வடிவம்மாறிய எமது அரசியல் போராட்டத்திற்கு ஒத்துவராத எந்தவொரு புலம்பெயர் அமைப்புக்களும் புலிகளின்பெயரால் இயங்கமுடியாது-எல்லாளன்

Home » homepage » வடிவம்மாறிய எமது அரசியல் போராட்டத்திற்கு ஒத்துவராத எந்தவொரு புலம்பெயர் அமைப்புக்களும் புலிகளின்பெயரால் இயங்கமுடியாது-எல்லாளன்
வடிவம்மாறிய எமது அரசியல் போராட்டத்திற்கு ஒத்துவராத எந்தவொரு புலம்பெயர் அமைப்புக்களும் புலிகளின்பெயரால் இயங்கமுடியாது-எல்லாளன்

ஜனநாயகப் போராளிகளுடன் இதுவரை தொடர்பினை பேணாத புலம்பெயர் அமைப்புக்கள் யாவும் எதற்காக இனியும் புலத்தினில் இயங்கவேண்டும்..?

யுத்தம் முடிவுக்கு வந்தபின்னரான கடந்த எட்டுவருட காலங்களிலும் புலம்பெயர் தேசங்களில் புலிகளின் பெயரால் இயங்கிவருகின்ற எந்தவொரு அமைப்புக்களும் இதுவரை தாயகத்திலுள்ள போராளிகளின் அரசியல் கட்சியுடன் தாம் தொடர்பினை பேணவில்லை என்பதே நூற்றுக்கு நூறுவீதமான உண்மை.

ஜனநாயகப் போராளிகளின் தற்போதைய உயர்மட்ட தலைவர்கள் அனைவருடனும் நாம் தொடர்புகொண்டதன் அடிப்படையில் இந்த உண்மை நிலவரம் எமக்கு தெரியவந்துள்ளது.

அப்படியென்றால் கடந்த எட்டு வருடங்களாகவும் புலத்தினில் இயங்கிவருகின்ற அனைத்து அமைப்புக்களாலும் இற்றவரை நடாத்தப்பட்ட புலிகளின் மாவீரர் நாள் நிகழ்வுகள் உள்ளடங்கலான அனைத்து நிகழ்வுகளாலும் திரட்டப்பட்ட கோடிக்கணக்கான இலங்கை ரூபாய்களும் யாருடைய தேவைகளை பூர்திசெய்வதற்காக இவ் அமைப்புக்களால் செலவு செய்யப்பட்டு வந்தன? என்ற கேள்விக்கு புலத்திலுள்ள எந்தவொரு அமைப்புத்தன்னும் இதற்கான உரிய பதிலினை தம்மால் கூறமுடியுமா?

இவற்றில் குறிப்பாக புலம்பெயர் தேசங்களில் புலிகளின் பாணியை பிரதிபலிக்கின்ற முதன்மையான புலம்பெயர் அமைப்புக்களான “நாடுகடந்த தமிழீழ அரசு”,TCCஎனப்படும் “தமிழர் ஒருங்கிணைப்பு குழு”,BTFஎனப்படும் “பிரித்தானிய தமிழர் பேரவை”மற்றும் GTFஎனப்படும் “உலகத் தமிழர் பேரவை”உள்ளிட்ட இவ் அமைப்புக்கள் அனைத்தும் இன்றுவரை தாம் புலிகளுக்காக இயங்குவதாகவே புலம்பெயர் மக்களிடம் கூறி பணத்தினை திரட்டிவருகிறார்கள்.

உண்மையில் இவ் அமைப்புக்கள் தாம் கூறும் புலிகள் எங்கு தமது கட்டமைப்பை உருவாக்கி இயக்கிவருகிறார்கள்?

உண்மையை சொல்லப்போனால், தாயகத்தில் தம்மை போராளிகள் என்று பகிரங்கமாக இலங்கை அரசின் கட்டுப்பாட்டுக்குள் அரசியல் கட்சியாகப் பதிவுசெய்து இயங்கிவருகின்ற “ஜனநாயகப் போராளிகள்” தவிர்ந்த எந்தவொரு அமைப்புக்களும் புலிகளின் பெயரால் எங்கும் இல்லை என்பதே யாரும் மறுக்கமுடியாத உண்மை.

அப்படியானால் புலம்பெயர் அமைப்புக்கள் தாம் புலிகளுக்காக என்று புலத்து மக்களை ஏமாற்றி பெற்றுவரும் பலகோடி பணங்களும் இலங்கை அரசின் கைகளுக்குள்தான் மறைமுகமாக சென்றுகொண்டிருக்கின்றதென்பதே உண்மை.

ஏனென்றால்,வெறுமனே புலிகளுக்காக என்று தம்மை மேடையேற்றும் இவ் புலம்பெயர் அமைப்புக்களால், இதுவரை சேர்க்கப்பட்ட ஒரு ரூபாய்தன்னும் தாயகத்தில் ஜனநாயகப் போராளிகளாக இயங்கிவரும் புலிகளின் அரசியல் பணிகளுக்காக செல்லவில்லை என்பதனை 100%வீதமும் எம்மால் உறுதிப்படுத்த முடியும்.

மேலும் புலிகளுக்காக என்று இவ் அமைப்புக்களால் இதுவரை திரட்டிய நிதிகள் அனைத்தும் புலிகளுக்காக பயன்படுத்தப்படாவிட்டால்,அது புலிகளுக்காக அல்ல மாறாக சிங்கங்களுக்காகத்தான் பயன்படுத்தப்பட்டு வருகின்றன என்பதே நிதர்சனமான உண்மை.

மேலும் உண்மையை சொல்லப்போனால் போர்முடிவின் பின்னர் புலிகளின் புலம்பெயர் முன்னைய கட்டமைப்புக்கள் அனைத்தும் இலங்கை சிங்கங்களின் புலனாய்வு கட்டமைப்பின் இரும்புப் பிடிக்குள் தாம் அகப்பட்டு,விரும்பியோ அல்லது விரும்பாமலோதன்னும் சிங்கங்களின் நிகழ்ச்சி நிரல்களுக்கு ஏற்பவே இயங்கிவருகிறார்கள் என்பதை எமது புலம்பெயர் மக்களும்,தாயக மக்களும் இந்த உண்மை நிலையினை தாம் புரிந்துகொள்ள முற்படவேண்டும்.

எனவே தமிழ்த் தேசியத்தின் உண்மையான மீட்சிக்காக மேற்குறிப்பிட்ட புலம்பெயர் அமைப்புக்களில் ஏதேனும் ஒன்றுதன்னும் இதுவரை எமது ஜனநாயகப் போராளிகளுடன் கைகோர்கவில்லை என்பதை புரிந்துகொண்டு,புலிகளுக்காக என்று இந்த அமைப்புக்களால் திரட்டப்படும் நிதிகள் எவையும் புலிகளுக்கு போய்ச்சேரவில்லை என்தை எமது மக்கள்தாம் உணர்ந்து, எதிர்வரும் நாட்களில் ஜனநாயகப் போராளிகளால் தமக்கென்று அங்கீகரிக்கப்படும் புலம்பெயர் கட்டமைப்புக்களுக்கு மட்டும் எமது புலம்பெயர் மக்கள்தாம் பகிரங்கமான பங்களிப்புக்களை செலுத்தி எதிர்வரும் அரசியல் களத்தினை போராளிகளின் சார்பாக மாற்றியமைக்க தாம் முன்வரவேண்டும் என்பதே இன்றைய காலத்தின் தேவையாகும்.
நன்றி
எல்லாளன்

Comments Closed

%d bloggers like this: