உலகத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் (WTCC) ஏற்பாட்டில் பிரித்தானிய நாடாளுமன்ற அரண்மனையில் இடம்பெற்ற மாநாடு

‘உலக நியதிகளுக்கு முரணாகத் தமிழர்களின் தன்னாட்சி உரிமை மறுக்கப்படுகிறது!’ பிரித்தானிய நாடாளுமன்றில் உலகத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் மாநாட்டில் எழுந்த கண்டனக் குரல்கள்!

தமிழீழ தேசத்தின் தன்னாட்சி உரிமையைக் குற்றச்செயலாக்கும் சிறீலங்கா அரசியலமைப்பின் ஆறாம் திருத்தச் சட்டத்தை நீக்குவதற்கு அழுத்தம் கொடுக்குமாறு பிரித்தானிய அரசை வலியுறுத்தும் மாநாடு உலகத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் (WTCC) ஏற்பாட்டில் 28.02.2024 புதன்கிழமை பிரித்தானிய நாடாளுமன்ற அரண்மனையில் சிறப்பாக இடம்பெற்றது.

தொழிற்கட்சிக்கு ஆதரவான தமிழர்கள் (Tamils for Labour) அமைப்பின் உறுதுணையுடன், தொழிற்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டேம் சிபோன் மக்டொனா அம்மையாரின் அனுசரணையுடன் இடம்பெற்ற இந் நிகழ்விற்கு உலகத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் அரசியல் பிரிவைச் சேர்ந்த கலாநிதி A.R.சிறீஸ்கந்தராஜா தலைமை தாங்கினார்.

இம் மாநாட்டில் தொடக்க உரையை நாடாளுமன்ற உறுப்பினர் டேம் சிபோன் மக்டொனா அம்மையாரும், சிறப்புரையினை தொழிற்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் நிழல் நிதித்துறை அமைச்சருமான மாண்புமிகு ஜோன் மக்டொனல் அவர்களும், ஆதரவு உரையை ஆளும் பழமைவாதக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான டீன் ரசெல் அவர்களும் ஆற்றினார்கள்.

இம் மாநாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் டேம் சிபோன் மக்டொனா அம்மையார் உரையாற்றுகையில், தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அனைத்துலக குற்றமீறல்களுக்கு நீதியைப் பெற்றுத் தரும் கடப்பாடு பிரித்தானிய அரசுக்கு இருப்பதை சுட்டிக் காட்டியதோடு, தமிழர்களின் தன்னாட்சி உரிமைக்கு இடையூறாக விளங்கும் ஆறாம் திருத்தம் நீக்கப்படுவதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

இதன்போது சிறப்புரை ஆற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு ஜோன் மக்டொனல், ஆறாம் திருத்தம் நீக்கப்பட்டால் மட்டுமே தமிழர்கள் தமது அரசியல் அபிலாசைகளை சுதந்திரமாக வெளிப்படுத்தும் சூழல் ஏற்பட்டுத் தமது தன்னாட்சி உரிமையைத் தமிழர்கள் நிலைநாட்ட முடியும் என்றும் குறிப்பிட்டார்.

அத்தோடு தமிழர்களின் தன்னாட்சி உரிமையை சிறீலங்கா அரசாங்கம் மறுப்பது உலக நியதிகளுக்கு விரோதமானது என்பதை சுட்டிக் காட்டிய மாண்புமிகு ஜோன் மக்டொனல், தமிழீழ தாயகத்தில் தமிழர்களின் வழிப்பாட்டுத் தலங்களை ஆக்கிரமித்தல், போதைப் பொருள் பாவனை மற்றும் குற்றச் செயல்களை ஊக்குவித்தல் போன்ற நடவடிக்கைகளை சிறீலங்கா படைகள் மேற்கொள்வதையும் வன்மையாகக் கண்டித்தார்.

இவ்விடத்தில் ஆளும் பழமைவாதக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் டீன் ரசெல் அவர்கள் உரையாற்றுகையில், தமிழர்களின் உரிமைகளை சிறீலங்கா அரசாங்கம் நசுக்குவது எந்த விதத்திலும் ஏற்புடையது அல்ல என்பதைக் கோடிட்டுக் காட்டினார்.

இம் மாநாட்டில் உரையாற்றிய பிரெஞ்சு விரிவுரையாளர் கலாநிதி இனெஸ் ஹசன்-டக்லி, தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையில் வேற்றுமை காட்டும் சிறீலங்கா ஒரு இனநாயக நாடு என்று அழைக்கப்படும் தகுதியை மட்டும் கொண்டிருப்பதாகத் தெரிவித்தார்.

இவ்விடத்தில் பிரித்தானியாவில் பிறந்து வளர்ந்த மருத்துவபீட மாணவி செல்வி மூவாம்பிகை சதீஸ் அவர்கள் உரையாற்றுகையில், பிரித்தானியாவில் தான் அனுபவிக்கும் உரிமைகளையும், தாயகத்தில் எமது மக்களுக்கு உரிமைகள் மறுக்கப்பட்டிருப்பதையும் ஒப்பிட்டதோடு, தமிழ் மக்களின் உரிமைகளை அமைதிவழியில் வென்றெடுப்பதற்குக் கடந்த காலங்களில் வழங்கிய வாக்குறுதிகளைப் பிரித்தானிய அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இதன்போது உரையாற்றிய குர்திஷ் செயற்பாட்டாளரும், சட்டத்தரணியுமான ஹொஷ்வான் சதீக், தமிழ் மக்களுக்கு என்றும் குர்திஷ் மக்கள் உறுதுணை நிற்பார்கள் என்று உறுதியளித்ததோடு, ஈராக்கில் சுயாட்சி கொண்ட மாநிலமாக விளங்கும் தென்குர்திஸ்தான் தமக்கென்று தனியானதொரு இராணுவத்தையும், வெளியுறவுக் கொள்கையையும் கொண்டிருப்பது போன்று தமிழீழ மக்களுக்கு அவர்களைப் பாதுகாக்கக் கூடிய தமிழ் இராணுவத்தைக் கொண்ட சுயாட்சி மாநில அரசைப் பெறுவதன் மூலமே குறைந்த பட்சம் தனிநாட்டுக்கு அடுத்த படியாக அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ள முடியும் என்று ஆலோசனை வழங்கினார்.

இம்மாநாட்டில் உரையாற்றிய தென்சூடான் அரசியல் ஆய்வாளர் ஜஸ்ரின் மோராற், உறுதியோடு போராடியதன் விளைவாகவே தென்சூடான் விடுதலை பெற்றதாகவும், அது போன்று அரசியல் வழியில் ஒன்றுதிரண்டு போராடுவதன் மூலம் என்றோ ஒரு நாள் தமிழர்களும் தமது விடுதலையை வென்றெடுக்க முடியும் என்றும், இரவுக்கு முடிவாக நிச்சயம் விடியல் ஏற்படும் என்று தமிழர்கள் நம்பிக்கை கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்.

இந் நிகழ்வில் உலகத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் அரசியல் பிரிவைச் சேர்ந்த கலாநிதி A.R.சிறீஸ்கந்தராஜா உரையாற்றுகையில், அரசியல்-ஜனநாயக முறைகளைத் தழுவி அமைதிவழி நின்று தமிழீழ மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காகவே தேசத்தின் புதல்வி மருத்துவர் துவாரகா பிரபாகரன் அவர்கள் வெளிப்பட்டிருப்பதாக குறிப்பிட்டதோடு, அரசியல் வழியில் தமது உரிமைகளைத் தமிழீழ மக்கள் வென்றெடுப்பதற்கான திண்ணியமான அரசியல் வேலைத்திட்டங்கள் அடுத்த கட்டமாகப் பிரித்தானியாவிலும், ஏனைய நாடுகளிலும் தொடங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

இந் நிகழ்வில் தென்சூடான், சூடான் ஆகிய தேசங்களைச் சேர்ந்த தமிழீழ ஆதரவாளர்களோடு, ஈரானில் அடக்குமுறைக்கு ஆளாகியிருக்கும் அரபு சமூகத்தைச் சேர்ந்த பிரதிநிதிகளும், ஆங்கிலேய சமூகத்தைச் சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர்.

இவர்களோடு இந் நிகழ்வில் கலந்து கொண்ட மாடபாவித சுலோச்சன என்ற சிங்கள சகோதரர் கருத்துக் கூறுகையில், உண்மை தெரியாததன் காரணமாகவே பெரும்பாலான சிங்களவர்கள் தவறான பாதையில் செல்வதாகவும், எனினும் தன் போன்ற உண்மை தெரிந்த சிங்களவர்கள் தமிழர்களின் தன்னாட்சி உரிமையை ஏற்றுக் கொள்வதாகவும் தெரிவித்தார்.

இந் நிகழ்வில் பொதுமக்களோடு, பிரித்தானியாவின் ஆளும் கட்சிக்கு ஆதரவான தமிழ் அமைப்பு ஒன்றின் பிரமுகர் ஒருவரும், தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் செயற்பாட்டாளர்களும், தாயகத்தில் இயங்கும் அரசியல் கட்சியான ரெலோ இயக்கத்தின் பிரித்தானிய பொறுப்பாளரான சாம் சம்பந்தன் அவர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.