இலங்கை தமிழ்

வடக்கில் குவிக்கப்படும் இராணுவம்.

வடக்கில் காணப்படும் அதிகளவிலான இராணுவ பிரசன்னம் தொடர்பில் தமிழர் தரப்பு தொடர்ச்சியாக எதிர்ப்புக்களை வெளியிட்டு வரும் நிலையில் இராணுவ பிரசன்னத்தை தொடர்ந்தும் வைத்திருப்பதற்கான செய்பாடுகள் முன்னெடுக்க படுகின்றனவோ என்கின்ற ஐயப்பாடு தமிழ் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

தென்பகுதியில் இவ்வாறான வன்முறைச் சம்பவங்கள் இடம்பெறுகின்ற நிலையில் அதனை கட்டுப்படுத்த பொலிஸார் பயன்படுத்தப்படுகின்ற போதிலும், யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் வன்முறைச் சம்பவங்களை கட்டுப்படுத்த மாத்திரம் இராணுவத்தின் உதவிகள் கோரப்படுகின்றமை தொடர்பிலும் தமிழ் மக்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

இதன் ஒரு கட்டமாக வடமாகாணத்தில் அமைந்துள்ள இராணுவ முகாம்களை அண்மித்த பகுதிகளின் பாதுகாப்பு இராணுவத்தினர் வசமே காணப்படுகின்ற அதேவேளை, ஏனைய பிரதேசங்களில் பாதுகாப்பு கடமைகளில்   பொலிஸாருக்கு மேலதிகமாக இராணுவத்தையும் விசேட அதிரடிப்படையினரையும் அவ்வப்போது அவதானிக்க கூடியதாக உள்ளது.

யுத்ததிற்கு முன்னர் பல்வேறு கட்டுக்கோப்புடனர் காணப்பட்ட வடக்கு தமிழ் மக்கள் யுத்தம் நிறைவடைந்த பின்னர் எந்தவொரு கட்டுப்பாடுகளும் உரிய வழிநடத்தல்களும் இன்றி திசை மாறி செல்லும் படகு போன்று திக்கு திசைதெரியாது பயணித்து வருகின்றனர்.

இவ்வாறான தமிழ் மக்களின் கலை கலாச்சார பண்பாடுகள் வாழ்க்கை முறையை அழிக்கும் வகையில் வடபகுதியை இலக்கு வைத்து போதைப் பொருள் கடத்தல்கள், விபரச்சார நிலையங்கள் சட்டவிரோதமாக முன்னெடுக்கப்படுகின்ற அதேவேளை மறுபுறம் வாள்வெட்டு மற்றும் தாக்குதல் குழுக்களின் நடமாட்டங்கள் ஒட்டுமொத்தமான வடபகுதியின் அமைதியை சீர்குலைத்துள்ளது.
இவ்வாறான ஒரு சூழலிலேயே ஆவா குழுவின் நடமாட்டம் யாழ்ப்பாணத்தில் அதிகரித்திருந்த நிலையில் அதனை கட்டுப்படுத்த விசேட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
எனினும் ஆவா குழுவின் அடாவடி தனங்கள் குறைவடைந்திருந்த நிலையில் கடந்த 30 ஆம் திகதி கொக்குவில் நந்தாவில் அம்மன் கோயில் வீதியில் வைத்து மோட்டார் சைக்கிளில் வந்த 10 பேர் கொண்ட குழுவினரினால் இரண்டு பொலிஸார் மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. 
அதேநேரம் நல்லுார் பின் வீதியில் வைத்து யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.

இந்த நிலையில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்த பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர புலிப்பயங்கரவாதம் முழுமையாக அழிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டாலும் அதன் விதைகளில் சிலர் உயிர்ப்புடனேயே உள்ளதாக தெரிவித்திருக்கின்றார்.

வடக்கு கிழக்கில் பயங்கரவாத மனோ பாவம் தொடர்ந்தும் உள்ளதாகவும் பயங்கரவாதிகளால் பயன்படுத்தப்பட்ட இலட்சக் கணக்கான ஆயுதங்கள் முற்றுமுழுதாக கையளிக்கப்பட்டு, அழிக்கப்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்தநிலையில் இராணுவத்தில் இருந்து ஓடிப்போனவர்கள் தெற்கிலே எவ்வாறு பாரிய குற்றங்களைப் புரிந்தார்களோ, அதேபோல் யுத்தப் பயிற்சி பெற்றவர்கள் வடக்கிலும் அவ்வாறான குற்றச்செயல்களில் ஈடுபட வாய்ப்பிருப்பதாக கூறியுள்ள வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், இராணுவத்தை வெளியேற்ற வேண்டும் என்ற கொள்கையை கொண்டிருப்பதால், எது நடந்தாலும் இராணுவத்தின் ஒத்துழைப்பைக் கேட்கக் கூடாது என்று அர்த்தப்படாது எனவும் கூறியுள்ள விக்னேஸ்வரன் இராணுவத்தை வெளியேற்ற வேண்டும் என்ற கொள்கையைக் கொண்டிருக்கும் ஒருவர் எது நடந்தாலும் அவர்களுடைய ஒத்துழைப்பைக் கோரக்கூடாது என்று அதற்கு அர்த்தமில்லை. அப்படியானால் எது நடந்தாலும் நாங்கள் சும்மா இருக்க வேண்டும் என்று பொருள்படும். எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பொலிஸ்மா அதிபர் பூஜித ஐயசுந்தர நேற்றைய தினம் பதிலளிக்கும் வகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

முப்படையினரையும் களமிறக்கப்போவதாக பொலிஸ்மா அதிபர் கூறவில்லை என்று தெரிவித்த முதலமைச்சர், பொலிசாருக்கு உதவியாக விசேட அதிரடிப்படையினரையும் இராணுவத்தையும், மக்கள் விருப்பப்பட்டால் களமிறக்கவிருப்பதாக கூறியதாக குறிப்பிட்டார்.

வடக்கிலிருந்து இராணுவ வெளியேற்றத்தை தான் இப்பொழுதும் கோருவதாகவும், ஆனால் குற்றங்கள் நடைபெறும்போது அவற்றைத் தடுப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டியது சட்டம், ஒழுங்குக்கு பொறுப்பான அமைச்சரின் கடமையாகும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

நாட்டின் வடபகுதியில் மாத்திரமல்ல அனைத்து பிரதேசங்களிலும் குற்றச்செயல்கள் தினமும் அரங்கேறிய வண்ணமே இருக்கின்றது. எனினும் வடபகுதியை பொறுத்தவரையில் குற்றச்செயல்களுக்கு அரசாங்கம் பாதுகாப்பு தரப்புமே காரணம் என்பது பொதுமக்களின் குற்றச்சாட்டாக காணப்படுகின்றது.

எவ்வாறெனிலும் நாட்டில் நல்லிணக்கம், இராணுவத்தினர் வசமுள்ள காணி விடுவிப்பு, அரசியல் கைதிகள் விடுவிப்பு ஆகியவற்றை மேற்கொள்வதாக வாக்குறுதி வழங்கி ஆட்சிக்கு வந்த மைத்திரி ரணில் நல்லாட்சி அரசாங்கம், தமது வாக்குறுதிகளில் மௌம் காத்து வருகின்றமை தமிழ் மக்களை சந்தேகத்திற்கு உள்ளாக்கியுள்ளது.