரிக்கைகளும் வலுவிழந்து போவதற்குரிய காரணியாக போராளி கண்ணதாசனுக்கு வழங்கப்பட்ட ஆயுள் தண்டனை எனும் மிகக் கொடுமையான தீர்ப்பே அமையப்போகிறது என்பதே உண்மை.

இந்த விடையங்கள் சம்மந்தமாக புலம்பெயர் அமைப்புகள் அனைத்தும் குறிப்பாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் மற்றும் ஏனைய அமைப்புக்களான மக்களவை,பேரவைகள், ஒன்றியங்கள்,இளையோர் அமைப்புக்கள் போன்ற அனைத்து அமைப்புக்களும் இச் சம்பவத்தை கண்டித்து கவனத்திலெடுக்காது உரியமுறையில் தாம் செயற்படத் தவறிவிட்டார்கள் என்பது மிகவும் வேதனைக்குரிய விடையமே.

2009ம் ஆண்டு போர்முடிவின் பின்னர் கைதுசெய்யப்பபட்ட விடுதலைப்புலிகளின் போராளிகள் மட்டுமே சிறைகளில் தடுத்துவைக்கப்பட்டு புனர்வாழ்வு என்கிற பெயரில் தண்டனைகள் வழங்கப்பட்டு நீண்டகாலங்களின் பின்னர் விடுவிக்கப்பட்டார்கள்.

ஆனால் போரில் ஈடுபட்ட மறுதரப்பான இலங்கைப் படைகளுக்கெதிராக எந்தவித விசாரணைகளுமின்றி அவர்களை போர் வெற்றிபடைத்தவர்களாக கருதி தொடர்ந்தும் அவர்கள் கௌரவிக்கப்பட்டு வருகிறார்கள்.

சர்வதேச மட்டங்களில் சிறிலங்கா அரசாங்கமும் அதன் அரசபடையினரும்
இறுதிப்போரில் மேற்கொண்ட பாரிய தமிழினப் படுகொலையை நேரடி சாட்சிகள் மூலமும்,ஆதாரங்கள் மூலமும் முன்வைத்தபோதும் அவற்றை வல்லரசு நாடுகள் தமது நலன்களுக்காக மட்டுமே பயன்படுத்திக்கொள்கின்றனர்.

அத்துடன் சிறிலங்கா அரசாங்கமானது இந்தியாவினதும்,மேற்குலகத்தினதும் நிகழ்ச்சி நிரல்களுக்குள் இருந்து எப்போதெல்லாம் தான் விலகிக்கொள்ள முற்படுகிறதோ அப்போதெல்லாம் தமிழர்களின் எழுச்சியான போராட்டங்களும் இறுதிப்போரின் நேரடி சாட்சியங்களின் வாக்குமூலங்களும் சிறிலங்கா அரசை மிரட்டுவதற்காக கையாளப்படுமே தவிர,தமிழர்களுக்கான நீதியையோ அன்றி நிரந்த அரசியற் தீர்வையோ பெற்றுத்தருவதற்கு ஒருபோதும் அவை பயன்படுத்தப்படுவதில்லை.

குறிப்பாக ஐக்கிய நாடுகள் சபையோ அல்லது மனித உரிமை அமைப்புக்கள் எவையுமே இதுவரை இதயசுத்தியுடன் தாம் செயற்பட்டதாக சுட்டிக்காட்டவும் முடியவில்லை.

அப்படிச் செயற்பட்டிருந்தால் போர் முடிந்து எட்டு ஆண்டுகளைக் கடந்தும் தமிழர்கள் வீதிகளில் தொடர்ந்தும் போராடிக்கொண்டிருக்கும் அவலமான சூழ்நிலைகள் ஏற்பட்டிருக்காது என்பதே மறுக்கப்படமுடியாத உண்மை.

இதனை சர்வதேச அரசியற்பரப்பிலுள்ள தமிழினத்தின் தேசியச் செயற்பாட்டாளர்கள் அனைவரும் தாமாக உணர்ந்து செயற்படத் தவறினால் எதிர்காலத்தில் அவர்களால் முன்னெடுக்கும் அனைத்துவகையான போராட்டங்களும் அர்த்தமற்ற போராட்டங்களாக பலராலும் கணிக்கப்பட்டு அவை நகைப்பிற்கிடமானதாகவே நோக்கப்படும் என்பதுமட்டும் உண்மை.

விசாலகன்
ஜனநாயகப் போராளிகள்

Comments Closed

%d bloggers like this: